×

சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி ஐஏஎஸ் பயிற்சி மையத்துக்கு படிக்கவரும் பெண்களை மிரட்டி பாலியல் தொல்லை: 30க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச வீடியோ, படங்கள், வாட்ஸ் பதிவுகள் செல்போனில் சிக்கியது; உரிமையாளர் அதிரடி கைது

திருச்செங்கோடு: திருச்செங்கோட்டில், இளம்பெண்களை மயக்கி ஆபாச படம் எடுத்து பாலியல் தொல்லை கொடுத்து தனியார் போட்டித்தேர்வு பயிற்சி மைய நிறுவனர் கைது செய்யப்பட்டார். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு சீத்தாராம்பாளையத்தை சேர்ந்தவர் அஸ்வின் (எ) மெய்யழகன் (30). எம்.இ பட்டதாரியான இவர் திருச்செங்கோடு புதிய பஸ் ஸ்டாண்ட், அருகே அர்த்தனாரீஸ்வரா ஐஏஎஸ் பயிற்சி மையம் என்ற பெயரில் கடந்த 5 ஆண்டுகளாக பயிற்சி மையம் நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி குழந்தை ஒன்று உள்ளது. இவரது பயிற்சி மையத்தில் டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு வகுப்புகள் நடத்தப்படுகிறது. இங்கு சுற்றுவட்டாரத்தைச்சேர்ந்த இளைஞர்கள், இளம்பெண்கள் பலர் சேர்ந்து பயிற்சி பெற்று வருகின்றனர்.

இப்பயிற்சி மையத்தில், படித்த மற்றும் படித்து வரும் இளம்பெண்களிடம், ‘சினிமாவில் நடிக்க வைக்கிறேன், எனக்கு சென்னையில் சினிமா தொடர்புகள் உள்ளது. அவர்களிடம் சொல்லி வாய்ப்பு வாங்கித்தருகிறேன்’ என ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதில் மயங்கிய 30க்கும் மேற்பட்ட இளம்பெண்களை வசப்படுத்தி அவர்களுடன் தவறாக நடந்து கொண்டுள்ளார். மேலும் அவர்களுடன் நெருக்கமாக இருக்கும்போது செல்பி எடுத்துள்ளார். புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு தொடர்ந்து அவர்களை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார்.

இந்நிலையில் இங்கு பயிற்சியில் சேர்ந்த திருச்செங்கோடு மாங்குட்டைபாளையத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரது 23 வயது மகளிடம் ஆசை வார்த்தைகளை கூறி வசப்படுத்த முயற்சி செய்துள்ளார். அவர் எதிர்ப்பு தெரிவிக்கவே அவரைப்பற்றி அப்பெண்ணின் உறவுக்கார பெண்ணிடம், அவரது நடத்தை சரியில்லை, ஒழுக்கம் கெட்டவள் என அஸ்வின் கூறியுள்ளார். இத்தகவல் அறிந்த வெங்கடேசன் தனது உறவினர்களுடன் அஸ்வினை நேரில் சந்தித்து தட்டிக்கேட்டுள்ளார். அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால், அவரை பிடித்து நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அங்கு போலீசார் விசாரணை நடத்தி அவரது செல்போனை பறிமுதல் செய்து ஆய்வு செய்தனர். செல்போனை பார்த்த போலீசார் அதிர்ச்சியடைந்தனர். அதில் ஏராளமான இளம்பெண்களுடன் அலங்கோலமான நிலையில் ஆபாச புகைப்படங்களும், வீடியோக்ககளும், பெண்களிடம் போனில் பேசிய பதிவுகளும், வாட்ஸப் பதிவுகளும் இருந்தது. இதையடுத்து அஸ்வின் மீது, பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம், 294 பி, 509,506(1), ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து திருச்செங்கோடு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அங்கு நீதிபதி சுரேஷ்பாபு அஸ்வினை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதன் பேரில் அவர் திருச்செங்கோடு கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.

The post சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி ஐஏஎஸ் பயிற்சி மையத்துக்கு படிக்கவரும் பெண்களை மிரட்டி பாலியல் தொல்லை: 30க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச வீடியோ, படங்கள், வாட்ஸ் பதிவுகள் செல்போனில் சிக்கியது; உரிமையாளர் அதிரடி கைது appeared first on Dinakaran.

Tags : IAS training center ,Tiruchengode ,Ashwin (A) Meiyazhagan ,Seetharampalayam, Tiruchengode, Namakkal District ,
× RELATED பள்ளி அருகே செயல்படும் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு