×

வேதா இல்லத்தை விட பெரியது போயஸ் கார்டனில் ஜெயலலிதா வீட்டுக்கு எதிரே பிரமாண்ட பங்களாவில் குடியேறும் சசிகலா: கிரகப்பிரவேசத்தில் நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமே அழைப்பு

சென்னை: போயஸ் கார்டனில் மீண்டும் குடியேறும் வகையில் ஜெயலலிதா வீட்டுக்கு எதிரே சசிகலாவின் பிரமாண்ட பங்களா நேற்று கிரகப்பிரவேசம் செய்யப்பட்டது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா இல்லத்தில் வசித்து வந்தார். இந்த வீட்டில் ஜெயலலிதாவுடன் அவரது தோழி சசிகலாவும் 30 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வந்தார். 2016ம் ஆண்டு ஜெயலலிதா உடல் நிலை பாதிக்கப்பட்டு மறைந்த நிலையில், அந்த வீடு அரசுடமையாக மாற்றப்பட்டு நினைவு இல்லமாக தொடர்ந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெயலலிதாவின் அண்ணன் மகன், மகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் வேதா இல்லம் தீபா மற்றும் தீபக்கிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில், வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் 4 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்தார் சசிகலா. 2020ல் சசிகலா விடுதலையானது முதல் தீவிர அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. ஆனால் ஒவ்வொரு பேட்டியிலும் அதிமுகவை ஒருங்கிணைப்பேன் என தொடர்ந்து கூறி வருகிறார். பிரிந்து கிடக்கும் அதிமுகவை இணைப்பதே தனது நோக்கம் என்றும் கூறி வரும் சசிகலா, அதற்கான அரசியல் பணிகளையும் மேற்கொண்டு வருகிறார். இந்த சூழ்நிலையில், சிறையில் இருந்து வெளியில் வந்த சசிகலா தி.நகரில் தனது சகோதரி வீட்டில் வசித்து வந்தார். அண்மையில் நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட் பங்களாவுக்கு சசிகலா சென்றார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் 7 ஆண்டுகள் கழித்து கொடநாடு பங்களாவுக்கு சென்றது குறிப்பிடத்தக்கது. அங்கு ஜெயலலிதாவின் உருவ சிலையுடன் கூடிய நினைவிடத்துக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சசிகலா குடும்பத்தினர் மட்டுமே பங்கேற்றனர். சசிகலா சென்னை போயஸ் தோட்டத்தில் வேதா இல்லத்திற்கு எதிரில் மிகப் பெரிய அளவில் பிரமாண்ட பங்களா ஒன்றை 2020 முதல் கட்டி வந்தார். அப்போது அமலாக்கத்துறை வீடு முன்பு ஜப்தி செய்து நோட்டீஸ் ஒட்டியது. இதனால் போயஸ் இல்லத்தில் மீண்டும் குடியேறும் நிகழ்வு தடைபட்டது.

இதை தொடர்ந்து, பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு, சசிகலா தொடர்பான ரூ.1,520 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கி வைத்தது அமலாக்கத்துறை. இதையடுத்து, ரூ.480 கோடி அபராதத் தொகையை சசிகலா செலுத்தியுள்ளார். அதன்பின் சசிகலாவின் அத்தனை சொத்துகளும் விடுவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்தே சசிகலாவின் போயஸ் இல்லத்தின் கட்டுமானப் பணி விரைவாக நடைபெற்று முடிந்துள்ளது. இந்த பிரமாண்ட பங்களா, 24000 சதுர அடி கொண்ட வேதா இல்லத்தை விட பெரிதாக கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒரு தரை தளம் 2 மேல் தளங்கள் உள்ளது.

இந்த புதிய இல்லத்தில் ஒரே நேரத்தில் 10 கார்களை நிறுத்தும் வசதி உள்ளதாக கூறப்படுகிறது. பணிகள் முடிவடைந்த நிலையில், நேற்று காலை அந்த வீட்டில் கிரகப்பிரவேசம் நடைபெற்றது. நேற்று அதிகாலை கோபூஜை மற்றும் விநாயகர் வழிபாடு சசிகலா நடத்தினார். தொடர்ந்து இல்லத்தில் பால் காய்ச்சும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் சசிகலாவிற்கு நெருக்கமானவர்கள், உறவினர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. தற்போது வரை அரசியலில் அமைதி காத்து வந்த சசிகலா தனது தோழியான ஜெயலலிதா வசித்து வந்த போயஸ் தோட்டத்திலேயே இப்போது குடியேறுகிறார். அரசியலில் இனி அவர் வேகமெடுப்பார் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

The post வேதா இல்லத்தை விட பெரியது போயஸ் கார்டனில் ஜெயலலிதா வீட்டுக்கு எதிரே பிரமாண்ட பங்களாவில் குடியேறும் சசிகலா: கிரகப்பிரவேசத்தில் நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமே அழைப்பு appeared first on Dinakaran.

Tags : Veda house ,Sasikala ,Jayalalithaa ,Boise Gardens ,Grahakravesam ,CHENNAI ,Poise Garden ,Chief Minister ,Poise Estate, Chennai ,Jayalalitha ,Grahakpravesam ,
× RELATED அதிமுக தொண்டர்களை அழைக்கவும், அதிமுக...