×

சுதந்திரம் கிடைக்கும் வரை அகிம்சை வழியில் போராடினார்: காந்தியை பற்றி ஆளுநர் ரவி கூறியது முற்றிலும் தவறு; முன்னாள் டிஜிபி வால்டர் தேவாரம் கண்டனம்

சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் சில கருத்துகளை கூறினார். அவர் கூறிய சில கருத்துகளை எதிர்த்து, ஓய்வுபெற்ற டிஜிபி வால்டர் தேவாரம் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மகாத்மா காந்தி 1942க்கு பிறகு சுதந்திரத்துக்காக ஒன்றும் செய்யவில்லை. சுதந்திரம் பெற்று தந்தது சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் தேசிய ராணுவமும் தான் என்று கூறியுள்ளார். இதை பொறுக்க முடியவில்லை. நேரு, காந்தி, வல்லபாய் படேல், லால்பகதூர் சாஸ்திரி என அனைத்து சுதந்திர போராட்ட தியாகிகளும் அவர்களால் முடிந்தவரை போராடினார்கள். சுபாஷ் சந்திரபோசும் சுதந்திர போராட்ட வீரர்தான். ஆனால் அவர், ‘பேச்சுவார்த்தையினால் வெற்றி கிடைக்காது. தீவிர போராட்டத்தின் மூலம்தான் சுதந்திரம் கிடைக்கும்’ என போராடினார்.

அவர் மீது எனக்கும் மரியாதை இருக்கிறது. ஜப்பான் அமெரிக்கா, வியட்நாம், தாய்லாந்து, கம்போடியா, பர்மாவை வெற்றி பெற்று, அடுத்ததாக இந்தியாவை பிடிக்கும் என்று நினைத்தார்கள். ஜப்பான் விமானப்படை அதன்படி குண்டும் வீசியது. ஜப்பான் தாக்குதலில் இருந்து தப்பிக்க பிரிட்டிஷ்-இந்திய ராணுவம் வழியை தேர்வு செய்தது. மணிப்பூர் இம்பாலில் பெரிய சண்டை நடந்தது. பிரிட்டிஷ்-இந்திய ராணுவத்தில் இந்தியர்கள் அதிகம் இருந்தார்கள். அந்த சண்டையில் ஜப்பான் ராணுவம் இந்திய ராணுவ வீரர்களை பிடித்துவிடுகிறார்கள். கைதிகளாக வைத்திருந்தார்கள்.

அப்போது சுபாஷ் சந்திரபோஸ் வந்து, ஜப்பான் ராணுவத்திடம் அவர்களை கைதிகளாக வைக்காதீர்கள். அவர்கள் உங்களுக்கு ஆதரவாக, பிரிட்டிஷ் ராணுவத்தை எதிர்த்து போரிடுவார்கள் என்று கூறினார். அதன்படி, தேசிய ராணுவ வீரர்கள் என்ற பெயரில் அதில் நிறைய பேர் சேர்ந்து போராடினார்கள். 1942க்கு பிறகு நாகாலாந்து தலைநகர் கோஹிமாவிலும் சண்டை நடைபெற்றது. அதில் ஜப்பான் ராணுவத்தில் இருந்த தேசிய ராணுவ வீரர்களை, பிரிட்டிஷ்-இந்திய ராணுவம் தோற்கடித்தது. அதன் பின்னர் ஜப்பான் ராணுவம் முன்னேறவில்லை. இதுதான் இறுதி சண்டை. இன்றும் அதற்கு ஆதாரமாக தூண் அங்கு இருக்கிறது. 1944ல் இந்த போர் நிறைவு பெற்றது.

1945ல் ஹிரோஷிமா நாகசாகி குண்டு வீசப்பட்டது. இந்த சண்டையால் பிரிட்டிஷ் ராணுவம் நமக்கு சுதந்திரம் கொடுக்கவில்லை. 1945ம் ஆண்டுக்கு இடைபட்ட காலத்திலேயே பிரிட்டிஷ், இந்தியாவுக்கு விடுதலை வழங்க முடிவு செய்தது. இந்திய சுதந்திரத்துக்கு மகாத்மா காந்தி, அவரை சேர்ந்த லட்சக்கணக்கானோர் போராடி உயிரை கொடுத்தார்கள். அதில் சுபாஷ் சந்திரபோசும் அடங்குவார். அப்படிதான் சுதந்திரம் கிடைத்தது. ஆளுநர் சொல்வது போல, 1942க்கு பிறகு காந்தி போராடாமல் வீட்டுக்கு சென்றுவிட்டாரா அல்லது ஓய்வு பெற்றுவிட்டாரா அவர் சுதந்திரம் கிடைக்கும் வரை அகிம்சை வழியில் போராடிக் கொண்டுதான் இருந்தார். 1942ம் ஆண்டு என்று சொல்வது என்ன கணக்கு? எனவே ஆளுநர் கூறியது முற்றிலும் தவறு. அவர் எதற்காக இப்படி சொன்னார் என்பதற்கான காரணத்தை சொல்வது இப்போது சரியாக இருக்காது.

காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உள்ளிட்ட சுதந்திர போராட்ட தியாகிகள் ஹீரோக்கள் தான். என்னுடைய இந்த கருத்துக்கு எதிர்ப்பு வந்தாலும் அதனை சந்திக்க நான் தயாராக இருக்கிறேன். எனக்கும், ஆளுநருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆளுநர் ஆர்.என்.ரவி இதுபோன்ற கருத்துகளை பல சந்தர்ப்பங்களில் தெரிவித்ததாக கூறுகின்றனர். ஆனால் அவர் இதற்கு முன் என்ன கருத்துகளை கூறியுள்ளார் என்பது எனக்கு தெரியாது. எனக்கு சுதந்திர போராட்டம் குறித்த வரலாறு நன்றாக தெரியும். சுதந்திர போராட்டம் பற்றி கூறியதால், நான் அதற்கு விளக்கம் கொடுக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

The post சுதந்திரம் கிடைக்கும் வரை அகிம்சை வழியில் போராடினார்: காந்தியை பற்றி ஆளுநர் ரவி கூறியது முற்றிலும் தவறு; முன்னாள் டிஜிபி வால்டர் தேவாரம் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Governor ,Ravi ,Gandhi ,DGP ,Walter Devaram ,CHENNAI ,Tamil Nadu ,Governor RN ,Anna ,University ,Netaji Subhash Chandra Bose ,Dinakaran ,
× RELATED ஒரு காலத்தில் ஏழ்மையின் தாயகமாக...