×

அண்ணா பல்கலையில் ஏ.எஸ்.எம்.இ நடத்தியது; பொறியியல் கல்லூரிகளின் முதல்வர்கள், தலைவர்களுக்கான ஒருநாள் கருத்தரங்கம்

சென்னை: அனைத்து பொறியியல் கல்லூரிகளின் முதல்வர்கள் மற்றும் தலைவர்களுக்கான ‘அடுத்த தலைமுறை பொறியாளர்களை மேம்படுத்துதல்’ என்ற கருத்தரங்கை சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் ஏ.எஸ்.எம்.இ நடத்தியது.பொறியியல் கல்விக்கான ஏ.எஸ்.எம்.இ – யின் (அமெரிக்கன் சொசைட்டி ஆப் மெக்கானிக்கல் இன்ஜினியர்ஸ்) முயற்சியின் ஒரு பகுதியாக, அண்ணா பல்கலைக்கழகம், ஏ.எஸ்.எம்.இ இந்தியா, இந்திய தொழில்துறை கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் ஆகியவற்றுடன் இணைந்து, நேற்று சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் ”அடுத்த தலைமுறை பொறியாளர்களை மேம்படுத்துதல்” என்ற ஒரு நாள் தொழில்நுட்ப கருத்தரங்கை நடத்தியது.

பல்வேறு தொழில் நுட்ப வல்லுநர்கள், அரசு உயர் அதிகாரிகள், கல்வியாளர்கள் பலரும் பங்கேற்ற கருத்தரங்கில், ஏ.எஸ்.எம்.இ (இந்தியாவிற்கான) தலைவர் மதுகர் ஷர்மா, ஏ.எஸ்.எம்.இ மூத்த திட்ட மேலாளர் ரமேஷ் சங்கர் புதாலே, அண்ணா பல்கலை துணைவேந்தர் வேல்ராஜ், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக இயக்குநர் இன்னெசன்ட் திவ்யா ஆகியோர் பேசினர். கல்வியாளர்கள் மற்றும் அனைத்து பொறியியல் கல்லூரிகளின் முதல்வர்கள், பொறியியல் துறைகளின் தலைவர் மற்றும் தமிழ்நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளின் வேலைவாய்ப்பு அதிகாரிகள் ஆகியோர் வந்திருந்தனர்.

அடுத்த 5-10 ஆண்டுகளில் முக்கிய பொறியாளர்களின் பங்கு எவ்வாறு குறிப்பிடத்தக்க அளவில் உருவாகும் என்பதை இந்த நிகழ்வில் ஆராயப் பட்டது. விவாதத்தில் பங்கேற்ற பொறியியலாளர்கள் உற்பத்தித்திறனுக்காக வடிவமைக்கப்பட்ட தயாரிப்புகளை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிப்பது பற்றியும் மற்றும் சிக்கன மற்றும் நிலையான தீர்வுகளை உருவாக்குவது பற்றியும் வலியுறுத்தி விவாதிக்கபட்டது. மேலும், வளர்ந்து வரும், மாற்றம் அடையும் வேலை விவரங்கள் மற்றும் அவற்றின் திறமைகள் – வாய்ப்பு, எதிர்பார்ப்பு மற்றும் முன்னோக்கி செல்லும் வழி பற்றியும் விவாதிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பேசிய, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக இயக்குநர் இன்னசன்ட் திவ்யா,
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்து பொறியியல் கல்லூரிகளில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பல திறன் சார்ந்த படிப்புகளை நடத்தி வருகிறது.அனுபவ அடிப்படையிலான திட்டக் கற்றல் உள்ளிட்ட பல துறை தொழில் சார்ந்த படிப்புகளை நாங்கள் வழங்குகிறோம். அண்ணா பல்கலைக்கழகம் தலைமையில் ‘நிரல் திருவிழா’ என்ற மாநில அளவிலான ஹேக்கத்தான் போட்டியையும் நடத்துகிறோம்.

தொழிற்சாலைகள் மற்றும் 38 மாவட்டங்களில் உள்ள பல்வேறு அரசாங்க துறைகளில் இருந்து ‘பிரச்சனை தொடர்பான தகவல் அறிக்கைகளை’ நாங்கள் சேகரித்துள்ளோம். இது மாணவர்கள் தீர்வு சார்ந்த அணுகுமுறையை மேற்கொள்வதை உறுதி செய்யும். இந்த ஹேக்கத்தானில் பங்கேற்கும் மாணவர்களுக்கு 12 கிரெடிட்களை வழங்க அண்ணா பல்கலைக்கழகம் ஒப்புக் கொண்டுள்ளது. ஆசிரியர்களும் மாணவர்களுக்குத் தெரிந்த விஷயங்களைக் காட்டிலும் தொழில் துறைகளில் என்ன விரும்புகிறார்கள் என்பதைப் பற்றி கற்பிப்பதையும் உறுதி செய்யப்பட வேண்டும்.

மேலும், தமிழ்நாடு மாநில அளவிலான வேலை வாய்ப்பை புதுப்பித்து, அனைத்து பொறியியல் கல்லூரிகளும் ஒற்றை சாளர நுழைவு முறையைப் போலவே ஒற்றை சாளர வேலைவாய்ப்பு பெறும் முறையாக நடத்த அண்ணா பல்கலைக்கழகம் முன்மொழிந்துள்ளது. இந்த ஒற்றை சாளர வேலை வாய்ப்பு திட்டம் அரசு தொழிற்வளர்ச்சி துறை, பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளுக்கு இடையே ஒரு கூட்டமைப்பாக இருக்கும். பிற வாய்ப்புகளை எதிர்பார்க்கும் மாணவர்களுக்கும் தொழில் நெறி வழிகாட்டுதல் வழங்கப்படும். மேலும் அரசு கல்லூரிகளில் இந்த தொழில் நெறி வழிகாட்டுதல்களை வழங்க பட்ஜெட் அனுமதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

The post அண்ணா பல்கலையில் ஏ.எஸ்.எம்.இ நடத்தியது; பொறியியல் கல்லூரிகளின் முதல்வர்கள், தலைவர்களுக்கான ஒருநாள் கருத்தரங்கம் appeared first on Dinakaran.

Tags : ASME ,Anna University ,CHENNAI ,American Society of Mechanical Engineers ,Education… ,Dinakaran ,
× RELATED பதிவாளர் நியமனம் தொடர்பாக அண்ணா...