×

தன்னம்பிக்கையுடன் சவால்களை எதிர் கொண்டு இலக்கை நோக்கி செல்ல வேண்டும்

*கருத்தரங்கில் கலெக்டர் பேச்சு

ஊட்டி : தன்னம்பிக்கையுடன் சவால்களை எதிர் கொண்டு சமரசமின்றி இலக்கை நோக்கி செல்ல வேண்டும் என ஊட்டி அரசு கலை கல்லூரியில் நடந்த தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் கலெக்டர் அருணா தெரிவித்தார். மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் படித்த இளைஞர்களுக்கான தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நேற்று ஊட்டி அரசு கலை கல்லூரியில் நேற்று நடந்தது.

இதில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், ராணுவத்தில் உள்ள வேலைவாய்ப்புகள் மற்றும் பல்வேறு போட்டி தேர்வுகள் எழுதுவதற்கு தேவையான தகவல்கள், உயர்கல்வி, சுய வேலைவாய்ப்பு தொடர்பான தகவல் அடங்கிய புத்தகங்கள், பிரசுரங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இதில், மாவட்ட கலெக்டர் அருணா தலைமை வகித்து இக்கண்காட்சியினை துவக்கி வைத்து பார்வையிட்டார். தொடர்ந்து அவர் பேசியதாவது:

மாணவ, மாணவியர்களாகிய நீங்கள் கல்லூரி படிப்பு முடித்தவுடன் வேலையை தேட வேண்டிய நிலை உள்ளது. வாழ்க்கை முன்னேற லட்சியத்துடன் போராட வேண்டும். ஒரு முடிவு எடுதால் அதில் சமரசம் செய்து கொள்ள கூடாது. சமரசமின்றி இலக்கை நோக்கி செல்ல வேண்டும். தன்னம்பிக்கையுடன் சவால்களை எதிர்கொள்ள வேண்டும். ஒன்றிய அரசு துறைகளில் வேலைக்கு சேர யுபிஎஸ்சி, எஸ்எஸ்சி, மாநில அரசு வேலைகளில் சேர டிஎன்பிஎஸ்சி, இதர துறைகள் சார்பில் போட்டி தேர்வுகள் நடத்தப்படுகின்றன. போட்டி தேர்வுகளை எதிர்கொள்ள நன்கு உழைக்க வேண்டும்.

பாடத்திட்டம் குறித்து அறிந்து அவற்றை நன்கு படிப்பதுடன் பயிற்சி எடுக்க வேண்டியது அவசியம். பயிற்சி நிறுவனங்களில் சேர்ந்து பயிற்சி பெற வசதியில்லாத மாணவ, மாணவியர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் நடத்தப்படும் பயிற்சி முகாம்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும். தற்போது, போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவ, மாணவியர்களுக்காக தமிழ்நாடு அரசு அறிவுசார் மையத்துடன் கூடிய நூலகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஊட்டியில் காந்தல் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. இதுதவிர போட்டி தேர்வுகளுக்கு தேவையான புத்தகங்களும் வைக்கப்பட்டுள்ளன.

மேலும் தடையற்ற இணையதள வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவற்றை இளைஞர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். தாழ்வு மனப்பான்மை அறவே இருக்க கூடாது. சாதி, மதம், பாலினம், நிற பாகுபாடு பார்க்க கூடாது. அனைவரும் சமம் என்பதை உணர வேண்டும். இலக்கை அடைய தொடர் முயற்சி இருக்க வேண்டும். இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பயன்படுத்தி கொள்ள வேண்டு வாழ்வில் சாதிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். கோவை மண்டல வேலைவாய்ப்புத்துறை இணை இயக்குநர் ேஜாதிமணி விளக்கவுரையாற்றினார். மாவட்ட சமூக நல அலுவலர் பிரவீனா தேவி பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் திறன் மேம்பாடு குறித்து பேசினார். மாவட்ட தொழில் மைய மேலாளர் சண்முக சிவா சுய தொழில் முனைவோர் குறித்து பேசினார். வேலைவாய்ப்பு தொடர்பாக பயனுள்ள இணையதளங்கள் குறித்து வேலைவாய்ப்பு அலுவலர் சாகுல் ஹமீது ேபசினார்.

முன்னதாக, தொழில்நெறி வழிகாட்டுதல் கையேட்டினை வெளியிட்ட கலெக்டர் அருணா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்டத்தில் பயின்று டிஎன்பிஎஸ்சி., குரூப்-2 தேர்வில் தேர்ச்சி பெற்ற ராஜா முகமது மற்றும் சீருடை பணியாளர் தேர்வாணைய தேர்வில் வெற்றி பெற்று காவலராக தேர்வு பெற்ற துர்காராம் மற்றும் பிரபு ஆகியோருக்கு புத்தகங்கள் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் ஊட்டி ஆர்டிஓ, மகராஜ், ஊட்டி அரசு கலை கல்லூரி முதல்வர் பிராங்க்ளின் ேஜாஸ், தொழில்நெறி வழிகாட்டும் அலுவலர் கஸ்தூரி, இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் ராஜேஷ் மற்றும் கல்லூரி மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post தன்னம்பிக்கையுடன் சவால்களை எதிர் கொண்டு இலக்கை நோக்கி செல்ல வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Ooty ,Aruna ,Ooty Government ,Art ,College ,Dinakaran ,
× RELATED பந்தலூர் பகுதியில் பலாக்காய் சீசன் களைக்கட்டுகிறது