×

செய்யாறு அருகே சிதிலமடைந்த மேல்நிலை குடிநீர் தொட்டியை அகற்றி புதியதாக அமைக்க வேண்டும்

*பொதுமக்கள் கோரிக்கை

செய்யாறு : செய்யாறு அருகே சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் உள்ள குடிநீர் மேல்நிலை தொட்டியை அகற்றி புதிய தொட்டி கட்ட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செய்யாறு அடுத்த அனக்காவூர் ஒன்றியம் உக்கல், பெண்டை, கோட்டகரை ஆகிய கிராமங்களில் சுமார் 3,500க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந்த கிராமங்களுக்கு உக்கல்-கோட்ட கரை கூட்டு குடிநீர் திட்டம் மூலம் 60 ஆயிரம் லிட்டர் கொண்ட 2 மேல்நிலை குடிநீர் தொட்டிகள், 30 ஆயிரம் கொள்ளளவு கொண்ட 4 தொட்டிகள் வழியாக குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் உக்கல் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே 42 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி சிதிலமடைந்து கடந்த 5ஆண்டுகளுக்கும் மேலாக கான்கிரீட் பூச்சுக்கள் உள்புறம், வெளிப்புறம் உதிர்ந்து விழுந்து வருகிறது. மேலும், தொட்டியை தாங்கும் தூண்கள் சிமெண்ட் பூச்சுக்கள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. ஆபத்தான நிலையில் உள்ள இந்த குடிநீர் தொட்டியை அகற்றி புதிய தொட்டி கட்டவேண்டும் என ஊராட்சி மன்றம் சார்பில், அனக்காவூர் ஒன்றிய நிர்வாகத்திடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இதுதொடர்பாக கிராம சபா கூட்டங்களிலும் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்டது. ஆனாலும் நடவடிக்கை இல்லை. ஈஸ்வரன் கோயில் தெரு, மீனவர் தெரு, குளக்கரைதெரு. குட்ட கரை தெரு, நடுத்தெரு ஆகிய தெரு மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக உள்ள இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி தற்போது பழுதான நிலையில் உள்ளதால், தொட்டியின் குடி நீரை முழுமையாக நிரப்பாமல், குறைந்தளவே நிரப்பி பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

இதனால் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் சீரான முறையில் விநியோகம் செய்ய முடியவில்லை. எனவே, ஆபத்தான நிலையில் உள்ள இந்த குடிநீர் தொட்டியை இடித்து அகற்றிவிட்டு புதிதாக தொட்டி அமைக்க வேண்டும் என ஊராட்சி நிர்வாகம் மற்றும் கிராம பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post செய்யாறு அருகே சிதிலமடைந்த மேல்நிலை குடிநீர் தொட்டியை அகற்றி புதியதாக அமைக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Seyyar ,Seiyaru ,Ukkal ,Bendai ,Kotakarai ,Anakavur Union ,Dinakaran ,
× RELATED செய்யாறு அருகே கார் மீது லாரி மோதி தம்பதி உயிரிழப்பு..!!