×

பல்கலை மாணவர்களை சந்திக்க அனுமதி மறுப்பு கவுகாத்தியில் ராகுல் காந்தி யாத்திரை தடுத்து நிறுத்தம்: தொண்டர்கள் மீது போலீஸ் தடியடி

கவுகாத்தி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையை கவுகாத்திக்குள் நுழையவிடாமல் போலீசார் தடுத்து நிறுத்தினர். எதிர்த்து போராடிய கட்சித் தொண்டர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். காங்கிரஸ் முன்னாள் தலைவரான ராகுல்காந்தி மணிப்பூரில் தொடங்கிய நீதி யாத்திரை கடந்த வியாழனன்று அசாமை வந்தடைந்தது. அசாமில் 8 நாட்கள் யாத்திரை மேற்கொள்ள ராகுல் முடிவு செய்திருந்தார். இந்நிலையில் வடக்கு லக்கீம்பூரில் ராகுலின் யாத்திரையை வரவேற்கும் போஸ்டர், பேனர்கள் கிழித்து சேதப்படுத்தப்பட்டன. யாத்திரையில் பங்கேற்ற வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டது. ஹைபோராகானில் உள்ள ஸ்ரீசங்கர் தேவ் சத்ரா கோயிலுக்கு செல்வதற்கு ராகுல்காந்திக்கு அதிகாரிகள் அனுமதி தரவில்லை.

இந்நிலையில் கவுகாத்தியில் நீதி யாத்திரை நுழைந்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் யாத்திரையை அனுமதிக்க முடியாது என்று முதல்வர் ஹிமந்தா பிஸ்வா தெரிவித்து இருந்தார். இதேபோல் நேற்று கவுகாத்திக்கு சென்ற ராகுல் தலைமையிலான நீதி யாத்திரையை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். பொறுமையிழந்த அவரது ஆதரவாளர்கள் அங்கிருந்த தடுப்புகளை அகற்றி முழக்கமிட்டனர். அப்போது தொண்டர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.
தம்டோமாவில் பேசிய ராகுல்காந்தி, அசாம் முதல்வர் யாத்திரைக்கு இடர்பாடுகளை ஏற்படுத்துகிறார். ஆனால் அவரது நடவடிக்கைகள் யாத்திரைக்கு பயனளிக்கும் மற்றும் விளம்பரத்தை பெற்று தரும், நாட்டிலேயே ஊழல் மிகுந்த முதல்வர்களில் அசாம் முதல்வரும் ஒருவர். நீதி யாத்திரை அசாமின் முக்கிய பிரச்னையாக மாறியுள்ளது என்றார்.

ராகுலின் யாத்திரையானது அசாமில் இருந்து மேகாலயா எல்லை மாவட்டமான ரிபோய் மாவட்டத்துக்கு சென்றது. அங்குள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள், பொதுமக்கள், கட்சி தலைவர்களுடன் தனித்தனியாக ராகுல் கலந்துரையாடுவதாக நேற்று முன்தினம் பிற்பகல் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் ராகுலுக்கு வழங்கிய அனுமதியை பல்கலைக்கழகம் திரும்ப பெற்றுவிட்டது. இதனால் இந்த நிகழ்ச்சி தனியார் ஒட்டலுக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில் யாத்திரை பேருந்தில் இருந்தபடி சாலையோரத்தில் நின்றிருந்த மாணவர்கள், பொதுமக்களிடையே ராகுல் பேசியதாவது, நான் உங்கள் பல்கலைக்கழகத்துக்கு வர விரும்பினேன். என்ன நடந்தது என்றால், ஒன்றிய உள்துறை அமைச்சர் அசாம் முதல்வரை அழைத்துள்ளார்.

முதல்வர் அலுவலகம் பல்கலைக்கழக தலைமையை தொடர்புகொண்டுள்ளது. ராகுல்காந்தி மாணவர்களுடன் பேச அனுமதிக்கக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. ராகுல்காந்தி வருகிறாரா இல்லையா என்பது முக்கியமில்லை. நீங்கள் விரும்பிய யாருடைய பேச்சையும் நீங்கள் கேட்பதற்கு அனுமதிக்கப்படுவது தான் முக்கியமானது. நீங்கள் விரும்பியதை செய்ய அனுமதிக்கப்படுவது பற்றிய கற்பனை உங்களுக்கு இருக்கும். முதல்வர் செய்ய முயற்சிப்பதை நீங்கள் ஏற்றுக்கொள்ளாததால் தான் இங்கு வந்துள்ளீர்கள். உங்களை கண்டு பெருமைப்படுகிறேன். உங்களை அவர்கள் அடிமைகளாக மாற்ற விரும்புகிறார்கள். ஆனால் பிரபஞ்சத்தில் உள்ள எந்த சக்தியாலும் அதனை செய்ய முடியாது” என்றார்.

* நீதி விசாரணை தேவை
அசாமில் இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையின்போது மாநில காங்கிரஸ் தலைவர் புபேன் போரா மீது தாக்குதல் நடத்தியது மற்றும் பாஜவின் மோசமான நடவடிக்கை குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மாநில சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவர் தேபாப்பிரதா சைகியா ஆளுநர் குலாப் சந்த் கட்டாரியாவிடம் கோரிக்கை மனு வழங்கியுள்ளார்.

* ராகுல் மீது வழக்கு பதிய உத்தரவு
கவுகாத்தியில் நீதி யாத்திரை தடுத்து நிறுத்தப்பட்டதால் அங்கிருந்த தடுப்புக்களை ராகுல் ஆதரவாளர்கள் அகற்றினார்கள். இது குறித்து முதல்வர் ஹிமந்த பிஸ்தா டிவிட்டர் பதிவில்,‘‘இது அசாம் கலாசாரத்தின் ஒரு பகுதி அல்ல. எங்களுடையது மிகவும் அமைதியான மாநிலம், நக்சலைட் தந்திரங்கள் நமது கலாச்சாரத்துக்கு முற்றிலும் அந்நியமானவை. உங்கள் கட்டுக்கடங்காத நடத்தை மற்றும் வழிகாட்டுதல்களை மீறியதால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ராகுல் காந்தி மீது வழக்கு பதிவு செய்யுமாறு டிஜிபி சிங்கிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

The post பல்கலை மாணவர்களை சந்திக்க அனுமதி மறுப்பு கவுகாத்தியில் ராகுல் காந்தி யாத்திரை தடுத்து நிறுத்தம்: தொண்டர்கள் மீது போலீஸ் தடியடி appeared first on Dinakaran.

Tags : Rahul Gandhi ,Guwahati ,Congress ,president ,India Unity Justice Yatra ,Former ,Manipur ,Dinakaran ,
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை எந்த...