×

திருச்சி அருகே பட்டா பெயர் மாற்றம் செய்ய தொழிலாளியிடம் ₹7,000 லஞ்சம் வாங்கிய விஏஓ கைது

*புரோக்கரும் சிக்கினார்

திருச்சி : திருச்சி அருகே பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓவை லஞ்சஒழிப்பு துறையினர் நேற்று கைது செய்தனர். உடந்தையாக இருந்த புரோக்கரும் கைது செய்யப்பட்டார்.திருச்சி மாவட்டம், மருங்காபுரி தாலுகா வேம்பனூர் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பன் (48). கூலி தொழிலாளியான இவர், கடந்த 1997ம் ஆண்டு வேம்பனூர் கிராமத்தில் 1.20 ஏக்கர் புஞ்சை நிலத்தை ரூ.10 ஆயிரத்திற்கு வாங்கி அதில் வீடு கட்டி வசித்து வருகிறார்.

இந்த இடத்திற்கு பட்டா பெயர் மாற்றம் பெற கடந்த 26.9.23ம் தேதி விண்ணப்பம் செய்திருந்தார். பின்னர் கடந்த டிசம்பர் 20ம் தேதி அவரது விண்ணப்பம் இணையதளத்தில் பார்த்தபோது நிராகரிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. தொடர்ந்து, கருப்பன் தனிப்பட்டா வேண்டி மீண்டும் கடந்த 19ம் தேதி இணையதளம் வாயிலாக விண்ணப்பித்தார். அவரது மனுவின் நிலை குறித்து கடந்த 22ம்தேதி பார்த்தபோது சம்பந்தப்பட்ட வேம்பனூர் கிராம நிர்வாக அலுவலரிடம் தனது மனு நிலுவையில் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, கருப்பன் வேம்பனூர் கிராம நிர்வாக அலுவலகம் சென்று அங்கிருந்த விஏஓ சோலைராஜ்(24) என்பவரை சந்தித்து தனது பட்டா மாறுதல் குறித்து கேட்டார். அதற்கு விஏஓ சோலைராஜ், பட்டா பெற ரூ.10 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு கருப்பன் “கொஞ்சம் குறைத்துக்கொள்ளுங்கள் சார், நான் வறுமையில் உள்ளவன்’’ என கேட்டதால், விஏஓ சோலைராஜ் ரூ.3000 குறைத்துக் கொண்டு ரூ.7000 கொடுங்கள்.

அப்படி கொடுக்காவிட்டால் போன முறை மாதிரியே ரிஜெக்ட் ஆகிடும் என்று சொல்லியுள்ளார்.இதில் லஞ்சம் கொடுக்க விரும்பாத கருப்பன், திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகம் சென்று புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்பு துறை லஞ்ச ஒழிப்புதுறை ஆலோசனை பேரில் கூலித்தொழிலாளியான கருப்பன் நேற்று காலை விஏஓ அலுவலகத்துக்கு சென்றார்.

அப்போது அங்கிருந்த விஏஓ சோலைராஜிடம் ரூ.7 ஆயிரத்தை லஞ்சமாக கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான ஆய்வாளர்கள் பிரசன்ன வெங்கடேஷ், பாலமுருகன் மற்றும் போலீசார், விஏஓ சோலைராஜை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும், விஏஓ சோலைராஜ் பணம் பெறுவதற்கு உடந்தையாக இருந்த புரோக்கர் பாஸ்கர்(48) என்பவரையும் கைது செய்தனர். லஞ்ச வழக்கில் கைதான விஏஓ சோலைராஜ் சொந்த ஊர் மணப்பாறையாகும்.

அச்சமின்றி புகாரளிக்கலாம்

லஞ்சம் குறித்து பொதுமக்கள் அளிக்கும் புகார் மீது திருச்சி லஞ்ச ஒழிப்புதுறை டிஎஸ்பி மணிகண்டன் நடவடிக்கை மேற்கொண்டு வருவதால் 94981-57799 என்ற அவரது செல்போன் எண்ணில் புகார் அளிக்கலாம். இந்த புகாரின் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால் உரிய ஆவணங்கள் இருந்தும் சான்றிதழ் வாங்க பணம் கேட்டால் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என லஞ்சஒழிப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.

The post திருச்சி அருகே பட்டா பெயர் மாற்றம் செய்ய தொழிலாளியிடம் ₹7,000 லஞ்சம் வாங்கிய விஏஓ கைது appeared first on Dinakaran.

Tags : VAO ,Trichy ,Vembanoor village ,Marungapuri taluka, Trichy district ,Dinakaran ,
× RELATED புதுக்கோட்டை அருகே தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட முன்னாள் விஏஓ கைது..!!