×

மிக நீண்ட அழகிய கடற்கரை கொண்ட பழவேற்காட்டில் அடிப்படை வசதிகளை சுற்றுலாத்துறை ஏற்படுத்தி தரவேண்டும்: எம்பி, எம்எல்ஏவிடம் கோரிக்கை

பொன்னேரி: மிக நீண்ட அழகிய கடற்கரையைக் கொண்ட பொன்னேரி அடுத்த பழவேற்காட்டில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித்தர சுற்றுலாத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்.பி மற்றும் எம்எல்ஏவிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதியில் பழவேற்காடு கோட்டை குப்பம், தாங்கள், பெரும்பலம், கலங்கரை விளக்கம் என 4 ஊராட்சிகளில் சுமார் 40க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

பழவேற்காட்டில் மிக நீண்ட அழகிய கடற்கரை உள்ளது. இங்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கடற்கரையின் அழகை ரசிப்பதற்கு வருகின்றனர். விடுமுறை நாட்களிலும் விசேஷ தினங்களிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இங்கு கூடுகின்றனர். நீண்ட கடற்கரை அதை ஒட்டிய கலங்கரை விளக்கம், டச்சு கல்லறை, நிழல் கடிகாரம், 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித மகிமை மாதா திருத்தலம், முகத்துவாரம், இந்தியாவின் மிக பெரிய இரண்டாவது பழவேற்காடு ஏரி, பறவைகள் சரணாலயம் மற்றும் இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ ஆலயங்கள் என பழவேற்காடு முழுவதும் சுற்றுலா பயணிகளுக்கு விருந்து படைக்கும் பல்வேறு இடங்கள் உள்ளன. குறிப்பாக பழவேற்காடு கடற்கரைக்கு வரும் மக்களுக்கு கழிப்பறை வசதி இல்லை, உடைமாற்று அறை இல்லை, குளியலறை இல்லை கடற்கரையில் குளித்துவிட்டு அவர்கள் மீண்டும் வீடு செல்லும் வரை ஈர துணியோடு செல்ல வேண்டிய சூழல் உள்ளது.

இதையெல்லாம் கருத்தில் கொண்டு சுற்றுலாத்துறை நிழற்குடைகள் கழிப்பறைகள் உடைமாற்று அறைகள் அமைத்து கொடுத்து பொதுமக்களின் வசதிக்கு ஏற்ற இடமாக இது உருவாக்க வேண்டும் என நீண்ட காலமாக இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். தற்போது, திருவள்ளூர் காங்கிரஸ் எம்பி ஜெயக்குமார், பொன்னேரி தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் ஆகியோர் முயற்சியால் லைட் ஹவுஸ் பகுதியில் இருந்து முகத்துவாரத்திற்கு தூண்டில் வளைவுக்காக சாலை அமைக்கப்படுவதால் வருங்காலத்தில் கடற்கரைக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரிக்க கூடும் என கருதப்படுவதால் அடிப்படை வசதிகளை உடனடியாக அமைத்து தரவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post மிக நீண்ட அழகிய கடற்கரை கொண்ட பழவேற்காட்டில் அடிப்படை வசதிகளை சுற்றுலாத்துறை ஏற்படுத்தி தரவேண்டும்: எம்பி, எம்எல்ஏவிடம் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Tourism ,Palaverkat ,MLA ,Ponneri ,Palavekadu fort ,Palavekadu ,Tiruvallur district ,Dinakaran ,
× RELATED திமுக எம்எல்ஏ புகழேந்தி மறைவு...