×

மாணவர்கள் படிக்கட்டில் தொங்குவதை தடுக்க சாதாரண கட்டண மாநகர பேருந்துகளிலும் தானியங்கி கதவு உள்ளிட்ட சிறப்பு வசதி: அதிகாரிகள் நடவடிக்கை

சென்னை, ஜன.24: சென்னை மாநகர பேருந்துகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி பயணிப்பதால், அடிக்கடி விபத்து ஏற்படுவதை தடுக்கும் வகையில், எம்டிசி நிர்வாகம் சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இயங்கி வரும் மாநகர பேருந்துகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கி கொண்டு செல்வது வாடிக்கையாகி வருகிறது. அதுமட்டுமின்றி பேருந்து புறப்பட்ட உடன் ஓடி வந்து ஏறுவது, ஒரு காலை தரையில் தேய்த்தபடி செல்வது, ஜன்னல் கம்பியை பிடித்து தொங்கிக் கொண்டு செல்வது, படிக்கட்டில் மொத்தமாக நின்று கொண்டு பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்துவது, தாளம் போட்டுக் கொண்டு செல்வது, கேலி, கிண்டல் செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

இதன் காரணமாக சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுவதுடன், படிக்கட்டில் தொங்கியபடி பயணிக்கும் மாணவர்கள் பலர் அவ்வப்போது தவறி கீழே விழுந்து உயிரிழக்கும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக போக்குவரத்து போலீசார் பலமுறை எச்சரித்தும், விழிப்புணர்வு ஏற்படுத்தியும் யாரும் திருந்தியபாடில்லை. இதனால் பல வழித்தடங்களில் திடீரென ஓட்டுநர்கள் பேருந்தை நடுரோட்டில் நிறுத்தி விடுகின்றனர். படிக்கட்டில் இருந்து உள்ளே ஏறினால் மட்டுமே பேருந்து இயக்கப்படும் என்று எச்சரிக்கின்றனர். அப்போது ஓட்டுநருக்கும், மாணவர்களுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு விடுகிறது. சில நேரங்களில், ஓட்டுனர் மற்றும் கண்டக்டர்கள் மீது தாக்குதல் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. இதனால், சக பயணிகளுக்கு கால தாமதம் ஏற்பட்டு பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன.

பேருந்துகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் படியில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்து வரும் காட்சிகள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வருகிறது. சமீபத்தில், குன்றத்தூர் பகுதியில் பள்ளி மாணவன் ஒருவர் பேருந்து படியில் பயணம் செய்தபோது, கீழே விழுந்து தனது இரண்டு கால்களை இழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. எனவே, இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில், இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, படிக்கட்டில் தொங்கியபடி மாணவர்கள் பயணம் செய்வதை தடுக்க, சாதாரண கட்டண பேருந்துகளிலும் தானியங்கி கதவுகள் அமைக்கப்பட உள்ளன. அதேபோல், படிக்கட்டின் இருபுறமும் உள்ள ஜன்னல் கம்பிகள் கண்ணாடி மூலம் மூடப்பட்டுள்ளது. இதுதவிர அவசர உதவி எண்கள், சிசிடிவி கேமரா, ஜிபிஎஸ் வசதி உள்ளிட்டவைகளும் ஏற்படுத்தப்பட உள்ளன. இதற்கான மாதிரி பேருந்து தற்போது தயாராகி, சோதனை முறையில் இயக்கப்பட்டு வருகிறது. விரைவில் அனைத்து மாநகர பேருந்துகளிலும் இந்த வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. இதன் மூலம் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்வது, விபத்தில் சிக்குவது தடுக்கப்படும், என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கல்வி நிலையங்களில் விழிப்புணர்வு
சென்னை மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறுகையில், ‘மாநகர பேருந்துகளில் பள்ளி, கல்லூரி மாணவர்களை பாதுகாப்பாக உட்புறம் வருமாறும், படிக்கட்டு பயணத்தை அறவே தவிர்க்குமாறும் ஒவ்வொரு பேருந்து நிறுத்தத்திலும் பேருந்து ஓட்டுநர், நடத்துநரால் அறிவுறுத்தப்படுகிறது. மேலும், பார்வையாளர்கள், வருவாய்ப்பிரிவு அலுவலர்கள் உள்ளிட்டோரும் இந்த பணிகளை மேற்கொள்கின்றனர். பள்ளிகளுக்கு நேரில் சென்று படிக்கட்டு பயணத்தால் ஏற்படும் ஆபத்து, உயிரிழப்பு போன்ற கடுமையான விளைவுகளை எடுத்துரைத்து, ஆபத்தான பயணத்தை தவிர்த்து பாதுகாப்பான முறையில் பயணிக்க வேண்டும் என மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரிகள் மற்றும் காவல் அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக அவ்வப்போது ஆசிரியர்களும் மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் எனத் தலைமை ஆசிரியர்களிடம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். ஆபத்தான முறையில் பயணம் செய்யும் மாணவர்களைக் கண்டறிந்து, பெற்றோர் வாயிலாக நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் சம்பந்தப்பட்ட கல்வி நிர்வாகம் மற்றும் காவல்துறைக்கு கடிதம் அனுப்பப்படுகிறது. காலை, மாலை நேரங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுவதோடு பள்ளி, கல்லூரி அருகே பேருந்து நிறுத்தம் கோரும் மனுக்கள் உடனுக்குடன் பரிசீலிக்கப்பட்டு நிறைவேற்றப்படுகின்றன,’’ என்றனர்.

The post மாணவர்கள் படிக்கட்டில் தொங்குவதை தடுக்க சாதாரண கட்டண மாநகர பேருந்துகளிலும் தானியங்கி கதவு உள்ளிட்ட சிறப்பு வசதி: அதிகாரிகள் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Chennai ,MTC administration ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...