×

நெல்லை-திருச்செந்தூர் சாலையில் மீண்டும் சத்திரங்கள் அமைக்கப்படுமா? பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் கடும் அவதி

நெல்லை: தை பூசத்தை முன்னிட்டு திருச்செந்தூருக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களின் நலன் கருதி மீண்டும் சத்திரங்களை புதுப்பிக்க வேண்டும் என பக்தர்கள் விரும்புகின்றனர். பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் இப்போது பல இடங்களில் சாலையோரங்களில் படுத்து உறங்கும் அவலம் காணப்படுகிறது. அறுபடை வீடுகளில் 2ம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து தங்கியிருந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர். தற்போது தைப்பூசத்தை முன்னிட்டு பல்வேறு இடங்களில் இருந்து பாதயாத்திரையாக பக்தர்கள் வந்து வழிபடுகின்றனர். தமிழ் மாதங்களில் மார்கழி துவங்கி தைப்பூசம் வரை தூத்துக்குடி மாவட்ட மக்கள் மட்டுமல்லாது, தென்காசி, நெல்லை, குமரி, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் இருந்தும் திருச்செந்தூருக்கு அதிகமாக பாதயாத்திரை பக்தர்கள் வருவது வழக்கமாக உள்ளது. பகல் நேரங்களை தவிர்த்து அதிகாலை, காலை, மாலை மற்றும் இரவு நேரங்களில் தங்கள் பயணத்தை மேற்கொள்கின்றனர். இவ்வாறு யாத்திரை வரும் பக்தர்களுக்கு வழியெங்கிலும் பக்த பேரவையினர், தனியார் அமைப்புகள் சார்பில் குடிநீர், அன்னதானம் வழங்கப்படுகிறது.

இதுபோக செங்கோட்டை, தென்காசி, பாவூர்சத்திரம், முக்கூடல், சேரன்மகாதேவி, மானூர் என நெல்லை வழியாக திருச்செந்தூர் செல்லும் பக்தர்கள் சில இடங்களில் முகாமிட்டு உணவு சமைத்து அங்கேயே சாப்பிட்டுவிட்டு, சற்று இளைப்பாறிவிட்டு செல்கின்றனர். சிலர் சாலையோரங்களில் மரங்கள் மற்றும் கட்டிட முகப்புகளில் படுத்து உறங்கிவிட்டு செல்கின்றனர். கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் தங்குவதற்கு முறையான வசதிகள் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்னமும் சரிவர செய்து தரப்படவில்லை. முன்பெல்லாம் தை பூசத்திற்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்கள் வசதிக்காக நெல்லை மாநகரில் மட்டுமே 3க்கும் மேற்பட்ட சத்திரங்கள் காணப்பட்டன. வண்ணார்பேட்டை தீப்பாச்சியம்மன் கோயில் அருகே ஞானமணி அம்பாள் சத்திரம், பாளை வி.எம்.சத்திரத்தில் அந்த ஊரின் பெயரை தாங்கிய விஜயராகவ முதலியார் சத்திரம், மாநகராட்சி எதிரே ஒரு சத்திரம் என பல்வேறு சத்திரங்கள் வழிநெடுக காணப்பட்டன.

செல்லும் வழிகளிலும் கருங்குளம் சத்திரம், வைகுண்டம் சத்திரம் என பல இடங்களில் பாதயாத்திரை செல்வோர் சத்திரங்களில் தங்கி ஓய்வு எடுத்துவிட்டு சென்றனர். இந்த சத்திரங்களில் பாத யாத்திரை செல்வோருக்கு தேவையான உணவுகளும் வழங்கப்பட்டன. இதற்கென அக்காலத்தில் அன்னதானம் வழங்குவோர் சில விளைநிலங்களை சத்திரத்திற்கு என எழுதியே வைத்திருந்தனர்.இன்று நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் சத்திரங்கள் என்பதே மாயமாகிவிட்ட நிலையில், பாதயாத்திரை செல்வோர் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக வாகனங்களில் முருகன் பாடல் ஒலிக்க வரும் பாதயாத்திரை குழுவினர், தாமிரபரணி ஆற்றில் குளித்துவிட்டு, நெல்லை கலெக்டர் அலுவலக வாசல் ஓரங்களில் காணப்படும் காலியிடங்களில் வேறு வழியின்றி படுத்து தூங்கி செல்கின்றனர். இரவு நேரங்களில் தச்சநல்லூர் சாலை ஓரங்களிலும், மாநகராட்சி எதிரேயுள்ள வர்த்தக மைய வெளிசுற்று வளாகத்திலும் பலர் அசந்து தூங்கி எழுந்து செல்கின்றனர்.

பகல் பொழுதில் சாலையோரங்களில் தூங்கும் பாதயாத்திரை செல்வோருக்கு, விபத்து அபாயம் ஒருபுறம் இருக்க, எப்ேபாதும் வாகனங்களில் பேரிரைச்சலும், வாகனங்கள் கிளப்பும் தூசியும் துன்பத்தை தருகின்றன. தை பூசத்ைத ஒட்டி பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் மட்டுமின்றி, கந்தசஷ்டியை முன்னிட்டு பாத யாத்திரை செல்வோரும் இத்தகைய பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர். எனவே பக்தர்களின் பிரச்னைகளை தீர்க்கும் வகையில் தென்காசி தொடங்கி நெல்லை வழியாக திருச்செந்தூர் சாலையில் குறிப்பிட்ட சில இடங்களிலாவது சத்திரங்கள் கட்டப்பட வேண்டும் என பக்தர்கள் விரும்புகின்றனர். தற்போது நெல்லை- திருச்செந்தூர் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு வரும் சூழலில், பக்தர்கள் நடந்து செல்வதற்கு பேவர்பிளாக் மூலம் தனி நடைபாதை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. அதுபோல் பக்தர்களுக்கு குறிப்பிட்ட இடங்களிலாவது ஓய்வெடுத்து செல்ல சத்திரங்கள் அமைப்பட்டால் அல்லது ஏற்கனவே உள்ள சத்திரங்கள் புதுப்பிக்கப்பட்டால், பாதயாத்திரை செல்வது எளிதாக இருக்கும்.

The post நெல்லை-திருச்செந்தூர் சாலையில் மீண்டும் சத்திரங்கள் அமைக்கப்படுமா? பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் கடும் அவதி appeared first on Dinakaran.

Tags : Nellai-Tiruchendur road ,Nellai ,Tiruchendur ,Thai ,Arupadai Houses ,Padayatra ,
× RELATED நெல்லையில் கட்டுக்கடங்காத கூட்டம்;...