×

புதிய தலைமை செயலக கட்டிடம் தொடர்பான புகார் அதிமுக முன்னாள் எம்பியை வழக்கில் இணைக்க திமுக எதிர்ப்பு: ஐகோர்ட்டில் விசாரணை தள்ளிவைப்பு

சென்னை: புதிய தலைமை செயலக கட்டிடம் தொடர்பான மேல்முறையீடு வழக்குகளில் அதிமுக முன்னாள் எம்.பி. ஜெயவர்தனை இணைப்பதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2006-11ம் ஆண்டுகளில் திமுக ஆட்சியில் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரையடுத்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஒருநபர் ஆணையத்தை கலைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆணையம் சேகரித்த ஆதாரங்களை லஞ்ச ஒழிப்புத் துறையிடம் ஒப்படைக்கும்படியும், முகாந்திரம் இருந்தால் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படியும் 2018ல் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதனடிப்படையில், விசாரணை நடத்த அனுமதி அளித்து 2018ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்து மு.க.ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து அதிமுக ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இவற்றை திரும்பப்பெற உள்ளதாக நீதெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அரசின் மேல்முறையீடு வழக்குகளில் தன்னை இணைக்க கோரி அதிமுக முன்னாள் எம்.பி. ஜெ.ஜெயவர்தன் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஜெயவர்தன் அளித்த புகாரில் லஞ்ச ஒழிப்புத் துறை நடத்திய விசாரணை அறிக்கையை மூடி முத்திரையிட்ட உறையில் தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டது. இந்த வழக்கு நீதிபதிகள், ஆர்.சுரேஷ்குமார், மற்றும் நீதிபதி கே.குமரேஷ்பாபு அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, லஞ்ச ஒழிப்பு துறையின் அறிக்கையை மூடி முத்திரையிட்ட கவரில் தாக்கல் செய்தார்.தொடர்ந்து, ஏற்கனவே அளிக்கப்பட்ட புகாரை போலவே இருந்ததால், ஜெயவர்தனின் புகார் முடித்து வைக்கப்பட்டதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தன் புகாரில் முறையாக விசாரணை நடத்தாமல், உயர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கை வாபஸ் பெற அரசு ஆர்வம் காட்டுவதாலேயே, தனது தரப்பு விளக்கத்தை கேட்ட பிறகே நீதிமன்றம் முடிவெடுக்க வேண்டுமென்று ஜெயவர்தன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி வாதிட்டார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி, மேல்முறையீடு வழக்கை வாபஸ் பெற அரசு முடிவெடுத்த நிலையில் அதை ஏற்காமல் நீதிமன்றம் தாமதம் செய்ய முடியாது. இந்த வழக்கில் ஜெயவர்தன் தரப்பு விளக்கத்தை கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்று கடும் ஆட்சேபம் தெரிவித்தார். அப்போது, அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், ஆணையத்தை கலைத்து உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததை இந்த அரசு ஏற்றுக்கொள்வதால், மேல்முறையீடு வழக்குகளை வாபஸ் பெற முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதில் தன்னை இணைத்துக் கொள்ள ஜெயவர்தனுக்கு அடிப்படை முகாந்திரம் இல்லை என்று வாதிட்டார். பின்னர் விசாரணையை பிப். 1க்கு தள்ளிவைத்த நீதிபதிகள், அன்றைய தினம் ஜெயவர்தன் மனு விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்து அனைத்து தரப்பும் வாதிடலாம் என்று உத்தரவிட்டனர்.

The post புதிய தலைமை செயலக கட்டிடம் தொடர்பான புகார் அதிமுக முன்னாள் எம்பியை வழக்கில் இணைக்க திமுக எதிர்ப்பு: ஐகோர்ட்டில் விசாரணை தள்ளிவைப்பு appeared first on Dinakaran.

Tags : DMK ,AIADMK ,CHENNAI ,Madras High Court ,M.K.Stal ,Jayawardene ,Chennai Omanturar government ,ICourt ,Dinakaran ,
× RELATED ‘அமைதிப்படை’ அமாவாசை அவதாரம் எடுத்து...