×

நெல்லை அருகே கேரளாவுக்கு கடத்தவிருந்த 7 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி, லாரி பறிமுதல்

*உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி

நெல்லை : ஆலங்குளம் அருகே கேரளாவிற்கு 7200 கிலோ ரேஷன் அரிசியுடன் கடத்தி செல்வதற்கு தயாராக இருந்த லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை தென்காசி மாவட்டம் எஸ்ஐ ஜெயக்குமார் மற்றும் போலீசார் ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் சம்பந்தமாக பாவூர்சத்திரம், கடையம், ஆழ்வார்குறிச்சி, ஆலங்குளம் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர். அப்போது அதிகாலை குருவன்கோட்டையில் இருந்து நல்லூர் செல்லும் பாதையில் சந்தேகப்படும்படியாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியில் சோதனை செய்தனர். இதில் சுமார் 40 கிலோ எடை கொண்ட 180 பிளாஸ்டிக் சாக்கு மூடைகளில் 7,200 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் லாரியை பற்றி அருகில் இருந்தவர்களிடம் விசாரித்த போது ஆலங்குளம் தாலுகா நல்லூர் ஆலடிப்பட்டி சேர்ந்த சுதாகர் மற்றும் காசியாபுரத்தைச் சேர்ந்த லிங்கம் ஆகியோருக்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது. ரேஷன் அரிசியை கேரளாவில் உள்ள ஆலம் ஆண்டனிக்கு விற்பதற்காக லாரியில் ஏற்றியது தெரிய வந்தது. பின்பு ரேஷன் அரிசியையும் லாரியையும் கைப்பற்றி நெல்லை குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகவுள்ள சுதாகர், லிங்கம் ஆகிய இரண்டு பேரையும் கைது செய்தனர். மேலும் தலைமறைவாகவுள்ள கேரளாவைச் சேர்ந்த ஆலம் ஆண்டனியை தேடி வருகின்றனர்.

The post நெல்லை அருகே கேரளாவுக்கு கடத்தவிருந்த 7 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி, லாரி பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Kerala ,Nellai ,Foodstuffs ,Alankulam ,Nella ,Dinakaran ,
× RELATED மனைவி பிரிந்ததால் வேதனை; தற்கொலையை...