×

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு முதல்வர் கடிதம்

சென்னை : இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேரையும் விடுவிக்க தூதரக ரீதியில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் 22-1-2024 அன்று கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு இன்று (24-1-2024) கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆறு மீனவர்கள் IND-TN-10-MM-769 மற்றும் IND-TN-10-MM-750 என்ற பதிவு எண்களை கொண்ட மீன்பிடிப் படகுகளுடன் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், 22-1-2024 அன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

சமீப காலமாக தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து இதுபோன்று இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படுவது கவலையளிப்பதாக உள்ளது என்றும், இத்தகைய போக்கு பதட்டமான சூழ்நிலையை உருவாக்கும் என்பதால், இதில் ஒன்றிய அரசு உடனடி கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இத்தகைய தொடர் கைது நடவடிக்கைகள், தமிழ்ச் சமூகத்தின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பறிப்பதோடு, மீனவ மக்களிடையே அச்சத்தையும், நிச்சயமற்ற சூழலையும் உருவாக்கியுள்ளதாகவும், தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவச் சமூகங்களின் கலாச்சார மற்றும் பொருளாதாரக் கட்டமைப்பை அச்சுறுத்தும் வகையில் உள்ளதாகவும் முதலமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண உரிய தூதரக வழிமுறைகளைப் பின்பற்றி தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ள முதலமைச்சர், மீனவர்கள் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண இந்தியா-இலங்கை நாடுகளுக்கிடையேயான கூட்டு நடவடிக்கைக் குழுவினை அமைப்பதன் மூலம் இது சாத்தியமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

அப்பாவி மீனவர்கள் தொடர்ந்து இதுபோன்று கைது செய்யப்படுவதைத் தவிர்க்கவும், இந்திய மீனவர்களுக்கும், இலங்கைக் கடற்படையினருக்கும் இடையே நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஏதுவாகவும், உரிய தூதரக வழிமுறைகளை மேற்கொண்டு கூட்டு நடவடிக்கைக் குழுவினை கூட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சரை கேட்டுக் கொண்டுள்ள முதலமைச்சர், இலங்கைக் காவலில் உள்ள தமிழ்நாடு மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விரைந்து விடுவித்திட நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

The post இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு முதல்வர் கடிதம் appeared first on Dinakaran.

Tags : EU government ,Nadu ,Sri Lanka Navy ,Chennai ,Chief Minister of the Union ,Tamil Nadu ,Sri Lankan Navy ,K. Stalin ,Rameshwaram ,EU ,Tamil ,Dinakaran ,
× RELATED அறிவியல்பூர்வ ஆய்வு நடத்தாமல்...