×

உயர் சிறப்பு மருத்துவ படிப்புக்கும் ஜீரோ கட் ஆப்: தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் அறிவிப்பு

சென்னை: முதுநிலை நீட் படிப்புகளைத் தொடர்ந்து, நீட் உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கும் ஜீரோ கட் ஆப் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. காலியாக உள்ள மருத்துவ இடங்களை நிரப்புவதற்காக முதுகலை நீட் படிப்புகளுக்கு கட் ஆப் மதிப்பெண்கள், ஜீரோவாக குறைக்கப்பட்டது. தற்போது சூப்பர் ஸ்பெஷாலிட்டி எனப்படும் உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கும் ஜீரோ கட் ஆப் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் அறிவித்துள்ளது.

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு நீட் தகுதித் தேர்வை தேசிய தேர்வு முகமை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. நாடு முழுவதும் 12ம் வகுப்பு முடித்த மாணவர்கள் நீட் இளநிலை தேர்வில் தேர்ச்சி பெற்று அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படித்து வருகின்றனர். அதேபோல, முதுநிலை படிப்புகளான எம்.டி, எம்.எஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்பில் சேர, மருத்துவ மாணவர்கள் முதுநிலை நீட் தேர்வை எழுதுகின்றனர். உயர் சிறப்பு (சூப்பர் ஸ்பெஷாலிட்டி ) மருத்துவப் படிப்புகளுக்கும் தேர்வு நடைபெறுகிறது.

அதன்படி, 2023-24ம் கல்வியாண்டுக்கான உயர் சிறப்பு மருத்துவப் படிப்புக்கான தேர்வு கடந்த ஆண்டு, செப்டம்பர் 29,30 தேதிகளில் நடைபெற்றது. இத்தேர்வின் முடிவுகள் அக்டோபர் 15ம் தேதி வெளியானது. இந்தத் தேர்வை தேசியத் தேர்வு முகமை நடத்தி வருகிறது. கட் ஆப் குறைப்பு குறித்து தேசியத் தேர்வு முகமை கூறும்போது, ‘மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை, தேசிய மருத்துவ ஆணைய விதிமுறைகளின்படி முதுகலைப் படிப்பை முடித்து, நீட் உயர் சிறப்பு தேர்வை 2023-ல் எழுதி இருந்தால், அவர்கள் இந்த சிறப்புக் கலந்தாய்வில் கலந்துகொள்ளத் தகுதியானவர்கள்’’ என்று தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சுமார் 5 ஆயிரம், உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள் உள்ளன. இதில் 1000க்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்ப இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு ஓரிரு நாட்களில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படிப்புகளுக்கு ஆண்டுக் கட்டணமாக ரூ.1.5 கோடி முதல் ரூ.2.5 கோடி வரை தனியார் கல்லூரிகளில் வசூல் செய்யப்படுகிறது. இந்த முடிவுக்குக் கல்வியாளர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

The post உயர் சிறப்பு மருத்துவ படிப்புக்கும் ஜீரோ கட் ஆப்: தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : National Board of Medical Science Examinations ,CHENNAI ,Dinakaran ,
× RELATED இனிப்பில் மயக்க மருந்து கலந்து...