×

இரட்டை ரயில் பாதை பணிக்காக தண்டவாளங்கள் அமைக்கும் பணி தீவிரம்: ஆறாட்டு ரோடு ரயில்வே கேட்டும் மூடல்

நாகர்கோவில்: ஒழுகினசேரி பகுதியில் கட்டிடங்களை இடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இரட்டை ரயில் பாதை பணிக்காக வடசேரி ஆறாட்டு ரோடு ரயில்வே கேட்டும் மூடப்பட்டுள்ளது. கன்னியாகுமரி – திருவனந்தபுரம் இடையே இரட்டை ரயில் பாதை பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக நாகர்கோவில் ஒழுகினசேரியில் ரயில்வே பாலம் கட்டும் பணியும், இரட்டை ரயில் பாதைக்கான தண்டவாளங்கள் அமைக்கும் பணியும் நடக்கிறது. இந்த பணிக்காக ஒழுகினசேரியில் தற்போது உள்ள ரயில்வே பழைய பாலத்தை இடிக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. புதிய பாலம் கட்டாமல், பழைய பாலத்தை இடிக்க கூடாது என்று மாநகராட்சி மேயர் மகேஷ் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக அவர் கலெக்டர் தரிடம் நேரடியாக கோரிக்கை விடுத்து உள்ளார். இதற்கிடையே இரட்டை ரயில் பாதைக்கான தண்டவாளம் அமைக்கும் பணிக்காக, ஒழுகினசேரி கிராமம் பகுதியில் இருந்த வீடுகள், கட்டிடங்களை ஜேசிபி மூலம் இடிக்கும் பணிகள் நேற்று முன் தினம் காலை தொடங்கியது. நேற்று 2 வது நாளாக இந்த பணிகள் நடந்தன. ஏற்கனவே ரயில்வேக்கு சொந்தமான இடம் தவிர, தனியார் இடங்களை ரயில்வே விலைக்கு வாங்கி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே கூடுதல் தண்டவாளம் அமைக்கும் பணிக்காக நாகர்கோவில் வடசேரி ஆறாட்டு ரோட்டில் உள்ள ரயில்வே கேட்டும் மூடப்பட்டுள்ளது. வரும் 31ம் தேதி வரை காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை ரயில்வே கேட் மூடப்பட்டு இருக்கும்.

எனவே பொதுமக்கள் மாற்றுப்பாதையில் செல்ல வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதற்கிடையே ஒழுகினசேரி பகுதியில் இரட்டைரயில் பாதைக்காக பாலம் அமைக்கும் பணி நடக்கிறது. இந்த பணிக்காக போக்குவரத்தை மாற்றி அமைக்கும் வகையில் அந்த பகுதியில் தற்காலிக பாதை அமைப்பது பற்றி ரயில்வே அதிகாரிகள் ஆய்வு நடத்தி உள்ளனர். ஏற்கனவே மாநகராட்சி மேயர் மகேஷ் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஒழுகினசேரி பகுதியில் முழுமையாக போக்குவரத்தை நிறுத்த கூடாது. ஒரு வழிப்பாதையாக ஒழுகினசேரி வழியாக போக்குவரத்து அனுமதிக்கப்பட வேண்டும் என கூறி உள்ளனர். இதையடுத்து கலெக்டரின் உத்தரவின் பேரில் ஆய்வு நடந்ததாக கூறப்படுகிறது.

The post இரட்டை ரயில் பாதை பணிக்காக தண்டவாளங்கள் அமைக்கும் பணி தீவிரம்: ஆறாட்டு ரோடு ரயில்வே கேட்டும் மூடல் appeared first on Dinakaran.

Tags : Nagercoil ,Oglukinassery ,Vadaseri Aratu Road ,station ,Kanyakumari ,Thiruvananthapuram ,Dinakaran ,
× RELATED நாகர்கோவில் ஒழுகினசேரி, புத்தேரி...