×
Saravana Stores

தெப்பகாடு- மசினகுடி சாலையில் மாயாற்றின் குறுக்கே ரூ.1.99 கோடியில் புதிய பாலம் கட்டும் பணி தீவிரம்

ஊட்டி : முதுமலை தெப்பகாட்டில் இருந்து மசினகுடி செல்லும் சாலையில் மாயாற்றின் குறுக்கே ரூ.1.99 கோடி மதிப்பில் பாலம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து முதுமலை புலிகள் காப்பகம் தெப்பகாடு வழியாக தேசிய நெடுஞ்சாலை உள்ளது.தெப்பகாட்டில் இருந்து மசினகுடி வழியாக ஊட்டிக்கு கல்லட்டி மலைப்பாதை உள்ளது.

மைசூரில் இருந்து வரக்கூடிய பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கூடலூர் சென்று ஊட்டி வருவதை காட்டிலும் மசினகுடி வழியாக ஊட்டிக்கு செல்வது மிகவும் சுலபம் என்பதாலும்,பயணநேரம் குறையும் என்பதால் ஊட்டி நோக்கி வர இச்சாலையை பயன்படுத்துகின்றனர். அதேநேரம் அபாயகரமான சாலை என்பதால் ஊட்டியில் இருந்து கீழ் நோக்கி மசினகுடி,தெப்பகாடு வர வெளியூர் வாகனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை.முதுமலை புலிகள் காப்பகத்தின் நடுவே மாயாறு ஓடுகிறது. தேசிய நெடுஞ்சாலையையும்,மசினகுடி சாலையையும் இணைக்கும் வகையில் மாயாற்றின் குறுக்கே ஆங்கிலேயர் காலத்தில் இரும்பு பாலம் அமைக்கப்பட்டது.

பழமை வாய்ந்த இப்பாலம் பழுதடைந்ததால் கனகர வாகனங்கள் இயக்குவதில் சிரமம் ஏற்பட்டு வந்தது. இப்பகுதியில் புதிதாக பாலம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதனை தொடர்ந்து அப்பகுதியில் புதிய பாலம் கட்ட ரூ.1.99 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பாலம் கட்ட வசதியாக பழமை வாய்ந்த இரும்பு பாலம் அகற்றப்பட்டது. மசினகுடி செல்லும் வாகனங்கள் அனைத்தும் தரைப்பாலம் வழியாக திருப்பி விடப்பட்டன. தொடர்ந்து புதிய பாலம் கட்டும் பணிகள் துவக்கப்பட்டன. இருந்த போதும் கூடலூர் பகுதியில் அடிக்கடி பெய்த மழை காரணமாக மாயாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பாலம் கட்டுமான பணிகளில் தாமதம் ஏற்பட்டது.

அதன்பின்னர் கடந்த ஆண்டு கட்டுமான பணிகள் துரிதமடைந்தது. தூண்கள் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் விரைவில் மேற்புறம் கான்கீரிட் தளம் அமைக்கும் பணிகள் துவங்க உள்ளது. இதனால் மார்ச் மாத இறுதிக்குள் பாலம் கட்டும் பணி நிறைவுபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில்:தெப்பகாடு அருகே மாயாற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.இப்பணிகள் துரிதகதியில் நடைபெற்று வருகின்றன.
வரும் மார்ச் மாதத்திற்குள் பாலம் கட்டும் பணி முழுமையாக முடிக்கப்படும், என்றனர்.

The post தெப்பகாடு- மசினகுடி சாலையில் மாயாற்றின் குறுக்கே ரூ.1.99 கோடியில் புதிய பாலம் கட்டும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Theppagadu- Masinagudi ,Mudumalai Theppagat ,Masinagudi ,Nilgiris District Gudalur ,Mudumalai Tiger Reserve National Highway ,Theppagadu ,Theppagadu-Masinakudi road ,Dinakaran ,
× RELATED வன உயிரின வார விழாவை முன்னிட்டு மசினகுடியில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு