×

ஊட்டியில் சாலை விபத்தில் உயிரிழந்த கால்பந்து வீரரின் உருவ சிலையை தாயிடம் வழங்கிய நண்பர்கள்

*உள்ளூர் போட்டி துவக்க விழாவில் நெகிழ்ச்சி

ஊட்டி : சாலை விபத்தில் உயிரிழந்த கால்பந்தாட்ட வீரரின் உருவ சிலையை அவரது நண்பர்கள் உள்ளூர் விளையாட்டு போட்டியின்போது அவரது தாய் மற்றும் சகோதரரிடம் வழங்கினர்.
ஊட்டி அருகே எல்லநள்ளி, அட்டுகொலை கிராமத்தை சேர்ந்தவர் ரித்திக். இவர் கேத்தியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். கடந்த ஆண்டு பைக்கில் பயணித்தபோது சாலை விபத்தில் உயிரிழந்தார்.

கால்பந்து வீரரான இவர் அப்பகுதியை சேர்ந்த கால்பந்து அணியில் விளையாடி வந்தார். ரித்திக்கின் மறைவு நண்பர்களை சோகத்தில் ஆழ்த்தியது. ஒவ்வொரு போட்டியின்போதும் ரித்திக்கின் நினைவு சக வீரர்கள் மனதில் நீங்காமல் இருந்துள்ளது. இந்நிலையில் இப்பகுதியில் உள்ள ஏடிகே கால்பந்து அணி சார்பில் கால்பந்து போட்டிகள் நடைபெற்றது. அப்போது இந்த போட்டிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக ரித்திக்கின் தாய் ரெஜினா மற்றும் சகோதரர் ஜான் ஆகியோரை ரித்திக்கின் நண்பர்கள் அழைத்து வந்தனர்.

அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் முன்னிலையில் ரித்திக்கின் தாய் மற்றும் சகோதரரை அழைத்து அவர்களுக்கு ஒரு அட்டை பெட்டியில் நினைவுப்பரிசை வழங்கினர். அந்த பெட்டியில் உள்ள பரிசை ரித்திக்கின் சகோதரர் திறந்து பார்த்தார். அதில் ரித்திக்கின் மார்பளவு சிலை நினைவுப்பரிசாக இருந்தது. இதை கண்டு கண் கலங்கிய ரித்திக்கின் சகோதரர் ஜான் மற்றும் ரெஜினா ஆகியோர் கண்ணீர் மல்க நன்றி கூறினர். நண்பர்களின் இச்செயல் அப்பகுதியில் கூடியிருந்தவர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

The post ஊட்டியில் சாலை விபத்தில் உயிரிழந்த கால்பந்து வீரரின் உருவ சிலையை தாயிடம் வழங்கிய நண்பர்கள் appeared first on Dinakaran.

Tags : Ooty ,Leschi ,Ellanalli, Attukolai village ,
× RELATED படகு இல்லம் செல்லும் சாலையோர தடுப்பில் வர்ணம் பூசும் பணி தீவிரம்