×

விமான நிலைய இரண்டாவது ஓடு பாதையில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டி பலூன்: நிர்வாக குழுவினரிடம் ஒப்படைப்பு

சென்னை: சென்னை விமான நிலைய ஓடுபாதை பகுதிக்குள் நேற்றுமுன்தினம் மாலை 4.20 மணி அளவில் காற்றில் பறந்து வந்த மிகப்பெரிய மஞ்சள் நிற பலூன் ஒன்று, விமான நிலைய 2வது ஓடு பாதையில் வந்து விழுந்தது. சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் கண்காணிப்பு கேமராக்களில் இந்த காட்சியை பார்த்து பெரும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக, விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் விமான பாதுகாப்பு பிரிவான பி சி ஏ எஸ் அதிகாரிகளுக்கு அவசர தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து, பாதுகாப்பு அதிகாரிகள் 2வது ஓடு பாதைக்கு விரைந்து சென்றனர். ஓடுபாதையில் கிடந்த சுமார் 5 அடி வட்டமுடைய பெரிய பலூனை அகற்றினர். அந்த மஞ்சள் நிற பெரிய பலூன் நீளமான நைலான் கயிறுடன் வந்து விழுந்து கிடந்தது. அதை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடந்து வரும் கேலோ இந்தியா விளையாட்டு போட்டி விளம்பரத்துக்காக, வானில் பறக்க விடப்பட்ட பலூன் என தெரியவந்தது. கயிறு அறுந்து, காற்றில் பறந்து வந்த பலூன், சென்னை விமான நிலைய ஓடுபாதைக்குள் விழுந்துள்ளது என்று தெரிந்தது.

ஆனால் அந்த நேரத்தில் விமான நிலைய 2வது ஓடு பாதையில், விமானங்கள் எதுவும் இல்லை. பொதுவாக பிற்பகல் 2.30 மணியிலிருந்து மாலை 4.30 மணி வரையில் 2வது ஓடு பாதையில் அதிகமாக விமானங்கள் இயக்கப்படுவது கிடையாது. அந்த நேரத்தில் கோவை, கொச்சி, டெல்லி, ஜெய்ப்பூர் ஆகிய இடங்களில் இருந்து வந்த 4 விமானங்கள் முதல் ஓடு பாதையில் வந்து தரை இறங்கின. அதேபோல், சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய விமானங்களும் முதல் ஓடுபாதையை பயன்படுத்தியதால் 2வது ஒரு பாதை காலியாக இருந்தது. இதனால் பெரும் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை. அதேபோல் விமான சேவைகளுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
இது சம்பந்தமாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் கேலோ இந்தியா விளையாட்டு நிர்வாகக் குழுவினருக்கு தகவல் கொடுத்து அவர்களிடம் பலூனை ஒப்படைத்தனர்.

The post விமான நிலைய இரண்டாவது ஓடு பாதையில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டி பலூன்: நிர்வாக குழுவினரிடம் ஒப்படைப்பு appeared first on Dinakaran.

Tags : Gallo India Games Balloon ,Airport ,Second ,CHENNAI ,Chennai airport ,Gallo India Games Balloon on ,Second Runway ,Dinakaran ,
× RELATED அதிக பயணிகள் கையாண்டதில் சென்னை விமான நிலையம் 3வது இடம்