×

170 ஆம்னி பேருந்துகள் நிறுத்தும் வசதி.. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்துதான் பேருந்துகள் இயக்க வேண்டும்: அமைச்சர் சேகர்பாபு

சென்னை: ஆம்னி பேருந்துகளை இன்று முதல் கோயம்பேட்டிற்கு பதிலாக கிளாம்பாக்கத்தில் இருந்தே இயக்க வேண்டும் என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். ஆம்னி பேருந்துகளுக்கு மட்டும் 5 நடைமேடைகளில் 77 பேருந்துகள் நிறுத்துமிடமும் இதை தவிர 170 ஆம்னி பேருந்துகள் இம்முனையத்திலேயே பணியில்லா பேருந்து நிறுத்துமிடமும் (Idle Parking Bays) மற்றும் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து இருக்கின்றோம் என்று அமைச்சர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும அமைச்சர் (ம) தலைவரும் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான சேகர்பாபு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கத்தில் ரூ.393.74 கோடி மதிப்பீட்டில் 88.52 ஏக்கர் பரப்பளவில் சென்னைப் பெருநகர் வளர்ச்சி குழுமத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள இந்தியாவின் மிகப்பெரிய பேருந்து நிலையங்களுள் ஒன்றான “கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை” தமிழ்நாடு முதலமைச்சர் 30.12.2023 அன்று திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்கள்.

“கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்” மிகச் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. தினம்தோறும் 5,000-க்கும் மேற்பட்ட பயணிகள் தற்போது பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். இப்பேருந்து முனையத்தை முழுமையாக மக்கள் மகிழ்ச்சியோடு பயன்படுத்துகின்ற அளவிற்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது. ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் ஏற்றார் போல் அரசு செயல்பட முடியாது. மக்களுடைய தேவைகளுக்கும், மக்களுடைய விருப்பத்திற்கும் தான் அரசு செயல்பட முடியும்.

ஏற்கனவே ஆம்னி பேருந்து உரிமையாளர்களோடு பேருந்து முனையம் திறக்கப்படுவதற்கு முன்பாகவே, போக்குவரத்து துறை செயலாளர், எங்கள் துறையினுடைய வீட்டு வசதித் துறை செயலாளர், உறுப்பினர் செயலர், போன்றோர்களோடு கலந்தாலோசித்து ஆம்னி பேருந்து உரிமையாளர்களோடு கூட்டத்தை நடத்தி இருக்கிறோம். அந்த கூட்டத்திலேயே கடந்த மாதம் 30-ந் தேதி ஆம்னி பேருந்து திறக்கப்பட்டவுடன் படிப்படியாக ஆம்னி பேருந்துகளை இயக்குவோம் என்று அறிவித்திருந்தார்கள். மீண்டும் அவர்கள் கால அவகாசம் கேட்டதற்கிணங்க ஜனவரி மாதம் 24-ந் தேதி முதல் நாங்கள் அங்கே ஆம்னி பேருந்துகளை இயக்குவோம் என்று கூறியிருந்தார்கள். இப்பொழுது திடீரென்று அவர்களே ஒத்து கொண்டதற்கு மாறாக இப்பொழுது நாங்கள் இயக்ககுவதற்கு தயாராக இல்லை என்கிறார்கள்.

அரசு அவர்களுடைய விருப்பத்திற்கு போல் செயல்பட முடியாது, மக்களுடைய விருப்பத்திற்கு ஏற்றார்போல் தான் அரசு செயல்படும். ஆகவே இன்றையலிருந்து ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து இயக்குவதற்கு முழுமையாக தடை செய்யப்படும். ஆம்னி பேருந்துகள் முழுமையாக கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்டிருக்கின்ற கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருந்துதான் இயக்கப்படும், அதற்கு தேவையான அனைத்து வசதிகளையும், பயணிகளுக்கு தேவையான வசதிகளையும், பேருந்துகளுக்கு தேவையான வசதிகளையும் முழுமையாக சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமும், போக்குவரத்து துறையும் செய்து கொடுத்து இருக்கின்றோம்.

ஆகவே ஒத்து கொண்டதைப்போல் ஆம்னி பேருந்துகளை கிளம்பாக்கத்தில் இருந்து இயக்குவதற்கு பேருந்து உரிமையாளர்களும், சங்கங்களும் அரசுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். ஆகவே நிபந்தனைக்குட்பட்டு சொல்லிய வார்த்தையை காப்பாற்றும் நோக்கோடு ஆம்னி பேருந்து உரிமையாளர்களும், சங்கங்களும் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அவர்கள் வைத்த கோரிக்கை அனைத்தையும் நிறைவேற்றி தந்திருக்கிறோம். இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

 

 

The post 170 ஆம்னி பேருந்துகள் நிறுத்தும் வசதி.. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்துதான் பேருந்துகள் இயக்க வேண்டும்: அமைச்சர் சேகர்பாபு appeared first on Dinakaran.

Tags : 170 Omni Bus Stop Facility Buses ,Klampakkam bus station ,Minister ,Sekarbabu ,Chennai ,Omni ,Klampakh ,Coimbate ,Minister of State Department ,Sekharbhabu ,170 Omni ,Sekarpapu ,Dinakaran ,
× RELATED கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எதிரே...