×

அதிகாலை 4 மணிக்கே நடை திறப்பு வடபழனி முருகன் கோயிலில் தைப்பூச விழா சிறப்பு ஏற்பாடு

சென்னை: இன்று தைப்பூச விழாவை முன்னிட்டு, சென்னை வடபழனி முருகன் கோயிலில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் தை மாதம், பூச நட்சத்திரமும் பவுர்ணமி திதியும் கூடிய நாளில் முருகனுக்கு எடுக்கப்படும் விழா தைப்பூசம். அன்று தான் உலகம் தோன்றியதாக ஐதீகம். அத்தகைய சிறப்பு பெற்ற தைப்பூச திருவிழா, இன்று கொண்டாடப்பட உள்ளது. அந்த வகையில், வடபழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கோலாகலமாக நடைபெற உள்ளது. அதற்கான முன்னேற்பாடுகள் நேற்று தீவிரமாக நடந்தது. வழக்கமாக அதிகாலை 5 மணிக்கு திறக்கப்படும் நடை இன்று பக்தர்களுக்காக அதிகாலை 4 மணிக்கே திறக்கப்பட்டது.

4.30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி நடந்தது. காலை 5 மணி முதல் இரவு 10 மணிவரை, அபிஷேகம் நீங்கலாக பக்தர்கள் தொடர் தரிசனம் செய்யலாம். மதியம் 1 மணி முதல் மாலை 4.30 மணி வரை பக்தர்கள் கொண்டு வரும் பாலால் முருகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்பட உள்ளது. இரவு 8.30 மணிக்கு வெள்ளி மயில் வாகனத்தில், பழனி ஆண்டவர் நான்கு மாடவீதிகளை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க இருக்கிறார். தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் அதிகாலை முதல் இரவு வரை, வெண் பொங்கல், சர்க்கரை பொங்கல், புளியோதரை ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட உள்ளது.

சிறப்பு ஏற்பாடு: காவடி எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்துவோர், தரிசனம் செய்ய வரும் பக்தர்களில் முதியோர், கர்ப்பிணிகள், கைக்குழந்தையுடன் வருவோர், மேற்கு கோபுரம் வழியாக அனுமதிக்கப்படுவர். பால்குடம் எடுத்து வருவோர், பொது தரிசனத்திற்கு வருவோர், தெற்கு கோபுரம் வழியாக அனுமதிக்கப்படுவர். கூட்ட நெரிசலை தடுக்க ஏராளமான போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

The post அதிகாலை 4 மணிக்கே நடை திறப்பு வடபழனி முருகன் கோயிலில் தைப்பூச விழா சிறப்பு ஏற்பாடு appeared first on Dinakaran.

Tags : Thaipusa festival ,Vadapalani Murugan Temple ,CHENNAI ,Tai ,Poosa Nakshatra ,Full Moon Tithi ,Murugan ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...