×

லட்சக்கணக்கான பக்தர்கள் விடிய, விடிய கிரிவலம் * கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் * தொடர் விடுமுறையால் கூட்டம் அலைமோதியது திருவண்ணாமலையில் தை மாத பவுர்ணமியை முன்னிட்டு

திருவண்ணாமலை, ஜன.25: திருவண்ணாமலையில் தை மாத பவுர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபட்டனர். அண்ணாமலையார் கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலையில் தை மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் நேற்று இரவு 9.49 மணிக்கு தொடங்கி, இன்று இரவு 11.23 மணிக்கு நிறைவடைகிறது. அதையொட்டி, நேற்று மாலையில் இருந்தே பக்தர்கள் கிரிவலம் செல்ல தொடங்கினர். இரவு 9 மணிக்கு பிறகு கிரிவல பக்தர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்காக அதிகரித்தது. கிரிவலப்பாதை அமைந்துள்ள 14 கி.மீ. தூரமும் பக்தர்கள் வெள்ளமாக காட்சியளித்தது. கிரிவலப்பாதையில் அமைந்துள்ள அஷ்டலிங்க சன்னதிகள், அடி அண்ணாமலை திருக்கோயில், இடுக்குப் பிள்ளையார் கோயில்களை வழிபட்டபடி பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

இந்நிலையில், தை மாத பவுர்ணமியை முன்னிட்டு, அண்ணாமலையார் கோயிலில் நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு வழிபாடு நடந்தது. அதிகாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை நடை அடைப்பு இல்லாமல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். மேலும், பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு தரிசனம், அமர்வு தரிசனம் மற்றும் கட்டண தரிசனம் ஆகியவை நேற்றும், இன்றும் ரத்து செய்யப்பட்டுள்ளது. பொது தரிசனம் மட்டும் ராஜகோபுரம் வழியாக அனுமதிக்கப்படுகிறது. பக்தர்கள் கூட்டம் அதிகரித்திருப்பதால், தரிசன வரிசையில் சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்து தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
இன்று முதல் வரும் 28ம் ேததி வரை தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை அமைந்திருப்பதால், கிரிவல பக்தர்களின் வருகை வெகுவாக அதிகரித்துள்ளது. எனவே, அண்ணாமலையார் கோயில் வெளி பிரகாரம் வரை பக்தர்கள் தரிசன வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இன்றும் பக்தர்கள் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு, தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, தெலங்கானா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. அதைெயாட்டி, திருவண்ணாமலை நகரின் முக்கிய சாலைகளில் 9 தற்காலிக பஸ் நிலையங்கள் நேற்று இரவு முதல் செயல்பட்டன. திருவண்ணாமலை நகருக்குள் சுற்றுலா கார், வேன் மற்றும் கனரக வாகனங்கள் அனுமதிக்கவில்லை. மேலும், வேலூர் கன்டோன்மென்ட் மற்றும் விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்த வழித்தடங்களில் இயக்கப்பட்ட சிறப்பு ரயில்கள், வேலூர் மற்றும் விழுப்புரத்தில் இருந்து சென்னை பீச் ஸ்டேஷன் வரை சிறப்பு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளன. அதன்படி, நேற்று இரவு 9.50 மணிக்கு வேலூர் கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட பவுர்ணமி சிறப்பு ரயில், நள்ளிரவு 12.5 மணிக்கு திருவண்ணாமலை வந்தடைந்தது. மீண்டும், அதிகாலை 3.45 மணிக்கு திருவண்ணாமலையில் இருந்து வேலூர் புறப்பட்டது. அதேபோல், விழுப்புரத்தில் நேற்று இரவு 9 மணிக்கு புறப்பட்ட ரயில் இரவு 10.45 மணிக்கு திருவண்ணாமலை வந்தது. பின்னர், அதிகாலை 3.30 மணிக்கு திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டு விழுப்புரம் சென்றது.

The post லட்சக்கணக்கான பக்தர்கள் விடிய, விடிய கிரிவலம் * கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் * தொடர் விடுமுறையால் கூட்டம் அலைமோதியது திருவண்ணாமலையில் தை மாத பவுர்ணமியை முன்னிட்டு appeared first on Dinakaran.

Tags : Vidia ,Vidia Krivalam ,Tiruvannamalai ,Krivalam ,Tai ,Annamalaiyar ,Thiruvannamalai ,
× RELATED திருவண்ணாமலை கோயில் வழக்கை சிறப்பு...