×

சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிப்பு குண்டும் குழியுமான சாலைகளை புதுப்பிக்க ரூ.810 கோடியில் டெண்டர்: அமைச்சர் க

சோழிங்கநல்லூர்: சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து சாலைகளிலும் புதுப்பிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதற்காக ரூ. 810 கோடிக்கு டெண்டர் விடப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, சென்னை சேப்பாக்கம் காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தில், களப்பணிக்காக மேற்பார்வை பொறியாளர்களுக்கு ரூ.1 கோடியே 35 லட்சத்தில் புதிதாக வாங்கப்பட்ட 13 பொலிரோ வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பின்னர் நிருபர்களுக்கு அமைச்சர் கே.என்.நேரு அளித்த பேட்டி: கடந்த ஆண்டுகளை பொறுத்தவரை 4 கோடியே 20 லட்சம் மக்களுக்கு மட்டுமே குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் மேலும் 3 கோடி பேருக்கு குடிநீர் வழங்கும் பணிகள் நடந்து வருகிறது. நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் 2ம் கட்ட பணி இன்னும் ஒரு வாரத்தில் தொடங்கப்பட உள்ளது. கோயம்புத்தூரில் 158 எம்.எல்.டி தண்ணீர் சென்று கொண்டு இருக்கிறது, மதுரையில் 153 எம்.எல்.டி தண்ணீர் ஒரு மாதத்தில் தொடங்க இருக்கிறது. திருப்பூரில் 120 எம்.எல்.டி குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ராமநாதபுரத்தில் 4 ஆயிரம் கோடியில், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் 2வது கட்ட பணி நடந்து வருகிறது. 117க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

பொறியாளர்கள் விரைவாக சென்று இந்த பணிகளை தொடங்குவதற்கு புதிதாக வாகனங்கள் தற்போது கொடுக்கப்பட்டுள்ளது. கூடுதல் வாகனங்கள் இன்னும் சில நாட்களில் கொடுக்கப்பட உள்ளது. முதல்வர் வெளிநாடு சென்று வந்த பிறகு கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், மதுரை, திருப்பூர், கோயம்புத்தூரில் குடிநீர் திட்டங்களை மிகப்பெரிய அளவில் தொடங்கி வைக்கிறோம். திண்டுக்கல், புதுக்கோட்டை, நாமக்கல், பெரம்பலூர் மாவட்டங்களில் புதிதாக கூட்டு குடிநீர் திட்டம் அமைக்க முதல்வரிடம் கேட்டுள்ளோம். இதுகுறித்த அறிவிப்பு சட்டமன்ற கூட்டத் தொடரில் அதற்கான நிதி ஒதுக்கி தருவதாக கூறி இருக்கிறார். உடனடி தேவை இருக்கும் திட்டங்கள் முதலில் கொண்டுவர நடவடிகக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குடிநீர் வடிகால் வாரியத்தில் பணியாளர்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. விரைவில் பணியாளர்கள் எடுப்பதற்காக அறிவிப்பு வெளியாகும்.

சென்னையில் இப்போதுதான் மழை பெய்து வெள்ளம் வடிந்துள்ளது. அடுத்த ஆண்டு வரையிலான தண்ணீர் கூட இருப்பு இருக்கிறது. அதனால் தண்ணீர் பஞ்சம் வராது. காவிரி படுகையில் மட்டும்தான் இந்த ஆண்டு தண்ணீர் வருவது குறைவாக இருந்தது. அதுவும் வடகிழக்கு பருவ மழையால் நிலத்தடி நீர் பெருகி உள்ளது. அதனால் அதை வைத்து சமாளித்து கொள்ளலாம். சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து சாலைகளிலும் புதுப்பிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதற்காக 810 கோடிக்கு இன்று (நேற்று) மாநகராட்சி சார்பில் டெண்டர் விடப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் பாதாள சாக்கடை பணிகளும் தொடர்ந்து நடந்து வருகிறது.இவ்வாறு அவர் தெரிவித்தார். நிகழ்ச்சியில், நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் கார்த்திகேயன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் தட்சிணாமூர்த்தி, இணை மேலான்மை இயக்குநர் சரவணன் மற்றும் அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

The post சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிப்பு குண்டும் குழியுமான சாலைகளை புதுப்பிக்க ரூ.810 கோடியில் டெண்டர்: அமைச்சர் க appeared first on Dinakaran.

Tags : Chennai ,Minister ,K. Choshinganallur ,Chief Minister ,KN Nehru ,Tamil Nadu Municipal Administration ,Chennai Chepakkam Kamarajar Road ,
× RELATED போதைப்பொருள் வழக்கில் அதிமுக...