×

தொப்பூர் கணவாயில் கோர விபத்து கார்கள் மீது லாரி மோதி தீப்பிடித்ததில் 4 பேர் பலி: கரிக்கட்டையாக சடலங்கள் மீட்பு

நல்லம்பள்ளி: தொப்பூர் கணவாயில் கட்டுப்பாட்டை இழந்து ஓடிய நெல் மூட்டை லாரி, கார்கள் மற்றும் லாரிகள் மீது மோதி தீப்பிடித்து எரிந்தது. இதில் 4 பேர் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். தர்மபுரியிலிருந்து சேலத்தை நோக்கி நெல் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று நேற்று மாலை வந்தது. தொப்பூர் கணவாய் இரட்டைப்பாலத்தில் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய லாரி, முன்னால் சென்ற இரண்டு லாரிகள் மீது அடுத்தடுத்து மோதியது. அதில் ஒரு லாரி தடுப்புச்சுவரை உடைத்துக்கொண்டு பாலத்திலிருந்து 50 அடி பள்ளத்தில் கீழே விழுந்து நொறுங்கியது. மற்றொரு லாரி லேசான சேதத்துடன் முன்னால் சென்றுவிட்டது.

அப்போது தாறுமாறாக ஓடி விபத்தை ஏற்படுத்திய நெல் மூட்டை ஏற்றி வந்த லாரி தீப்பிடித்து, முன்னால் சென்ற 3 கார்கள் மீது மோதியது. இதில் தடுப்புச்சுவர் அருகே ஓரமாக கார்கள் ஒதுங்கியதால் அந்த கார்களை இடித்துக்கொண்டு நெல்மூட்டை லாரி நின்றது. லாரி கொளுந்துவிட்டு எரிந்ததால் கார்களிலும் தீப்பற்றி எரியத்தொடங்கியது. ஒருகாரில் இருந்தவர்கள் காயத்துடன் தப்பினர். 2 கார்கள் முற்றிலும் எரிந்து சாம்பலானது. தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர், தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஒரு காரில் தீயை அணைத்து அதிலிருந்தவர்களை மீட்டனர். காருக்குள் கரிக்கட்டையாகி இருந்த 3 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன.

தகவலறிந்த தர்மபுரி கலெக்டர் சாந்தி, டிஐஜி உமா, மாவட்ட எஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம், தாசில்தார் பார்வதி, ஆர்டிஓ தாமோதரன், தொப்பூர் இன்ஸ்பெக்டர் (பொ) சரவணன் ஆகியோர் நேரில் வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
விபத்தில் சிக்கிய மற்றொரு காரில் இருந்த நாமக்கல் மாவட்டம், புதன்சந்தை அடுத்த மின்னாம்பள்ளியை சேர்ந்த இளங்கோவன், சின்னவேடந்தூரை சேர்ந்த கந்தசாமி, பரமத்திவேலூரை சேர்ந்த சதீஸ் உள்ளிட்ட 7 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அதில் ஒரு பெண் மருத்துவமனையில் உயிரிழந்தார். 50 அடி பள்ளத்தில் விழுந்த லாரி டிரைவரான சசிகுமார் (45) பலத்த காயங்களுடன் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை சேர்ந்தவர். விபத்து காரணமாக, தொப்பூர் கணவாயில் 4 கி.மீட்டருக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

* பலியானவர்கள் அரியலூரை சேர்ந்த ஒரே குடும்பத்தினர்
அரியலூர் மாவட்டம், கீழ்வரப்பங்குறிச்சியை சேர்ந்தவர் வினோத்குமார்(35). இவர் கோவையில் பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது தம்பி விமல்குமார் பெங்களூருவில் வேலை செய்து வருகிறார். அவரது மனைவி மதி அனுஷ்காவிற்கு கடந்த 3 மாதத்திற்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் வினோத்குமார் தனது தம்பியின் குழந்தையை பார்ப்பதற்காக பெங்களூரு சென்றார். பின்னர் நேற்று காலை பெங்களூருவில் இருந்து வினோத்குமார் தனது மனைவி ஜெனிபர் (32), மகன்கள் ஜெயஜெஸ்வின் (5), விஜய்ஷா (3), சித்தி மஞ்சுளா (50), தம்பி விமல்குமார் (30), தம்பி மனைவி மதிஅனுஷ்கா (25), அவரது குழந்தை ஆகியோருடன் காரில் கோவைக்கு சென்று கொண்டிருந்தார்.

அவர்களது கார்தான் நெல்மூட்டை லாரிக்கு இடையில் சிக்கி தீப்பிடித்தது. தீப்பிடித்ததில் காரில் இருந்த விமல்குமார், அனுஷ்கா, மஞ்சுளா ஆகிய 3 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். 5 பேர் உயிர் தப்பினர். மீட்கப்பட்டவர்களில் இடதுகை உடைந்த வினோத்குமாரை ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். அவருடன் வந்த மனைவி, குழந்தைகள் மற்றும் உறவினர்கள் மீட்கப்பட்டு சேலம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சிகிச்சையில் இருந்த வினோத்குமாரின் மனைவி ஜெனிபர் சிகிச்சை பலனின்றி இறந்தார். மற்றொரு எரிந்த கார் மீட்கப்பட்டுள்ளது. அந்த காரில் வந்தவர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post தொப்பூர் கணவாயில் கோர விபத்து கார்கள் மீது லாரி மோதி தீப்பிடித்ததில் 4 பேர் பலி: கரிக்கட்டையாக சடலங்கள் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Toppur pass ,Nallampalli ,Dharmapuri ,Salem ,Dinakaran ,
× RELATED சேலம்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலை...