×

மெரினா கலங்கரை விளக்கம் அருகே இந்தியாவில் முதன்முறையாக கடற்கரையில் அமைக்கப்படும் மெட்ரோ ரயில் நிலையம்

சென்னை: இந்திய கடற்கரைகளிலேயே எங்கும் இல்லாத ஒன்றாக மெரினா கடற்கரையில் மெட்ரோ ரயில் நிலையம் அமைய உள்ளது. இது, சுனாமியை தாங்கும் வகையில், நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டு வருகிறது. சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும், நீண்ட தொலைவை குறைந்த நேரத்தில் கடப்பதற்காகவும் மெட்ரோ ரயில் திட்டம், கடந்த 2015ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. முதற்கட்டமாக சென்னை விமான நிலையம் – விம்கோ நகர், சென்ட்ரல்- பரங்கிமலை ஆகிய இரண்டு வழித்தடங்களில் சுமார் 55 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஆரம்பம் முதலாகவே சென்னைவாசிகள் மத்தியில் மெட்ரோ ரயில் சேவைக்கு சிறப்பான வரவேற்பு இருந்து வருகிறது. இதை தொடர்ந்து, தற்போது ₹63,246 கோடி மதிப்பில் 118.9 கிலோ மீட்டர் தூரத்துக்கு 3 வழித்தடங்களில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணி நடைபெறுகிறது. இதில், கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி புறவழிச்சாலை வரை 26.1 கிலோ மீட்டர் தொலைவுக்கும், மாதவரம் – சிறுசேரி சிப்காட் வரை 45.8 கி.மீட்டருக்கும், மாதவரம் முதல் – சோழிங்கநல்லூர் வரை 47 கிலோ மீட்டர் தூரத்துக்கும் என 118.9 கி.மீ தூரத்துக்கு புதிய வழித்தடங்கள் அமைய உள்ளன.

இதில், பூந்தமல்லி – கலங்கரை விளக்கம் வழித்தடத்தில், மெரினா கடற்கரையில் அமையும் ரயில் நிலையம் தான், இந்தியாவின் முதல் கடற்கரை மெட்ரோ ரயில் நிலையம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்காக, மெரினா காந்தி சிலைக்கு பின்புறம் உள்ள கடற்கரை சர்வீஸ் சாலையில், 7.02 மீட்டர் அகலம் மற்றும் 480 மீட்டர் நீளம் முழுவதும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த ரயில் நிலைய பணிகள் மாநில மற்றும் ஒன்றிய அரசின் ஒப்புதலோடு பிரமாண்டமாக அமைக்கப்படுகிறது. கலங்கரை விளக்கம் ரயில் நிலையத்தின் நீளம் 416 மீட்டர் ஆகும். சென்னையின் எந்த மெட்ரோ ரயில் நிலையமும் இவ்வளவு நீளம் கிடையாது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் கூட 350 மீட்டர் என்கிற அளவில் தான் உள்ளது. அகலமும் 35 மீட்டர் இருக்கும். தற்போதைய நிலையில் அகலத்தில் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம்தான் பெரியது. அதுகூட 31 மீட்டர் தான் இருக்கும். ஆனால், மெரினா கலங்கரை விளக்கம் மெட்ரோ ரயில் நிலையம் 35 மீட்டரில் அமைகிறது. இது தவிர்த்து 12 ரயில்களை இங்கு நிறுத்தும் வசதி ஏற்படுத்தப்படுகிறது. இந்த வழித்தடத்திற்கான பணிமனை 26.1 கி.மீ தூரம் தள்ளி பூந்தமல்லியில் அமைகிறது.

அங்கிருந்து ரயில் காலியாக வந்தால் மின்சார விரயம் ஏற்படும். இந்த இழப்பை தடுப்பதற்காக மெரினா கலங்கரை விளக்கம் மெட்ரோ ரயில் நிலையத்தில் 12 ரயில்களை நிறுத்தும் அளவிற்கு 6 டிராக் டிசைன் செய்யப்பட்டுள்ளது. அதனால் ரயில் நிலையம் பெரியதாக இருக்கும். எல்லா ரயில் நிலையங்களிலும் கண்கோரஸ் மேலே இருக்கும். அதற்கு கீழே ரயில்கள் இருக்கும். இந்த ஒரு ரயில் நிலையத்தில் மட்டும் கண்கோரஸ் கீழே இருக்கும். ரயில்கள் மேலே இருக்கும். இந்த 416 மீட்டரில் 316 மீட்டரை கன்கோர்ஸ்கே அலார்ட் செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் அந்த இடத்தில் மக்கள் ஹயாக கலங்கரை விளக்கம் ரயில் நிலையத்தில் செலவிட முடியும். டிராக்கிற்கு கீழ் 2000 முதல் 3000 பேர் வரை ஒரே நேரத்தில் உள்ளே அமர முடியும். முக்கியமாக சுனாமியே வந்தாலும் பாதிக்கப்படாத வகையில் மெரினா கலங்கரை விளக்கம் ரயில் நிலையம் அமைக்கப்பட்டு வருவதாக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது. சென்னை மெரினாவின் பழைய படத்தையும் புதிய படத்தையும் பார்ப்பவர்கள் நிச்சயம் வியந்து போவார்கள். அந்த அளவிற்கு பிரமாண்டமாக இந்த மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.

The post மெரினா கலங்கரை விளக்கம் அருகே இந்தியாவில் முதன்முறையாக கடற்கரையில் அமைக்கப்படும் மெட்ரோ ரயில் நிலையம் appeared first on Dinakaran.

Tags : India ,Marina Lighthouse ,CHENNAI ,Marina Beach ,Dinakaran ,
× RELATED களை கட்டிய மாம்பழ சீசன் பழக்கடைகளில்...