×

ராமநாதபுரத்தில் பெய்த தொடர் மழை காரணமாக 350 ஏக்கர் சூரியகாந்தி விவசாயம் பாதிப்பு

*இழப்பீடு வழங்க கோரிக்கை

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் பெய்த கனமழையால் சுமார் 350 ஏக்கர் சூரியகாந்தி விவசாயம் பாதிக்கப்பட்டதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
ராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்தூர், நயினார்கோவில், கமுதி ஒன்றியங்களில் உள்ளிட்ட பகுதியில் 350 ஏக்கரில் சூரியகாந்தி விவசாயம் செய்யப்படுகிறது. கமுதி அருகே பெருநாழி சுற்று வட்டாரத்தில் மட்டும் மாவட்டத்திலேயே அதிகபட்சமாக, அதாவது 247 ஏக்கரில் சூரியகாந்தி விவசாயம் செய்யப்படுகிறது. 65 முதல் 70 நாட்களில் மகசூல் நிலையை எட்டி, அறுவடைக்கு தயாராகும் பயிர் என்பதால் விவசாயிகள் கடந்த நவம்பர் மாதம் விதைக்க தொடங்கினர்.

செடிகள் நன்றாக வளர்ந்து வந்தது, களை எடுத்தல், உரமிடுதல் உள்ளிட்ட பராமரிப்பு பணிகளையும் விவசாயிகள் செய்து வந்தனர். இந்த நிலையில் மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழைக்கு பயிர்கள் வேறோடு சாய்து பாதிக்கப்பட்டது. இதனால் இரண்டாம் முறையாக உழவார பணிகளை செய்து, விதை விதைத்தனர், தற்போது பூ, பூத்து மகசூல் நிலையை எட்டியுள்ளது. ஆனால் விதைத்த அளவில் பயிர்கள் முளைக்காமல், பாதிக்கு, பாதி என்ற அளவில் மட்டுமே விளைச்சல் வந்துள்ளதால் செலவு செய்த பணம் கூட கிடைக்காமல் நஷ்டம் ஏற்பட்டு விட்டதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

இது குறித்து பெருநாழி விவசாயிகள் கூறும்போது, சிறிய மழை பெய்தால் கூட அதில் வளர்ந்து வரும், வறட்சியை தாங்கக் கூடிய பயிராக உள்ள சூரிய காந்தி பெருநாழி பகுதியில் பாராம்பரிய விவசாயமாக செய்யப்பட்டு வருகிறது. 70 நாட்களில் முழுமையாக வளர்ந்து முற்றிய விதைகள் வந்து விடும், சுமார் ஒரு ஏக்கரில் 200 கிலோ விதை கிடைக்கும்.

இதனால் ஆர்வத்துடன் சூரியகாந்தி விவசாயம் செய்து வருகிறோம். இந்தநிலையில் இந்தாண்டு ஒரு கிலோ ரூ.600 முதல் 800 வரை விதை வாங்கி விதைக்கப்பட்டது, தொடர்ந்து உரம் இடுதல், களை எடுத்தல் உள்ளிட்ட பராமரிப்பு பணிகளை செய்து வந்தோம். ஆனால் தொடர் கனமழையால் பயிர்கள் சேதமடைந்து விட்டது.

இதனால் இரண்டாம் முறையாக உழவார பணிகளை செய்து விதை வாங்கி விதைத்தோம். ஆனால் போதிய விளைச்சல் இன்றி பாதிக்கு, பாதி என்ற அளவில் மட்டுமே விளைந்துள்ளது. ஒரு ஏக்கருக்கு 200 கிலோ விதை மகசூல் கிடைத்து வந்த நிலையில் தற்போது ஏக்கருக்கு 50 கிலோ விதை கூட கிடைக்கவில்லை. இதனால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே அரசு நிவாரணம் வழங்க வேண்டும், பயிர்காப்பீடு திட்டத்தில் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்றனர்.

The post ராமநாதபுரத்தில் பெய்த தொடர் மழை காரணமாக 350 ஏக்கர் சூரியகாந்தி விவசாயம் பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,Paramakudi ,Mudugulattur ,Nainarkovil ,Kamudi ,
× RELATED சுட்டெரிக்கும் கோடை வெயிலால் ஐஸ் பார்கள் விற்பனை படுஜோர்