×

சர்க்கரை நோயாளிகளுக்கு மிகச்சிறந்த உணவு ஜவ்வாதுமலையில் விளையும் தரமான சாமை

*ஆண்டுக்கு 9 ஆயிரம் டன் உற்பத்தி

*வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதியாகிறது

போளூர் : திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலையில் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகச்சிறந்த உணவாக விளங்கும் தரமான சாமை ஆண்டுக்கு 9 ஆயிரம் டன் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனை வியாபாரிகள் வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர்.உணவே மருந்து என்ற முன்னோர்களின் ஆலோசனையை ஏற்காமல் போனதின் விளைவாக இன்று மருந்தே உணவு என்ற நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இன்றைய மனிதனின் வாழ்க்கை முறை எல்லாமே மேலை நாட்டின் நாகரீகத்தை பின்பற்றியே இருக்கிறது.

ஒருகாலத்தில் பழைய சாதம், கேழ்வரகு கூழ், சிறுதானிய உணவுகள், கீரை வகைகள் என எல்லாமே இயற்கையை அடிப்படையாக கொண்டு இருந்தது. தற்போது அனைத்து தர மக்களும் நாகரீக உணவை விரும்பி சாப்பிடுகின்றனர். இதனால் தென்னிந்தியாவிலேயே சர்க்கரை நோயாளிகள் அதிகம் கொண்ட நாடாக விளங்கி வருகிறது தமிழகம்.

அதுமட்டுமா? ரத்த அழுத்தம், மலசிக்கல், மூட்டுவலி, உடல்பருமன் என வலிநிறைந்த வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். இதற்கு சிகிச்சை பெற டாக்டர்களை அணுகும் போது மருத்துவர்கள் சிறுதானிய உணவுகளை அதிகளவு சாப்பிட பரிந்துரை செய்கின்றனர். எனவே சிறுதானியத்தின் தேவை தற்போது அதிகரித்து வருகிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மக்கள் பெரிதும் கண்டு கொள்ளதா சாமை, திணை, வரகு, குதிரைவாலி போன்ற சிறுதானிய உணவுகளுக்கு இன்று மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதனால் சாதாரண பெட்டி கடைகள் முதல் சூப்பர் மார்கெட்டுகள், மால்கள் என எல்லா இடத்திலும் சிறுதானிய உணவுகளுக்கு என தனிப்பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன் விற்பனையும் சக்கைபோடு போடுகிறது.

அப்படி சிறப்பு வாய்ந்த சிறுதானிய உணவுகளை உற்பத்தி செய்வதில் தமிழகத்திலேயே ஜவ்வாதுமலை முன்னிலை வகித்து வருகிறது என்ற பெருமைக்குரிய விஷயம் பலருக்கும் தெரியாது. திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை ஒன்றியத்தில் ஆண்டுக்கு 6 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவிற்கு சாமை பயிரிடப்படுகிறது. இதன் மூலம் ஆண்டிற்கு சுமார் 9 ஆயிரம் டன் வரை உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழகத்திலேயே ஜவ்வாதுமலையில் மட்டும் தான் சாமை உற்பத்தி முன்னிலை வகிக்கிறது. இங்கு உற்பத்தியாகும் சாமை அரவை செய்யப்படாமல் நேரிடையாக குஜராத், பீகார், மகாராஷ்ட்ரா போன்ற மாநிலங்களுக்கு வெளியூர் வியாபாரிகளால் விற்பனைக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

100 கிராம் சாமை அரிசியில் புரதம் 9.7, கொழுப்பு 5.2, பொட்டாசியம் 5.4, நார்ச்சத்து 7.6 ஆகியவை இருப்பதால் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகச்சிறந்த உணவாக டாக்டர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. பொதுவாக அரிசி உணவை அதிகளவில் சாப்பிட்டால் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். ஆனால் சாமை அரிசி உணவை வயிறு நிறைய சாப்பிட்டாலும் சர்க்கரையின் அளவு அதிகரிக்காது என ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், விவசாயத்தில் பூச்சி மருந்து பயன்பாடு ஜவ்வாதுமலையில் அறவே இல்லாத காரணத்தினால் இந்தியாவிலேயே ஜவ்வாதுமலையில் உற்பத்தியாகும் சாமை உடலுக்கு கேடுவிளைவிக்காத தரமானதாக கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இந்திய அளவில் ஜவ்வாதுமலையில் உற்பத்தியாகும் சாமைக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இதேபோல் கம்பு, கேழ்வரகு, மக்காச்சோளம் ஆகிய சிறுதானிய பயிர்களும் தலா 250 ெஹக்டர் பரப்பளவில் உற்பத்தி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

கிலோ ₹100க்கு விற்பனை

ஜவ்வாதுமலையில் வசிக்கும் மலைவாழ் மக்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை தாங்கள் உற்பத்தி செய்த சாமையை வீட்டில் கைகுத்தல் அரிசியாக மாற்றி சமைத்து சாப்பிட்டு வந்தனர். இதனால் அவர்கள் உடல் ஆரோக்கியமும் நன்றாக இருந்தது. ஆனால் ஜவ்வாதுமலையில் சாமை அரிசியை அரவை செய்வதற்கான மில்கள் மற்றும் தொழில்நுட்ப வசதிகள் இல்லாததால் பெரும்பாலான மக்கள் இதனை ஒரு வர்த்தக பயிராக கருதி கிலோ ₹32க்கு அரவை செய்யாத சாமையை விற்பனை செய்து விடுகின்றனர்.

இதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து கடையில் நெல் அரிசியை வாங்கி சாப்பிட தொடங்கியுள்ளனர்.ஆனால் இதே ஜவ்வாதுமலையில் வெளியூரில் அரவை செய்து மீண்டும் கொண்டுவரப்பட்டு ஒரு கிலோ சாமை அரிசி ₹100 விற்பனை செய்யப்படுகிறது. இதனை இங்கு வரும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வாங்கி செல்கின்றனர்.

The post சர்க்கரை நோயாளிகளுக்கு மிகச்சிறந்த உணவு ஜவ்வாதுமலையில் விளையும் தரமான சாமை appeared first on Dinakaran.

Tags : Javvadumalai ,Thiruvannamalai district ,
× RELATED உத்திர காவிரி ஆற்றில்...