×

திருப்போரூர் புறவழிச்சாலையில் உயர் கோபுர மின் விளக்கு அமைக்க வேண்டும்: அறிவிப்பு பலகை வைக்கவும் வேண்டுகோள்

திருப்போரூர்: திருப்போரூர் புறவழிச்சாலையில் அறிவிப்பு பலகை, மின்விளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். திருப்போரூர் நகர பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், காலவாக்கத்தில் இருந்து ஆலத்தூர் வரை 4.5 கிமீ தூரத்திற்கு புறவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையில் மூன்று இடங்களில் கிராமச்சாலைகள் குறுக்கிடுகின்றன. குறிப்பாக, திருப்போரூர் சாரே ஹோம்ஸ் அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் திருப்போரூர் முருகன் கோயில் ஆகிய இடங்களுக்கு செல்லும் இரு இடங்களில் ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ளது.

கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து ஓஎம்ஆர் சாலைக்கு வரும் நெம்மேலி சாலை சந்திப்பில் எந்த அறிவிப்பு பலகையும் இல்லாததால் கோயிலுக்கு வரும் பக்தர்களும், திருப்போரூரில் உள்ள ஒன்றிய அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், மின் வாரிய அலுவலகம், கல்வித்துறை அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலகம் ஆகியவற்றுக்கு வரும் பொதுமக்களும் குழப்பத்துடன் கடந்து சென்று விடுகின்றனர். இதன் காரணமாக, நீண்ட தூரம் சுற்றி வர வேண்டிய நிலை உள்ளது. ஆகவே, நெடுஞ்சாலைத்துறை சார்பில் இந்த குறுக்கு சாலைகளில் தேவையான அறிவிப்பு பலகைகளை அமைக்க வேண்டும். உயர் கோபுர மின் விளக்குகளை அமைக்க வேண்டும். வேகமாக வரும் வாகனங்களை கட்டுப்படுத்தும் வகையில், சிக்னல்களை அமைக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், தண்டலம் கிராமத்தில் உள்ள குறுக்கு சாலைக்கும் ரவுண்டானா அமைக்க வேண்டும் என்றும் அக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post திருப்போரூர் புறவழிச்சாலையில் உயர் கோபுர மின் விளக்கு அமைக்க வேண்டும்: அறிவிப்பு பலகை வைக்கவும் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : Tiruporur ,Tirupporur ,Kalavakkam ,Alathur ,Dinakaran ,
× RELATED கார் மோதி கல்லூரி பேராசிரியர் பலி