×

நாய் சடலம் சக்கரத்தில் சிக்கியதால் விபத்து லோடு ஆட்டோ மீது சரக்கு லாரி மோதல்

*2 வியாபாரிகள் படுகாயம்

ஆரணி : ஆரணி அருகே லோடு ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் 2 வியாபாரிகள் படுகாயம் அடைந்தனர்.திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு வஉசி தெருவை சேர்ந்தவர் முருகன்(55), மளிகைக்கடை வைத்துள்ளார். அதே பகுதியை சேர்ந்தவர் ஆதம்(45), காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். நண்பர்களான இவர்கள் இருவரும் நேற்று அதிகாலை 2 மணி அளவில் காய்கறி மற்றும் மளிகை பொருட்களை வாங்குவதற்காக லோடு ஆட்டோவில் ஆரணிக்கு வந்தனர்.

பின்னர், ஆரணி அடுத்த இரும்பேடு கூட்ரோட்டில் உள்ள மார்க்கெட்டில் காய்கறிகளை வாங்கினர். அதனை லோடு ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு மீண்டும் ஆரணி வழியாக வீட்டிற்கு புறப்பட்டு சென்றனர். ஆதம் ஆட்டோவை ஓட்டிச்சென்றார். தொடர்ந்து, ஆரணி அடுத்த விண்ணமங்கலம் அருகே சென்றபோது சாலையில் இறந்து கிடந்த நாயின் மீது இவர்களது ஆட்டோ ஏறியது. அதில், நாயின் சடலம் ஆட்டோவின் சக்கரத்தில் சிக்கிக்கொண்டது.

இதனால் நிலை தடுமாறிய ஆதம் ஆட்டோவை சாலையோரமாக நிறுத்த முயன்றார். அப்போது, இவர்களுக்கு பின்னால் ஆற்காட்டில் இருந்து ஆரணி வழியாக சரக்குகளை ஏற்றி வந்த லாரி எதிர்பாராதவிதமாக ஆட்டோ மீது மோதியது. இதில், ஆட்டோவில் இருந்த முருகன், ஆதம் ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். தலைகீழாக கவிழ்ந்த ஆட்டோ சுக்குநூறாக நொறுங்கியது. மேலும், ஆட்டோவில் இருந்த காய்கறி மற்றும் பொருட்கள் சேதமடைந்தன. அவ்வழியாக சென்ற பொதுமக்கள், இவர்கள் 2 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், மளிகை கடைக்காரர் முருகன் மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், தகவலறிந்த ஆரணி தாலுகா இன்ஸ்பெக்டர் ராஜாங்கம், எஸ்ஐ மகாராணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கிய லோடு ஆட்டோவை சாலையில் இருந்து அப்புறப்படுத்தினர். மேலும், ஆதம் கொடுத்த புகாரின்பேரில் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post நாய் சடலம் சக்கரத்தில் சிக்கியதால் விபத்து லோடு ஆட்டோ மீது சரக்கு லாரி மோதல் appeared first on Dinakaran.

Tags : Arani ,Lodu ,Murugan ,Sethupattu Vausi Street, Thiruvannamalai district ,Adam ,Dinakaran ,
× RELATED ஆரணி நகரில் கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்த காளைமாடு