×

இன்னும் 25 வழக்குகள் கூட பதிவு செய்யுங்கள்: என்னை மிரட்ட முடியாது; ராகுல் ஆவேசம்

பார்பெட்டா: கவுகாத்தியில் நுழையவிடாமல் தடுத்ததால் போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி மற்றும் தொண்டர்கள் மீது வன்முறையை தூண்டியதாக அசாம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். வடகிழக்கு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்பி.யுமான ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையில் ஈடுபட்டு வருகிறார். நேற்றுமுன்தினம் அசாம் தலைநகர் கவுகாத்தியை வந்தடைந்தது. அப்போது அந்த நகருக்குள் செல்ல ராகுல் காந்தி உள்ளிட்டோருக்கு போலீசார் அனுமதி மறுத்து விட்டனர். தடுப்புகள் வைத்து தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இதனால் தடுப்புகளை காங்கிரஸ் தொண்டர்கள் அகற்ற முயன்றனர். அப்போது போலீசார் தடியடி நடத்தினார்கள். ராகுலும் அங்கு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து ராகுல் மற்றும் யாத்திரையில் பங்கேற்றுள்ள தலைவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மாநிலத்தில் 7 நாள் யாத்திரையில் முதல் முறையாக பார்பெடா மாவட்த்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, ‘‘நிலம் தொடர்பான குற்றச்சாட்டுக்களுடன் ஊழல் நிறைந்த முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா. என் மீது வழக்கு போட்டால் என்னை மிரட்டலாம் என்று முதல்வருக்கு எப்படி எண்ணம் வந்தது என எனக்கு தெரியவில்லை. உங்களால் முடிந்தவரை என் மீது வழக்கு போடுங்கள். இன்னும் 25 வழக்குகள் கூட பதிவு செய்யுங்கள். நான் பயப்படபோவதில்லை. பாஜ-ஆர்எஸ்எஸ் என்னை அச்சுறுத்த முடியாது. அரசாங்க வீட்டை பறித்தனர். அதன் சாவியை நானே ஒப்படைத்தேன். எனக்கு அது தேவையில்லை. எனது வீடு ஒவ்வொரு இந்திய குடிமகனின் இதயத்திலும் இருக்கிறது. நான் அங்கே வாழ்கிறேன்” என்றார்.

தடைகளை ஏற்படுத்துகிறார்
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் தனது டிவிட்டர் பதிவில்,‘‘அசாமில் நடந்து வரும் இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையின் ஒவ்வொரு அடியிலும் தடைகளை ஏற்படுத்துவதன் மூலமாக ராகுல் காந்தி எவ்வளவு துணிச்சலானவர் என்பதையும், அவர் இந்திய மக்களின் நலனுக்காக எப்படி போராடுகிறார் என்பதையும் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா உலகுக்கு காட்டுகிறார்” என்றார்.

ராகுலை கைது செய்வோம்:ஹிமந்தா
சிப்சாகர் மாவட்டம், நஸிராவில் நடந்த நிகழ்ச்சியில் அசாம் முதல்வர் ஹிமந்தா சர்மா நேற்று பேசுகையில், ‘‘கவுகாத்தியில் நடந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக ராகுல் காந்தி மற்றும் பல காங்கிரஸ் பிரமுகர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்துவார்கள். மக்களவை தேர்தலுக்கு பின்னர் ராகுல் காந்தி கைது செய்யப்படுவார்’’ என்றார்.

The post இன்னும் 25 வழக்குகள் கூட பதிவு செய்யுங்கள்: என்னை மிரட்ட முடியாது; ராகுல் ஆவேசம் appeared first on Dinakaran.

Tags : Rahul ,Barpeta ,Assam ,Rahul Gandhi ,Guwahati ,Congress party ,North-Eastern ,Unity ,
× RELATED யாரும் ஓட்டு போட கூடாது; ராகுல்...