×

தெற்கு நோக்கி செல்லும் அனைத்து ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து மட்டுமே இயக்கப்பட வேண்டும்: போக்குவரத்து துறை எச்சரிக்கை

சென்னை: தெற்கு நோக்கி செல்லும் அனைத்து ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து மட்டுமே இயக்கப்பட வேண்டும் என போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து போக்குவரத்து துறை ஆணையர் சண்முகசுந்தரம் வெளியிட்ட அறிக்கை: ஜன.24ம் தேதி (நேற்று) இரவு முதல் சென்னையிலிருந்து தெற்கு நோக்கி (கிழக்கு கடற்கரை சாலை மார்க்கம் நீங்கலாக) செல்லும் அனைத்து ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு நினைவு பேருந்து நிலையத்திலிருந்து மட்டுமே புறப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை மாநகருக்குள் பயணிகளை ஏற்றுவதோ, இறக்குவதோ அனுமதிக்கப்படாது. அதற்கு ஏற்றார்போல் ரெட் பஸ், அபி பஸ் உள்ளிட்ட ஆம்னி பேருந்துகளுக்கு பயணச்சீட்டு முன் பதிவு செய்யும் செயலிகளில் தக்க மாற்றங்களை செய்திவுடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனை மீறி பயணிகளுக்கு உரிய தகவலை வழங்காமல் அவர்களை தேவை இல்லாமல் சிரமத்திற்கு உள்ளாக்கும் ஆம்னி பேருந்துகளின் ஆபரேட்டர்கள் மீது மோட்டார் வாகன சட்டம் மற்றும் விதிகளின் படியும் மட்டுமல்லாமல் கிரிமினல் சட்டங்களின் படியும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது. கிழக்கு கடற்கரை சாலை மார்க்கமாக செல்லும் ஆம்னி பேருந்துகளும், சென்னையிலிருந்து வேலூர் உள்ளிட்ட மேற்கு மார்க்கமாக செல்லும் ஆம்னி பேருந்துகளும் சித்தூர், செங்குன்றம் வழியாக வடக்கு மார்க்கமாக செல்லும் ஆம்னி பேருந்துகளும் வழக்கம்போல் கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்திலிருந்து தொடர்ந்து இயங்குவதற்கு அனுமதிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கிளாம்பாக்கம்-தாம்பரம் கூடுதல் பேருந்துகள்: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து தாம்பரம் ரயில் நிலையத்திற்கு செல்லும் பொதுமக்களின் நலன் கருதி, தற்போது இயக்கப்பட்டு வரும் பேருந்துகளோடு கூடுதலாக தடம் எண் எம்-18ல் 6 பேருந்துகளை இடை நிறுத்தமில்லா பேருந்துகளாக 10 நிமிட இடைவெளியில் இன்று முதல் அதிகாலை 3 மணியில் இருந்து இரவு 10 மணி வரை தொடர்ந்து இயக்கப்படும் என்று மாநகர போக்குவரத்து கழகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* அடிப்படை வசதிகள் முழுமையான பின்பு தான் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில்
ஆம்னி பேருந்துகளை இயக்குவோம்: ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தகவல் சென்னை கோயம்பேட்டில் ஆம்னி பேருந்து சங்க தலைவர் அன்பழகன் நேற்று அளித்த பேட்டி: தினசரி சாதாரண நாட்களில் 850 ஆம்னி பேருந்துகளும், வார இறுதி நாட்களில் 1250 ஆம்னி பேருந்துகளும் மற்றும் விழா காலங்களில் பயணிகளின் தேவைக்கேற்றவாறு 1600 வரை ஆம்னி பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 144 ஆம்னி பேருந்துகள் மட்டுமே நிறுத்த முடியும். இந்நிலையில் ஒட்டுமொத்த ஆம்னி பேருந்துகளையும் கிளாம்பாக்கத்தில் இயக்க சாத்தியக்கூறுகள் இல்லை.

2 நாள் மட்டும் காலஅவகாசம் கொடுத்து சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர். ஆம்னி பேருந்துகளில் 30 முதல் 90 நாட்களுக்கு முன்னே முன்பதிவு செய்துள்ள பயணிகளின் பயணங்கள் இதனால் கேள்விக்குறியாகியுள்ளன. கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் 400 ஆம்னி பேருந்துகள் நிறுத்துவதற்கான வசதி உள்ளது. அதனால் அங்கிருந்து பேருந்துகளை அனுமதிக்க வேண்டும். கிளாம்பாக்கத்தில் முழுமையாக பணிகள் முடிந்த பிறகு அங்கிருந்து பேருந்துகளை இயக்குவோம். அதே நேரத்தில் அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுத்தால் நீதிமன்றத்தை நாட உள்ளோம்.

The post தெற்கு நோக்கி செல்லும் அனைத்து ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து மட்டுமே இயக்கப்பட வேண்டும்: போக்குவரத்து துறை எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Clambaugh ,Transport Department ,CHENNAI ,Omni ,Klambach ,Transport Commissioner ,Shanmugasundaram ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு...