×

அலங்காநல்லூர் அருகே ரூ.62.77 கோடியில் மிக பிரமாண்டமாக கட்டப்பட்ட ஏறுதழுவுதல் அரங்கம் திறப்பு: தமிழர் என்ற அடையாளத்துடன் பண்பாட்டு திருவிழாக்களை ஒற்றுமையுடன் நடத்துவோம்: போட்டிகளை தொடங்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

மதுரை: அலங்காநல்லூர் அருகே ரூ.62.77 கோடியில் மிக பிரமாண்டமாக கட்டப்பட்ட கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து, போட்டிகளை தொடங்கி வைத்தார். முதல்வர் பேசுகையில், தமிழர் என்ற அடையாளத்துடன் பண்பாட்டு திருவிழாக்களை ஒற்றுமையுடன் நடத்துவோம் என்று கூறினார். மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கிராமத்தில் 66 ஏக்கர் பரப்பில், ரூ.62.77 கோடி மதிப்பில் பிரமாண்ட ஜல்லிக்கட்டு அரங்கம் கட்டப்பட்டுள்ளது. இதற்கு கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ந்த அரங்கை திறந்து வைப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை 9.30 மணிக்கு தனி விமானத்தில் மதுரை விமான நிலையம் சென்றார். அங்கு அவருக்கு அமைச்சர்கள், அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர். பின்னர், அங்கிருந்து கார் மூலம் கீழக்கரை கிராமத்திற்கு சென்று, காலை 10.40 மணியளவில் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை திறந்து வைத்தார். பின்னர் அரங்கத்தில் உள்ள ஜல்லிக்கட்டு வீரன் சிலையையும், கலைஞர் சிலையையும் திறந்து வைத்தார். இந்த அரங்கில் முதல் ஜல்லிக்கட்டு நிகழ்வையும் கொடியசைத்து துவக்கி வைத்து பார்வையிட்டார்.

துவக்க விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: சென்னையில், கலைஞர் நினைவகம் விரைவில் திறக்கப்பட இருக்கிறது. இந்த பண்பாட்டுத் திருவிழா உலகம் முழுக்க பேசப்படும் என்பதால் ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்க முடிவெடுத்தோம். கலைஞருக்கு ஏறுதழுவுதல் போட்டி மீது தனி பாசம் உண்டு. அதனால்தான், தன்னுடைய மூத்த பிள்ளையான முரசொலியின் சின்னமாக, ஏறுதழுவுதல் காட்சியை வைத்தார். 1974ம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் ஏறுதழுவுதல் போட்டிகளை நடத்தியவர் கலைஞர். ஜல்லிக்கட்டு, ரேக்ளா ரேஸ் போன்றவற்றை 2006ம் ஆண்டு சென்னை ஐகோர்ட் மதுரை கிளை தடை செய்தபோது, பாதுகாப்பான முறையில் நாங்கள் நடத்துவோம் என்று உறுதி அளித்து, அனுமதியை பெற்றவர் கலைஞர்.

2007ம் ஆண்டு உச்சநீதிமன்றம், ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தபோதும், தடையை நீக்குவதற்காக வலுவான வாதங்களை வைத்து வாதாடியதும் போட்டிகள் நடத்தலாம் என்று அனுமதியைப் பெற்றதும் திமுக ஆட்சியில்தான். ஆட்சி மாறியதும், 2014ம் ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த முடியாத சூழல் வந்தது. நம்முடைய இளைஞர்கள் சேர்ந்து, ‘மெரினா தமிழர் புரட்சி’ என்று சொல்கின்ற அளவிற்கு 2017ல் மிகப்பெரிய மக்கள் போராட்டம் சென்னைக் கடற்கரையில் நடந்தது. அமைதி வழியில் போராடியவர்கள் மீது வன்முறையை ஏவி கூட்டத்தை கலைத்தது அன்றைக்கு இருந்த அதிமுக ஆட்சி.

அவர்களே ஆட்டோக்களுக்கு தீவைத்து கொளுத்தி, அந்த கொடுமையான காட்சியெல்லாம் அப்போது வெளியானது. தமிழ்நாடு முழுவதும் நடந்த போராட்டங்களுக்கு, அதிமுக ஆட்சி அடிபணிந்தது. அதன் பிறகுதான் மீண்டும் ஏறுதழுவுதல் போட்டிகளை நடத்துகிற நிலை உருவானது. ஆனாலும், நிரந்தர தீர்வு எட்டப்படவில்லை. ஒவ்வொரு ஆண்டும் அனுமதி தருகிறோம் என்ற பெயரில் ஒன்றிய பாஜ அரசு நாடகம் ஆடியது. ஆனாலும், உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டுதான் இருந்தது.

அந்த வழக்கில், ஒன்றிய அரசு உச்ச நீதிமன்றத்தில் என்ன சொன்னது தெரியுமா? ‘‘ஜல்லிக்கட்டு, மாட்டுவண்டி பந்தயம் உள்ளிட்ட போட்டிகளை நாங்கள் அங்கீகரிக்கவில்லை. மாட்டுவண்டி பந்தயம், ஜல்லிக்கட்டு போட்டியை ஊக்குவிக்கும் திட்டமும் இல்லை. கிராமப்புற வீரர்களை ஊக்குவிக்கும், கேலோ இந்தியா உள்ளிட்ட எந்தத் திட்டத்தின் கீழும் ஜல்லிக்கட்டு இல்லை” என்று ஒன்றிய அரசு தரப்பில் தெரிவித்தனர். நம் திராவிட மாடல் அரசு நீதிமன்றத்தில் என்ன சொன்னது? ‘‘ஜல்லிக்கட்டு வெறும் பொழுதுபோக்கு போட்டி இல்லை. அது உழவர்களின் வாழ்வோடும், பண்பாட்டோடும் கலந்தது.

போட்டிகளை பாதுகாப்பாக நடத்துகிறோம். நமது குடும்பங்கள் காளைகளை கவனத்தோடு வளர்க்கிறோம்” என்று அழுத்தம்திருத்தமாக வாதங்களை வைத்தோம். திராவிட மாடல் அரசின் தீவிர முயற்சியால், ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தலாம் என்ற வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை கடந்த ஆண்டு மே மாதம் உச்சநீதிமன்றத்தில் பெற்றோம். இவ்வளவு தடைகளையும் திமுக அரசு உடைத்து எறிந்ததால்தான் இன்றைக்கு ஏறுதழுவுதல் போட்டி கம்பீரமாக நடக்கிறது. இந்த சாதனை வரலாற்றின் தொடர்ச்சியாக இந்த கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில், காளைகள், ஏறுதழுவுதல் பற்றிய அருங்காட்சியகமும், நூலகமும் அமைக்கப்பட்டிருக்கிறது.

பல நூற்றாண்டிற்கு முந்தைய நூல்களும், ஓவியங்களும், புகைப்படங்களும் இங்கே இருக்கிறது. இதனை உருவாக்கித் தந்த தமிழ் இணையக் கல்விக் கழகத்துக்கு நன்றி. அன்னை தமிழ் நிலத்துக்கு பேரறிஞர் அண்ணா ‘தமிழ்நாடு’ என பெயர் சூட்டினார். தமிழுக்கு ‘செம்மொழி’ தகுதி பெற்று தந்தார் கலைஞர். இன்றைக்கு தமிழர் பண்பாட்டு அடையாளமான ஏறுதழுவுதலுக்கு, நம்முடைய திராவிட மாடல் ஆட்சி அரங்கம் அமைத்திருக்கிறோம். இந்த தருணத்தில் நான் உங்களிடம் கேட்டுக்கொள்ள விரும்புவது, சாதிப் பிளவுகளும், மத வேறுபாடுகளும், தமிழர் ஒற்றுமையை சிதைப்பதற்காக பிற்காலத்தில் உருவாக்கப்பட்டவை என்பதை உணர்ந்து, தமிழர் என்ற நமது அடையாளத்தோடு இதுபோன்ற பண்பாட்டுத் திருவிழாக்களை ஒற்றுமையாக நடத்துவோம். இந்த அரங்கில், காளைகள் வீரமாக களம் இறங்கட்டும். காளையர்கள் தீரமாக காளைகளை தழுவட்டும். தமிழர்கள் அனைவரும் ஒற்றுமை உணர்வோடு கண்டுகளிப்போம். தமிழ் வாழ்க. தமிழ்நாடு வாழ்க. வீரவிளையாட்டான ஏறுதழுவுதல் வெல்க. இவ்வாறு பேசினார்.

* மதுரைக்கு 3 ஆண்டு ஆட்சியில் 3 கம்பீர சின்னங்கள் 2015ல் அறிவித்த ஒன்றிய அரசின் திட்டம் மட்டும் வரல…
முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ‘‘திமுக ஆட்சி அமைந்து, மூன்று ஆண்டுகள்தான் ஆகியிருக்கிறது. அதற்குள்ளாக, மூன்று முக்கியமான கம்பீரச் சின்னங்களை மதுரையில் ஏற்படுத்தியிருக்கிறோம். ஒன்று, மதுரைக்கு அருகில் தமிழகத்தின் பழமையை சொல்லும் கீழடி அருங்காட்சியகம். 2வது கலைஞரின் பெயரால் மாபெரும் நூலகம், அறிவு மாளிகையாக அமைக்கப்பட்டிருக்கிறது. மூன்றாவதாக இந்த கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம், ஜல்லிக்கட்டுக்கு பெயர் போன அலங்காநல்லூரில் அமைக்கப்பட்டிருக்கிறது. இதைச் சொல்லும் நேரத்தில், 2015ம் ஆண்டு அறிவித்து, இன்று வரை மத்தியில் இருக்கும் ஒன்றிய பாஜ அரசால் கொண்டு வரப்படாத ஒரு திட்டம் (எய்ம்ஸ் மருத்துவமனை) இருக்கிறதே? அது உங்கள் ஞாபகத்திற்கு வந்தால், அதற்கு நான் பொறுப்பல்ல’’ என்றார்.

* சொகுசு கார், ரூ.1 லட்சம் பரிசு
போட்டியில் 478 காளைகள் களமிறக்கப்பட்டன. 350 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். பிரத்யேகமாக அமைக்கப்பட்ட வாடிவாசலில் இருந்து வெளியேறிய காளைகளை, மாடுபிடி வீரர்கள் உற்சாகத்துடன் அடக்கினர். சில காளைகள் வீரர்களுக்கு பிடி கொடுக்காமல் நின்று விளையாடின. ஜல்லிக்கட்டை பார்வையிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், வெற்றி பெற்ற வீரர்கள், காளைகளின் உரிமையாளர்களுக்கு தங்க மோதிரம் வழங்கி பாராட்டினார். ஜல்லிக்கட்டு போட்டியில் தேர்வு செய்யப்பட்ட சிறந்த காளைக்கும், அதிக காளைகளை அடக்கும் மாடுபிடி வீரருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் தலா ரூ.20 லட்சம் மதிப்பிலான ஒரு சொகுசு கார், ரூ.1 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் டூவீலர்கள் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி சிவகங்கை மாவட்டம் பூவந்தியை சேர்ந்த அபிசித்தர் 10 காளைகளை அடக்கி, முதல்பரிசு ரூ.1 லட்சத்துடன், சொகுசு கார் பரிசு பெற்றார். இரண்டாம் பரிசாக மதுரை மாவட்டம் சின்னபட்டியை சேர்ந்த தமிழரசன், ஆனையூரை சேர்ந்த பரத்குமார் தலா 6 காளைகளை பிடித்து இருவரும் இரண்டாம் நிலை பெற்றனர். மொத்தமாக இருவருக்கும் சேர்த்து ரூ.75 ஆயிரம் பரிசுத்தொகை, ஒரு டூவீலர் வழங்கப்பட்டது. 4 காளைகளை பிடித்து 3ம் பரிசு ரூ.50 ஆயிரம் ரொக்கத்தை முடக்கத்தானை சேர்ந்த வீரர் மணிகண்டன் பெற்றார்.

சிறந்த காளைக்கான முதல் பரிசை, உரிமையாளரான புதுக்கோட்டையை சேர்ந்த கணேஷ் கருப்பையா பெற்றார். இவருக்கு ரூ.1 லட்சம் ரொக்கத்துடன், ஒரு சொகுசுக் கார் பரிசு வழங்கப்பட்டது. இரண்டாவது பரிசாக ரூ.75 ஆயிரம் ரொக்கம், ஒரு டூவீலர் திருச்சி அணைக்கரையைச் சேர்ந்த வினோத் காளை பெற்றது. சிறந்த காளைக்கான மூன்றாம் பரிசு ரூ.50 ஆயிரத்தை மதுரை அண்ணாநகர் காளை உரிமையாளர் பிரேம் பெற்றார். இதுதவிர, போட்டியில் சிறப்பாக களம் கண்ட மாடுபிடி வீரர்களுக்கும், காளையின் உரிமையாளர்களுக்கும் தங்கம், வெள்ளி நாணயங்கள் முதல் அண்டா, சைக்கிள், பீரோ, பிரிட்ஜ், டிவி, கட்டில் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.

The post அலங்காநல்லூர் அருகே ரூ.62.77 கோடியில் மிக பிரமாண்டமாக கட்டப்பட்ட ஏறுதழுவுதல் அரங்கம் திறப்பு: தமிழர் என்ற அடையாளத்துடன் பண்பாட்டு திருவிழாக்களை ஒற்றுமையுடன் நடத்துவோம்: போட்டிகளை தொடங்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Largest Ascension Stadium ,Alanganallur ,First Minister ,K. Stalin ,MADURAI ,FIRST PRESIDENT ,STADIUM ,NEAR ALANGANALLUR ,
× RELATED கல்லுமலை கோயில் சித்திரை திருவிழா