×

‘மருத்துவத்தின் எதிர்காலம்’ மாநாடு 63,310 மருத்துவ மாணவர்களுக்கு உதவியாக இருக்கும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் நம்பிக்கை

சென்னை: தமிழக சுகாதாரத்துறை சார்பில் நடைபெற்ற ‘மருத்துவத்தின் எதிர்காலம்’ மாநாடு 63,310 மருத்துவ மாணவர்களுக்கு திறமையை வளர்த்து கொள்ள உதவியாக இருக்கும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மருத்துவத்தின் எதிர்காலம் குறித்து கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு மருத்துவ மாநாடு சென்னை வர்த்தக மையத்தில் கடந்த ஜனவரி 19ம் தேதி முதல் 21ம் தேதி வரை வெற்றிகரமாக நடைபெற்றது. இந்த மாநாட்டின் சிறப்பு குறித்து பேசுவதற்காக சிறப்பு பத்திரிக்கையாளர் சந்திப்பு கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் மருத்துவ வரலாற்றில் முதன் முறையாகச் கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு மருத்துவ மாநாடு வெற்றிகரமாக மூன்று நாட்கள் சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது. இந்த மாநாட்டிற்காக மருத்துவத்தின் எதிர்காலம் என்னும் தலைப்பில், பல்வேறு மருத்துவ மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் சமர்ப்பித்த 625 க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகள் தொகுப்புகளும் (Eunioa) புத்தகமாக வெளியிடப்பட்டது. கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவித்தது போல இந்த மாநாடு நடைபெற்றது. இந்த மாநாடு நடைபெற்றதன் விளைவாக மருத்துவ கல்லூரி சார்ந்த மொத்தம் 63,310 மாணவர்கள் எதிர்காலத்தில் தங்களது மருத்துவ திறமைகளை அதிகரித்து கொள்ளவும், ஆராய்ச்சி திறனை வளப்பதற்கு உதவியாக இருக்கும்.

வழக்கமாக மருத்துவ மாநாடு ஏதாவது ஒரு மருத்துவ துறையை சார்ந்து மட்டுமே நடைப்பெறும். ஆனால் முதல் முறையாக அனைத்து மருத்துவ துறை இணைந்து நடந்த முதல் மாநாடு இது. குறிப்பாக இந்த மாநாட்டில் அமெரிக்கா உள்ளிட்ட 7 நாடுகளில் இருந்து மருத்துவர்கள், நிபுணர்கள் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட மருத்துவர்கள் இந்த் மாநாடு மற்றும் தமிழ்நாடு மருத்துவ கட்டமைப்பு போன்று நாங்கள் வேறு எங்கையும் பார்த்ததில்லை என்று சொல்லிவிட்டு சென்றார்கள். மேலும், இம்மாநாட்டிலே பங்கேற்ற பல்வேறு நாடுகளின் மருத்துவ வல்லுநர்களின் ஆராய்ச்சி குறிப்புகளும் தொகுத்து (Vision statement 2024) புத்தகமாகவும் வெளியிடப்பட்டது. இது மருத்துவ மாணவர்களுக்கு உதவியாக இருக்கும்.

இந்த மாநாட்டில் 225 மருத்துவத்துறையில் புகழ் பெற்ற மருத்துவ வல்லுநர்களில் முதன் முறையாக ஏழு நாடுகளில் (அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், கத்தார், ஆஸ்திரேலியா, கனடா) 28 பன்னாட்டு மருத்துவ புகழ்மிக்க பேச்சாளர்களும், 185 நமது இந்திய அளவிலும், 12 பேச்சாளர்கள் காணொளி வாயிலாகவும் பங்கேற்று பல்வேறு தலைப்புகளில் சிறப்புரையாற்றி இருக்கிறார்கள். அதுமட்டுமின்றி இந்த மாநாட்டில் பதிவு செய்து பங்கேற்ற மாணவர்களுக்கு தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் சார்பில், 30 மதிப்பெண் புள்ளிகளும், தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் சார்பில், 6 புள்ளிகளும், பல்மருத்துவ கவுன்சில் சார்பில், 18 புள்ளிகளும் வழங்கப்பட்டுள்ளதும் பாராட்டுக்குரிய ஒன்றாகும். மேலும் இது போன்ற மாநாடு இனி ஆண்டு தோறும் நடந்த திட்டமிடப்பட்டு உள்ளது.

The post ‘மருத்துவத்தின் எதிர்காலம்’ மாநாடு 63,310 மருத்துவ மாணவர்களுக்கு உதவியாக இருக்கும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் நம்பிக்கை appeared first on Dinakaran.

Tags : Future of Medicine' conference ,Minister ,M.Subramanian Hope ,Chennai ,M. Subramanian ,Future of Medicine' ,Tamil Nadu Health Department ,Artist ,Centennial International Medical Conference on the ,Future of Medicine Chennai ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...