×

அயோத்தியில் 2-வது நாளாக குவிந்த பக்தர்கள்: ராமரை தரிசிக்க கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் விடிய விடிய காத்திருப்பு

அயோத்தி: உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் பாலா ராமரை வழிபட 2-வது நாளாக ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிந்துள்ளனர். அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலில் பால ராமர் சிலை பிராண பிரதிஷ்டை விழா நேற்று முன்தினம் கோலாகலமாக நடந்தது. 5 வயது பால ராமர் சிலைக்கு பிரதமர் மோடி சிறப்பு பூஜைகள் செய்து கோயிலை முறைப்படி திறந்து வைத்தார். இதில், 7,000 சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்று பால ராமரை தரிசித்தனர். பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை.

இந்நிலையில், நேற்று முதல் பொதுமக்கள் தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. காலை 7 மணி முதல் முற்பகல் 11.30 மணி வரையிலும், மதியம் 2 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் பால ராமரை தரிசிக்கலாம் என ராம ஜென்ம பூமி அறக்கட்டளை நிர்வாகம் அறிவித்திருந்தது. இதனால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து நேற்று முன்தினமே வந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் இரவு முதலே கோயில் பிரதான வாயில்களுக்கு வெளியே மணிக்கணக்கில் காத்திருந்தனர்.

காலையில் கோயில் கதவும் திறக்கப்பட்டதும், ராமர் உருவம் பதித்த கொடிகளுடன் ஜெய் ஸ்ரீராம் கோஷமிட்டபடி கோயிலுக்குள் முண்டியடித்துச் சென்றனர். இதனால் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ராமர் பாதை வழியாக நீண்ட வரிசையில் பக்தர்கள் கோயிலுக்கு சென்று மூலவர் பால ராமரை தரிசித்துச் சென்றனர். பிற்பகலுக்கு பிறகு பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத அளவுக்கு அதிகரித்தது. நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் பாதுகாப்பு போலீசார் திணறினர். சில பக்தர்கள் கூட்டத்தில் காயமடைந்தனர். இதனால் பரபரப்பு நிலவியது.

இந்நிலையில் அயோத்தியில் 2-வது நாளாக ஆயிக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் போர்வைகளுடன் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். ‛ஜெய் ஸ்ரீராம்’ கோஷமிட்டு கையில் காவி கொடியுடன் பால ராமரை தரிசித்து பக்தர்கள் குவிந்துள்ளனர்.

The post அயோத்தியில் 2-வது நாளாக குவிந்த பக்தர்கள்: ராமரை தரிசிக்க கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் விடிய விடிய காத்திருப்பு appeared first on Dinakaran.

Tags : Ayothi ,Rama ,Ayodhya ,Bala Ram ,Uttar Pradesh ,Pala ,Ramar ,Pala Ram Pranishta ,Ramar Temple ,Ayothia ,Pala Ramar ,
× RELATED ராம நவமி நாளில் அயோத்தி ராமரின்...