×

முதன்முறையாக ஏர் இந்தியா நிறுவனத்தின் அதிநவீன ஏர் பஸ் கி 350 ரக சொகுசு விமானம் சோதனை ஓட்டம்: சென்னையில் இருந்து பெங்களூருக்கு 37 நிமிடங்களில் சென்றது

மீனம்பாக்கம்: மும்பையில் இருந்து ஏர் இந்தியாவின், அதிநவீன ஏர் பஸ் கி 350 ரக சொகுசு விமானம், சோதனை அடிப்படையில் முதன்முறையாக சென்னை வந்துவிட்டு, பெங்களூரு புறப்பட்டு சென்றது. இந்த சொகுசு விமானம், எரிபொருளை சேமிப்பதோடு, சுற்றுச்சூழல் பாதிக்கப்படாமல் அதிர்வுகள் இல்லாமல் காற்றில் மிதந்த படி அதிவேகமாக செல்லக்கூடியது. மும்பையில் இருந்து திங்கட்கிழமை காலை 11.25 மணிக்கு, ஏர் பஸ் கி 350 என்ற மிகப்பெரிய அதிநவீன ஏர் இந்தியா விமானம் புறப்பட்டு, பகல் 12.48 மணிக்கு, சென்னை உள்நாட்டு விமான நிலையம் வந்து சேர்ந்தது. அதன்பின்பு, இந்த அதிநவீன மிகப் பெரிய ஏர் இந்தியா விமானம் பிற்பகல் 2.17 மணிக்கு, சென்னையில் இருந்து புறப்பட்டு பிற்பகல் 2.54 மணிக்கு பெங்களூரு சென்றடைந்தது. இந்த ஏர் பஸ் கி 350 ரக விமானத்தை ஏர் இந்தியா நிறுவனம் புதிதாக வாங்கியுள்ளது. இந்த விமானத்தில் 350 பயணிகளில் இருந்து 400 பயணிகள் வரை பயணம் செய்யும் வசதி கொண்டது. மேலும் எரிபொருளை மிகுந்த சிக்கனமாக கையாளும் தன்மையுடையது. இதனால் இந்த விமானம் 25% எரிபொருளை சேமிக்கும் திறனுடையது. விமானம் பறக்கும்போது மிகக் குறைந்த அளவே, கார்பன் டை ஆக்சைடு என்ற கழிவுகளை வெளியேற்றும்.

இதனால், காற்று மாசுபடாததோடு, சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தாது. விமானம் வானில் பறக்கும்போதும் புறப்படும்போதும் தரையிறங்கும்போதும் அதிக அதிர்வுகளை ஏற்படுத்தாமல் காற்றில் மிதந்தபடி பறந்து செல்லும். இந்த விமானம் அதிவேகமாக செல்லக்கூடியது. மும்பை- சென்னை இடையே, வழக்கமாக விமான பயண நேரம் 120 நிமிடங்கள் (2 மணி நேரம்). ஆனால், இந்த விமானம் நேற்று முன்தினம் 83 நிமிடங்களில் (1 மணி 23 நிமிடங்கள்) மும்பையில் இருந்து சென்னை வந்துள்ளது.அதேபோல், சென்னையில் இருந்து பெங்களூரு செல்வதற்கு வழக்கமான பயண நேரம் 70 நிமிடங்கள். ஆனால் இந்த விமானம் சென்னையில் இருந்து பெங்களூருக்கு 37 நிமிடங்களில் சென்றடைந்தது. ஏர் இந்தியா நிறுவனம் புதிதாக வாங்கியுள்ள இந்த அதிநவீன சொகுசு விமானத்தை, சோதனை அடிப்படையில் மும்பையில் இருந்து சென்னைக்கும் அதன் பின்பு, பெங்களூருக்கும் இயக்கப்பட்டுள்ளது. இதேபோன்ற பெரிய ரக, அதிநவீன விமானம், சென்னை விமான நிலையத்தில் முதன்முறையாக வந்து தரை இறங்கி, புறப்பட்டுச் சென்றுள்ளதாகவும், இந்தியாவில் உள்ள விமான நிறுவனங்களில் முதன்முறையாக ஏர் இந்தியா நிறுவனம் இந்த விமானத்தை இந்தியாவிற்குள் இயக்க தொடங்கியுள்ளதாகவும் சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

The post முதன்முறையாக ஏர் இந்தியா நிறுவனத்தின் அதிநவீன ஏர் பஸ் கி 350 ரக சொகுசு விமானம் சோதனை ஓட்டம்: சென்னையில் இருந்து பெங்களூருக்கு 37 நிமிடங்களில் சென்றது appeared first on Dinakaran.

Tags : Air India ,Chennai ,Bangalore ,Meenambakkam ,Mumbai ,Bengaluru ,
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...