×

வன விலங்குகளின் தாகம் தீர்க்க குட்டைகளில் தண்ணீர் நிரப்பும் பணி துவக்கம்

ஊட்டி : முதுமலையில் வறட்சி ஏற்பட்டுள்ளதால் வனவிலங்குகளுக்கு தினமும் டேங்கர் லாரிகள் மூலம் குட்டைகளில் தண்ணீர் நிரப்பும் பணிகள் துவக்கப்பட்டுள்ளன.
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் துவங்கி இரு மாதங்கள் தென்மேற்கு பருவமழை பெய்யும். இந்த பருவமழையின் போது, கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் மழையின் தாக்கம் அதிகமாக காணப்படும். இதனால், முதுமலை புலிகள் காப்பத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள வனங்கள் பச்சை பசேல் என காட்சியளிக்கும். அதன்பின், முதுமலை புலிகள் காப்பத்திற்குட்பட்ட பகுதிகளில் மழையின் தாக்கம் குறைந்தே காணப்படும். வடகிழக்கு பருவமழை இப்பகுதிகளில் அதிகளவு இருக்காது. இதனால், வனங்களில் உள்ள நீரோடைகள் மற்றும் குட்டைகளில் தண்ணீர் குறையும்.

தொடர்ந்து, நவம்பர் மாதம் முதல் இப்பகுதிகளில் உறைப்பனி விழத்துவங்கும். இதனால், இப்பகுதிகளில் உள்ள வனங்கள், புற்கள் அனைத்து காய்ந்து விடும். அதேபோல், வனங்களில் உள்ள நீரோடைகள் மற்றும் குட்டைகளில் தண்ணீர் முழுமையாக குறைந்து வறட்சி ஏற்படும். இம்முறையும் கடந்த நவம்பர் மாதம் முதல் இப்பகுதிகளில் பனியின் தாக்கம் அதிகமாக உள்ளதாலும், பகல் நேரங்களில் வெயில் அதிகமாக உள்ளதால், முதுமலையில் உள்ள குட்டைகளில் தண்ணீர் இன்றி வறட்சி ஏற்பட்டுள்ளது. மேலும், புற்கள் மற்றும் வனங்கள் காய்ந்து போயுள்ளன. இதனால், யானை, காட்டுமாடுகள் மற்றும் மான்கள் உட்பட வன விலங்குகள் தற்போது நீர் நிலைகளை தேடி இடம் பெயர துவங்கியுள்ளன.

இந்நிலையல், வனவிலங்குகளின் தாகத்தை போக்கும் வகையில், தற்போது வனத்துறை சார்பில் விலங்குகள் தண்ணீர் குடிக்கும் குட்டைகளில் நீர் நிரப்பும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது. தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் உள்ள குட்டைகளில் லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டுச் செல்லப்பட்டு நிரப்பப்பட்டு வருகிறது.

நாள் ஒன்றுக்கு சுமார் 5 ஆயிரம் லிட்டர் தண்ணீர் வரை வன விலங்குளுக்காக கொண்டுச் செல்லப்பட்டு குட்டைகளில் நிரப்பப்பட்டு வருகிறது. இதனால், இங்குள்ள யானைகள் மற்றும் மற்ற வன விலங்குகள் இந்த தண்ணீரை பருகி செல்கின்றன.

தற்போது, இப்பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதாலும், உறைப்பனி விழுவதாலும், மேலும் வனங்கள் காய்ந்து போக வாய்ப்புள்ளது. இதனால், வன விலங்குகளுக்கு தேவையான தண்ணீர் நாள் தோறும் காலை மற்றும் மாலை நேரங்களில் தினமும் ஊற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post வன விலங்குகளின் தாகம் தீர்க்க குட்டைகளில் தண்ணீர் நிரப்பும் பணி துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Mudumalai ,Nilgiris district ,Gudalur ,
× RELATED முதுமலை புலிகள் காப்பகத்தின் பெயரில்...