×

முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கும் கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கத்தின் சிறப்பம்சங்கள்: கிரிக்கெட் ஸ்டேடியங்களுக்கு இணையான கிரியேட்டிவிட்டி

அலங்காநல்லூர்: அலங்காநல்லூர் அருகே, நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கும் கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கம், கிரிக்கெட் ஸ்டேடியங்களுக்கு இணையான கட்டமைப்பை கொண்டுள்ளது. இதன் பல்வேறு முக்கிய சிறப்பம்சங்கள் குறித்து காணலாம். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டமன்ற கூட்டத் தொடரில் 110 விதியின் கீழ், தமிழர்களின் வீரம், பாரம்பரியத்தை போற்றும் வகையில், மதுரை மாவட்டத்தில் பிரம்மாண்டமான ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்கப்படும் என தெரிவித்தார். இதனடிப்படையில் அலங்காநல்லூர் அருகே, 66 ஏக்கர் நிலப்பரப்பில் 16 ஏக்கரில் ரூ.44 கோடியில் புதிய ஜல்லிக்கட்டு அரங்கம் கட்டப்பட்டுள்ளது. இதற்கு கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கம் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த அரங்கத்தின் பல்வேறு சிறப்பம்சங்கள் வருமாறு:

கிராமச் சாலைகள் இணைப்பு

அரங்கத்திற்கு வரும் வகையில் பல்வேறு கிராமச் சாலைகளை இணைக்க, 30 மீட்டர் அகலத்தில் நான்குவழி சாலை போல ரூ.22 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. அரங்கத்தின் முகப்பு தோற்றம் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. அரண்மனை போன்ற வடிவில் ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் வீரன் சிலை அமைக்கப்பட்டு, காண்போரை கவரும் வகையில், இயற்கை எழில் கொஞ்சும் தோட்டம் அமையப்பட்டுள்ளது.

3 தலங்கள்; 3 பிரதான வாயில்கள்

ஜல்லிக்கட்டு அரங்கத்தில் 3 தலங்கள் உள்ளன. அரங்கத்திற்கு செல்ல 3 பிரதான வாயில்கள் உள்ளன. சுற்றுலாப் பயணிகள், குழந்தைகளை கவரும் வகையில் இரண்டு அருங்காட்சியகங்கள், கண்கவர் வண்ண ஓவியங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், ஊர் விளையாட்டு அரங்கம், 100 பேர் அமர்ந்து பார்க்கக் கூடிய மினி திரையரங்கம் ஆகியவை உள்ளன. அரங்க முகப்பில் தமிழர்களின் வீரத்தையும், பண்டைய பாரம்பரியத்தை நினைவு கூறும் வகையில் கட்டை வண்டி, தட்டு வண்டி, கூட்டு வண்டி ஆகியவை நிறுத்தப்பட்டுள்ளன. காளைகள் மூலம் நடைபெற்ற விவசாயப் பணிகள் நடுகள், அந்த கற்களில் பழமையான ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் வீரன், அதேபோல் கருங்கல் சிற்பம் ஆகியவை தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளன. வெளிநாடு, உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் வரவேற்பு அறைகள், வண்ண ஓவியங்கள், குளிர்சாதன அறைகள், ஓய்வறைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் அனைத்து சிறப்பம்சங்களும் உள்ளன.

ஜல்லிக்கட்டு பாரம்பரியம் குறித்த அருங்காட்சியகம்

அரங்கத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள், பார்வையாளர்கள் மற்றும் பொதுமக்கள் வீரவிளையாட்டுகளை கண்டுகளிப்பது மட்டுமல்லாமல், இந்த வீரவிளையாட்டுகள் தோன்றிய வரலாறு அவை நடந்த விதம், தமிழ்நாட்டிலும் வெளிநாட்டிலும் நடந்த பழமையான ஜல்லிக்கட்டு போட்டிகள், ஏறு தழுவுதல், எருது கட்டு, வடமாடு, மஞ்சுவிரட்டு உள்ளிட்ட பல்வேறு விதமான பாரம்பரிய விளையாட்டுக்கள் தத்ரூபமான முறையில் அருங்காட்சியக சுவர்களில் வரையப்பட்டுள்ளன.

தமிழ் கலாச்சாரத்தை போற்றும் நூலகம்

பண்டைய தமிழ் கலாச்சாரம் குறித்து தற்போதைய மாணவர்களும், இளைஞர்களும் படித்து தெரிந்து கொள்ளும் வகையில் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், கண்காட்சி கூடம், வண்ண ஓவியங்கள், விளையாட்டு அரங்கம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ், தமிழக வீரவிளையாட்டு மற்றும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு நிரந்தர அனுமதி கிடைத்ததை நினைவு கூறும் வகையில் இந்த அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இத்தகைய பல்வேறு சிறப்பம்சங்கள் நிறைந்த கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்திற்கு அடிக்கல் நாட்டியது முதல், திறப்பு விழா வரை அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், ஏ.வ.வேலு, பி.மூர்த்தி மற்றும் சோழவந்த எம்.எல்.ஏ வெங்கடேசன், கலெக்டர் சங்கீதா ஆகியோர் அடிக்கடி வந்து கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு ஆலோசனை வழங்கினர்.

The post முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கும் கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கத்தின் சிறப்பம்சங்கள்: கிரிக்கெட் ஸ்டேடியங்களுக்கு இணையான கிரியேட்டிவிட்டி appeared first on Dinakaran.

Tags : Principal ,M.U. K. ,Century ,Six ,Stalin ,Alanganallur ,K. Stalin ,Century Six Adaptation Stadium ,Tamil Nadu ,Chief Mu. K. ,Meeting Series ,Century Six ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் உச்சம் தொட்ட தேர்தல்...