×

மதுரை கீழக்கரையில் ரூ.62.78 கோடியில் கட்டப்பட்டுள்ள உலகின் பிரமாண்டமான ஏறுதழுவுதல் அரங்கத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

மதுரை: மதுரை கீழக்கரையில் ரூ.62.78 கோடியில் கட்டப்பட்டுள்ள உலகின் பிரமாண்டமான ஏறுதழுவுதல் அரங்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழர் அடையாளப் பெருமைக்குரியதாக வீர விளையாட்டாக ஏறுதழுவுதல் எனும் ஜல்லிக்கட்டு உள்ளது. இந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கென புகழ்மிக்கதாக மதுரை கிராமங்கள் இருக்கின்றன. இவ்வகையில் மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரை கிராமத்தில் 66 ஏக்கர் பரப்பளவில் ரூ.62.77 கோடி மதிப்பில் வாடிவாசல், ஒரே நேரத்தில் 5,000 பார்வையாளர்கள் அமர்ந்து காணும் வசதிகளுடன் மூன்றடுக்குப் பார்வையாளர் மாடம், ஏறுதழுவுதல் நடைபெறும் இடம், மிக முக்கிய விருந்தினர்கள் அமரும் இடம்,

ஏறுதழுவுதலில் பங்குபெறும் காளைகளின் எழுச்சி வடிவங்களைப் புலப்படுத்தும் அருங்காட்சியகம், ஒலி-ஒளி காட்சிக்கூடம், கால்நடை மருந்தகம், நூலகம், மாடுபிடி வீரர்களுக்கான தங்கும் அறைகள், புல்வெளிகளுடன்கூடிய தோட்டம் என அனைத்தையும் கொண்டுள்ள 83,462 சதுரடி பரப்புடைய மிகப் பிரம்மாண்டமான கட்டடமாக ஏறுதழுவுதல் அரங்கம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உலகின் பிரமாண்டமான ஏறுதழுவுதல் அரங்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ஜல்லிக்கட்டு அரங்கத்தின் வெளியே அமைக்கப்பட்டுள்ள ஏறு தழுவுதல் சிலையையும் முதல்வர் திறந்து வைத்தார்.

இன்று தொடங்கும் முதல் போட்டிக்காக 3,669 வீரர்கள், 9,312 காளைகள் ஆன்லைனில் பதிவு செய்திருந்த நிலையில், 500 காளைகள், 300 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு களமறிக்கப்படுகின்றனர். இந்த போட்டியில் பங்கேற்கும் சிறந்த காளைகள் தேர்வு செய்யப்பட்டு முதலிடம் பிடிக்கும் காளைக்கு ரூ.1 லட்சம், இரண்டாமிடம் பிடிக்கும் காளைக்கு ரூ.75 ஆயிரம், மூன்றாமிடம் பிடிக்கும் காளைக்கு ரூ.50 ஆயிரம் அரசு தரப்பில் உரிமையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. அதேபோன்று சிறந்த மாடுபிடி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு முதலிடம் பிடிக்கும் வீரருக்கு ரூ.1 லட்சம், இரண்டாமிடம் பிடிக்கும் வீரருக்கு ரூ.75 ஆயிரம், மூன்றாமிடம் பிடக்கும் வீரருக்கு ரூ.50ஆயிரம் அரசு தரப்பில் வழங்கப்படும்.

இதுதவிர, முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் சிறந்த காளைக்கு ரூ.16 லட்சம் மதிப்பிலான சொகுசு கார், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் சிறந்த வீரருக்கு இதே மதிப்பிலான சொகுசு கார் பரிசு வழங்கப்பட உள்ளது. 2ம் இடம் பிடிக்கும் வீரர், காளைகளின் உரிமையாளருக்கு தலா ஒரு பைக் பரிசு வழங்கப்பட உள்ளது. மேலும், பங்கேற்கும் காளைகளுக்கு தங்கக்காசுகள், சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

The post மதுரை கீழக்கரையில் ரூ.62.78 கோடியில் கட்டப்பட்டுள்ள உலகின் பிரமாண்டமான ஏறுதழுவுதல் அரங்கத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Madurai ,K. Stalin ,Madurai Lower Bank ,Jallikatu ,
× RELATED தமிழ்நாட்டின் மீது பிரதமர் மோடிக்கு...