×

2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் அஜந்தா மேம்பாலம் இடிக்கும் பணி தொடங்கியது

சென்னை: மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்திற்காக அஜந்தா மேம்பாலத்தை இடிக்கும் பணிகள் தொடங்கியது. இதற்காக, போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டதால் சாலையை கடந்து செல்ல சிரமமாக உள்ளதாக வாகன ஓட்டிகள் கருத்து தெரிவித்தனர். சென்னையின் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், பொதுப் போக்குவரத்தை மேம்படுத்தவும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. முதல்கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நிறைவடைந்து 54.1 கிலோ மீட்டர் தொலைவிற்கு பச்சை மற்றும் நீலம் என இரண்டு வழித்தடங்களில் ரயில்கள் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116.1 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. அதில், 3வது வழித்தடம் 45.8 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாதவரம் பால் பண்ணை முதல் சிறுசேரி சிப்காட் வரையிலும், 4வது வழித்தடம் 26.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலும், 5வது வழித்தடம் 47 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையில் ரூ.63,246 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் 119 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கிறது. இதனிடையே ஒன்றிய அரசு மெட்ரோ பணிக்காக போதுமான நிதி ஒதுக்காத நிலையிலும் மாநில அரசின் உதவியுடன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில் முதல் கட்ட திட்டத்திற்கு ஆலந்தூர் எப்படி மையமாக இருந்ததோ அதுபோல, இரண்டாம் கட்ட திட்டத்திற்கு ஓஎம்ஆர் மையமாக அமைகிறது. அதன்படி ஓஎம்ஆர் சாலையில் அமைக்கப்படும் மெட்ரோ ரயில் திட்ட பணிகள் முடிந்து 2027ல் போக்குவரத்து தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 2027க்குள் சிறுசேரி முதல் பெருங்குடியில் உள்ள நேரு நகர் வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 20 கி.மீ நீள பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. இந்த வழித்தடத்தில் நேரு நகர், கந்தன்சாவடி, பெருங்குடி, துரைப்பாக்கம், மேட்டுக்குப்பம், பிடிசி காலனி, ஒக்கியம்பேட்டை, காரப்பாக்கம், ஒக்கிய துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், சோழிங்கநல்லூர் ஏரி -1 மெட்ரோ, சோழிங்கநல்லூர் ஏரி-2 மெட்ரோ, செம்மஞ்சேரி- 1 மெட்ரோ, செம்மஞ்சேரி-2 மெட்ரோ, காந்தி நகர், நாவலூர் மெட்ரோ, சிறுசேரி, சிறுசேரி சிப்காட்-I மெட்ரோ மற்றும் சிறுசேரி சிப்காட் -2 மெட்ரோ ஆகிய நிலையங்கள் அமைக்கப்படும்.

இந்த கட்டுமான பணி காரணமாக சென்னையில் பல்வேறு பாலங்கள் இடிக்கப்பட்டு வருகின்றன. அதன் முதல்கட்டமாக மயிலாப்பூரில் உள்ள ராதாகிருஷ்ணன் சாலையில் அமைந்துள்ள அஜந்தா பாலம் இடிக்கப்படுகிறது. இங்கு 35 மீ ஆழத்தில் ஆழமான சுரங்கங்களை அமைக்க உள்ளனர். அதன்படி, இந்த வழித்தடத்தில் மயிலாப்பூர், ராயப்பேட்டை ஆகிய பகுதிகளில் சுரங்கம் வாயிலாக மெட்ரோ ரயில் இயக்கப்பட உள்ளது. மயிலாப்பூரை இணைக்கும் மெட்ரோ நிலையங்கள் அனைத்தும் 2028ம் ஆண்டில் பொதுமக்களுக்காக திறக்கப்படும். திருமயிலை ரயில் நிலையம் மற்றும் அதனுடன் தொடர்புடைய சுரங்கப்பாதைகள் கட்டுவதன் காரணமாக இங்குள்ள பாலம் இடிக்கப்பட உள்ளது. இந்த சுரங்கம் அமைக்கும் பணிக்காக ராயப்பேட்டை – மயிலாப்பூரை இணைக்கும் முக்கிய பாலமான அஜந்தா மேம்பாலம் இடிக்கப்படுகிறது. மெட்ரோ ரயில் வழித்தடத்தில் பூமிக்கு அடியில் 30 அடி ஆழத்திற்கு பாலத்தின் தூண்கள் இருப்பதால் பாலத்தை அகற்ற வேண்டியுள்ளது. அஜந்தா மேம்பாலத்தின் ஒரு பகுதி அதாவது ராதாகிருஷ்ணன் சாலை முதல் ராயப்பேட்டை சந்திப்பு வரை பாலம் இடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதற்காக ராயப்பேட்டை சந்திப்பு முதல் அடையாறு வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 7ம் தேதி முதல் ராயப்பேட்டை சந்திப்பில் இருந்து மயிலாப்பூர் செல்லும் வாகனங்கள் வி.பி.ராமன் சாலை சென்று ராதாகிருஷ்ணன் சாலை வழியாக மயிலாப்பூர் செல்கின்றன.அதேபோல மயிலாப்பூரில் இருந்து வரும் வாகனங்கள் ராதாகிருஷ்ணன் சாலை சென்று டிடிகே சாலை வழியாக ராயப்பேட்டை செல்கின்றன. 2 நாட்களுக்கு முன்பே பாலத்தின் ஓரம் உள்ள இரும்பு பாதுகாப்பு தடுப்புகள் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. ேநற்றைய தினம் நள்ளிரவு முதல் ராயப்பேட்டை சந்திப்பில் இருந்து பாலத்தை இடிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. 2 பொக்லைன் இயந்திரங்களுடன் பாலத்தை இடிக்கும் பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் முடிந்தவுடன் இந்த பகுதியில் சென்னை மெட்ரோ ரயில் மற்றும் மாநகராட்சி சார்பில் புதிய மேம்பாலம் கட்டப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.பாலம் இடிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 வாரங்களாக பாலத்தின் இருபுறங்களில் வாகனங்கள் தொடர்ந்து இயக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில், முழுவதுமாக மூடப்பட்ட நிலையில் ஜம்மி கட்டிடம் உள்பட அப்பகுதிகளில் உள்ள அனைத்து கட்டிடங்களும் மெட்ரோ பணிக்காக இடிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. மேலும் தினசரி இந்த பாலத்தை பயன்படுத்தி வந்த வாகன ஓட்டிகள் போக்குவரத்து மாற்றம் காரணமாக மாற்று பாதையில் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் முறையான போக்குவரத்து மாற்றத்தை ஏற்படுத்தி எளிதில் செல்லக்கூடிய வகையில் வழிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என வாகன ஓட்டிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

* மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் முடிந்தவுடன் இந்த பகுதியில் சென்னை மெட்ரோ ரயில் மற்றும் மாநகராட்சி சார்பில் புதிய மேம்பாலம் கட்டப்படும்.

The post 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் அஜந்தா மேம்பாலம் இடிக்கும் பணி தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Ajanta ,CHENNAI ,Dinakaran ,
× RELATED தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிந்த...