×

பழநி அருகே 4 லட்சம் ஆண்டு பழமையான கல்லாங்குழிகள் கண்டுபிடிப்பு

*பிரான்ஸ் மானுடவியல் அறிஞர் ஆய்வு

பழநி : பழநி அருகே பாலசமுத்திரத்தில் 4 லட்சம் வருடங்கள் பழமையான கல்லாங்குழிகளை பிரான்ஸ் நாட்டை சேர்ந்த அறிஞர் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே பாலசமுத்திரம் பேரூராட்சிக்குட்பட்ட குரும்பபட்டியில் மனித இனத்திற்கு முந்தைய இனமான ஹோமோஎரக்டஸ் எனும் இனம் உருவாக்கிய கல்லாங்குழிகள் அடங்கிய தொகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த மானுடவியல் அறிஞர் ரொமைன் சைமனல் அடங்கிய குழுவினர் நேற்று அதனை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:குரும்பபட்டி பவளக்கொடி அம்மன் கோயில் முன்புறம் வயலை ஒட்டிய பாறை பகுதியில் இந்த கல்லாங்குழிகள் செதுக்கப்பட்டுள்ளன. இந்த குழிகள் மனித இனத்துக்கு முந்தைய இனமான ஹோமோஎரக்டஸ் இனம் உருவாக்கிய குழிகள் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இங்கு மொத்தம் 191 குழிகள் உள்ளன. குழிகள் சிறியவை, இடைப்பட்டவை, பெரியவை, மிகப்பெரியவை என நான்கு வகைகளாக பிரிக்க முடிகிறது. மிகச்சிறிய குழிகள் 4 செ.மீ விட்டம், 1 செ.மீ ஆழம் முதல் மிகப்பெரிய குழிகள் 15 செ.மீ விட்டம் முதல் 13 செ.மீ ஆழம் வரை பல அளவுகளில் உள்ளன.குழிகளின் அமைப்பை மூன்று வகையாக பிரிக்க முடிகிறது.

ஒரு பெரிய குழியை சுற்றி வட்டமாக பல குழிகளாகவும் பெரிய குழியின் தொடர்ச்சியாக நீளமான வரிசையில் பல குழிகளும் பாறை சரிவில் ஒழுங்கற்ற தெளிப்பாக பல குழிகளும் செதுக்கப்பட்டுள்ளன. இந்த கல்லாங்குழிகள் கீழ்த்தொல் பழங்கால கால கட்டத்தை சேர்ந்தவை. இந்த பழநி கல்லாங்குழிகள் உலகின் 3வது தொன்மையான காலத்தை சேர்ந்தவை என கணிக்க முடிகிறது. ஏற்கனவே இந்தியாவில் மத்திய பிரதேசத்தில் பீம்பேட்காவில் கண்டறியப்பட்ட கல்லாங்குழிகள் 7 லட்சம் வருடங்களும், தென் ஆப்ரிக்கா கலகாரி பாலைவனத்தில் கண்டறியப்பட்ட கல்லாங்குழிகள் 4 முதல் 10 லட்சம் வருடங்களும் பழமையானது என்ற நிலையில் தற்போது பழநியில் கண்டறியப்பட்ட கல்லாங்குழிகளின் தொன்மை அதிகபட்சமாக 4 லட்சம் ஆண்டுகள் வரை செல்லும் என்பதால் இந்த கல்லாங்குழிகள் உலகின் மூன்றாவது தொன்மையான கல்லாங்குழிகள் என்ற பெருமையை பெறுகின்றன.

உலகெங்கிலும் காண கிடக்கும் இந்த கல்லாங்குழிகளை தொல் மனிதர்கள் ஏன், எதற்காக உருவாக்கினர் என்ற காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு காரணம் சொல்லப்படுகிறது. தமிழகத்திலும் திண்டுக்கல், தூத்துக்குடி, கிருஷ்ணகிரி தருமபுரி, திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இந்த கல்லாங்குழிகள் கண்டறியப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் கண்டறியப்பட்ட கல்லாங்குழிகள் பெரும்பாலும் தொல்பழங்கால புதைகுழிகளுக்கு அருகில் உருவாக்கப்பட்டிருப்பதால் இவை இறந்த முன்னோர்களின் நினைவாக உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று யூகிக்க முடிகிறது.

பழநி கல்லாங்குழிகள் உருவாக்கப்பட்ட பாறை ஆர்க்கியன் – புரட்டரோசோயிக் காலத்தை அதாவது 58 கோடி முதல் 250 கோடி ஆண்டுகளுக்கு முன்னால் உருவாகிய பாறைகளால் ஆனவை என்பதாலும் இந்த உருமாறிய பாறைகளில் செதுக்கப்பட்ட கல்லாங்குழிகள் 2 முதல் 4 லட்சம் வருடங்கள் பழமையானவை என்பதாலும் மனிதகுலத்தின் பரிணாமம், இடப்பெயர்வு, தொன்மை பற்றிய ஆய்வுகளுக்கும், தமிழினத்தின் தொன்மை பற்றிய ஆய்வுகளுக்கும் இந்தக் கல்லாங்குழிகளின் ஆய்வு பெரும்பங்கு வகிக்கும்.இவ்வாறு கூறினர்.

The post பழநி அருகே 4 லட்சம் ஆண்டு பழமையான கல்லாங்குழிகள் கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.

Tags : Palani ,Balasamudra ,Dindigul district ,Kurumbapatti ,Palasamutram ,
× RELATED வெளியாட்கள் நடமாட்டத்தை தடுக்க தீவிர ரோந்து: வனத்துறை நடவடிக்கை