*வாகன ஓட்டிகள் அவதி
சேலம் : சேலம்-ஆத்தூர் மெயின்ரோட்டில் அயோத்தியாப்பட்டணத்தில் கோழி, குப்பைக்கழிவுகள் கொளுத்துவதால் சாலை முழுக்க புகை மண்டலமாக மாறியது. இதனால் அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.சேலம் புதிய பஸ் ஸ்டாண்டில் கிழக்குப்புறமாக சேலம்-ஆத்தூர் சாலை உள்ளது. இச்சாலை வழியாக சென்னை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சிதம்பரம், கடலூர், புதுச்சேரி, ஆத்தூர் மற்றும் அயோத்தியாப்பட்டணத்தை கடந்து வேலூர், திருப்பத்தூர், அரூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் உள்பட பல ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது. இதைதவிர வாழப்பாடி, பேளூர், ஆச்சாங்குட்டப்பட்டி, கூட்டாத்துப்பட்டி, கோம்பூர் உள்பட பல ஊர்களுக்கு டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இவ்வழியாக தினசரி 500க்கும் மேற்பட்ட பஸ்கள் சென்று வருகிறது. எப்போதும் பரபரப்புடன் காணப்படும் சேலம்-ஆத்தூர் சாலையில் அயோத்தியாப்பட்டணம் அருகே சிலர் கோழி, குப்பைக்கழிவுகளை கொட்டி தீவைத்துவிட்டு செல்கின்றனர். இதிலிருந்து வெளியேறும் புகை சாலை முழுவதையும் மறைத்து கொள்கிறது. மேலும் அவ்வழியாக வாகனங்களில் செல்வோர் புகையால் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சாலையோரம் கோழி, குப்பைக்கழிவுகள் கொட்டி எரிக்கப்படுவதை தடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.
The post சேலம்-ஆத்தூர் மெயின்ரோட்டில் புகை மண்டலமாக மாறிய சாலை appeared first on Dinakaran.