×

நாகர்கோவில் செட்டிக்குளம் சந்திப்பில் மணல் மூடைகள் அடுக்கி மாதிரி ரவுண்டானா

*வாகனங்கள் செல்வதை ஆய்வு செய்ய திட்டம்

நாகர்கோவில் : நாகர்கோவில் செட்டிக்குளம் சந்திப்பில் ரவுண்டானா அமைக்கப்பட உள்ளது. இதற்காக மணல் மூடைகள் அடுக்கி முதற்கட்டமாக மாதிரி ரவுண்டானா அமைக்கப்பட உள்ளது.நாகர்கோவில் மாநகரில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெருக்கடியை தீர்க்கும் வகையில் மாநகராட்சி மேயர் மகேஷ் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக நெடுஞ்சாலைத்துறை உதவியுடன் முக்கிய சாலைகளில் விரிவாக்க பணிகள், நடைபாதைகள் அமைப்பு, ரவுண்டானா அமைப்பு உள்ளிட்ட பணிகள் நடக்கின்றன. மேலும் சாலைகளில் உள்ள ஆக்ரமிப்புகளையும் அகற்ற உத்தரவிட்டுள்ளார்.

ஏற்கனவே நாகர்கோவில் கலெக்டர் அலுவலக சந்திப்பில் பிரமாண்டமான முறையில் ரவுண்டானா அமைக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. ரவுண்டானா வந்த பின், அந்த பகுதியில் போக்குவரத்து நெருக்கடி குறைந்துள்ளது. அடுத்த கட்டமாக நாகர்கோவில் செட்டிக்குளம் சந்திப்பில் ரவுண்டானா அமைக்கப்பட உள்ளது.

செட்டிக்குளம் சந்திப்பில் 5 சாலைகள் சந்திக்கின்றன. சவேரியார் கோயில் சந்திப்பு, பீச் ரோடு சந்திப்பு, வேப்பமூடு சந்திப்பு, கலெக்டர் அலுவலக சந்திப்பு, ராமன்புதூர் சந்திப்பு என 5 சந்திப்புகளில் இருந்து செட்டிக்குளம் சந்திப்பு நோக்கி வாகனங்கள் வந்த வண்ணம் உள்ளன.

இதனால் ரவுண்டானா அமைந்தால் பெரும் நெருக்கடி தீரும் என்ற நம்பிக்கை உள்ளது. இதையடுத்து ரவுண்டானா அமைப்பதற்கான ஆய்வு நேற்று காலை மேயர் மகேஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் அரவிந்த், உதவி பொறியாளர் ஜெரால்டு ஆண்டனி, மாநகராட்சி பொறியாளர் பாலசுப்பிரமணியம், மாநகர நல அலுவலர் டாக்டர் ராம்குமார், சுகாதார ஆய்வாளர்கள் ராஜேஷ், சத்யராஜ், பணிகள் மேற்பார்வையாளர் ராஜா, டிராபிக் எஸ்.ஐ. சுமித் ஆல்ட்ரீன் உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.

செட்டிக்குளம் சந்திப்பில் எந்த மாதிரி வடிவில் ரவுண்டானா அமைக்க வேண்டும். தற்போதைய நிலையில் ரவுண்டானா அமைத்தால் வாகனங்கள் எவ்வாறு செல்ல முடியும் என்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது. முதற்கட்டமாக மணல் மூட்டைகள் அடுக்கி வைத்து மாதிரி ரவுண்டானா அமைத்து சோதனை ஓட்ட அடிப்படையில் வாகனங்களை இயக்க வேண்டும். அதன் பின்னர், ரவுண்டானா எந்த மாதிரி அமைக்க வேண்டும் என்பதை முடிவு செய்யலாம் என மேயர் கூறினார்.

அதன்படி விரைவில் மணல் மூடைகள் அடுக்கி மாதிரி ரவுண்டானா அமைக்கப்படுகிறது. இந்த ஆய்வின் போது மண்டல தலைவர் ஜவகர், திமுக நிர்வாகிகள் எம்.ஜே.ராஜன், ஷேக் மீரான் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.இதே போல் 1 வது வார்டுக்குட்பட்ட தோப்புவிளை ஊர் குளம் செல்லும் சாலையில் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி, 27 வது வார்டுக்கு உட்பட்ட வடிவீஸ்வரம் முத்தாரம்மன் கோயில் முன்புறம் உள்ள தெருவில் ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணியை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார். துணை மேயர் மேரி பிரின்சி லதா, மண்டல தலைவர் அகஸ்டினா கோகிலவாணி, கவுன்சிலர்கள் தங்கராஜா, சொர்ணத்தாய், கோபால சுப்பிரமணியம், மாநகர செயலாளர் ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பொதுப்பணித்துறை சாலையில் நடைபாதை

இந்த ஆய்வுக்கு பின், மேயர் மகேஷ் செட்டிக்குளம் சந்திப்பில் இருந்து வேப்பமூடு சந்திப்பு வரை ஆய்வு செய்தார். கடைகளுக்கு வெளியே உள்ள ஆக்ரமிப்புகளை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டார். பின்னர் மேயர் மகேஷ் நிருபர்களிடம் கூறுகையில், செட்டிக்குளம் சந்திப்பில் மணல் மூடைகள் அடுக்கி மாதிரி ரவுண்டானா அமைக்கப்டுகிறது. அதன் பின்னர் ரவுண்டானா அமைக்கும் பணிகள் தொடங்கும். இதே போல் செட்டிக்குளம் சந்திப்பு முதல் வேப்பமூடு வரையிலான பொதுப்பணித்துறை அலுவலக சாலையின் இருபுறமும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடைபாதை அமைத்து தர சம்மதம் தெரிவித்துள்ளனர். கோர்ட் ரோடு, பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலையில் அமைக்கப்பட்டுள்ளது போல் நடைபாதை அமைக்கப்பட உள்ளது. இது குறித்தும் ஆய்வு செய்து உள்ளோம் என்றார்.

மாநகராட்சிக்கு தடையின்மை சான்று

நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் சந்திப்பு முதல் கிருஷ்ணன்கோவில் சந்திப்பு வரையிலான பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் வாகன பார்க்கிங் அமைக்க, மாநகராட்சிக்கு நெடுஞ்சாலைத்துறை சார்பில் தடையின்மை சான்று வழங்கப்பட்டுள்ளது. இதற்கான நெடுஞ்சாலைத்துறைக்கு, மாநகராட்சி சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்வதாக மேயர் மகேஷ் கூறினார். விரைவில் பார்க்கிங் பணிகள் தொடங்கும் என கூறிய அவர், நெருக்கடியை தீர்க்க கார்கள், லாரிகள், வேன்கள் பார்க்கிங் ஆங்காங்கே இருப்பதை மாற்றி, ஒரே பகுதியில் வேன் பார்க்கிங், கார் பார்க்கிங், லாரிகள் நிறுத்தம் அமைக்கும் வகையில் ஆய்வு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மேயர் மகேஷ் கூறினார்.

The post நாகர்கோவில் செட்டிக்குளம் சந்திப்பில் மணல் மூடைகள் அடுக்கி மாதிரி ரவுண்டானா appeared first on Dinakaran.

Tags : Chettikulam Junction ,Nagercoil ,Nagercoil City ,
× RELATED இளம்பெண்களை ஆபாச வீடியோ எடுத்து...