×

மெரினா கலங்கரை விளக்கம் அருகே இந்தியாவில் முதன்முறையாக கடற்கரையில் அமைக்கப்படும் மெட்ரோ ரயில் நிலையம்: சுனாமியை தாங்கும் வகையில் வடிவமைக்கப்படுகிறது

சென்னை: இந்திய கடற்கரைகளிலேயே எங்கும் இல்லாத ஒன்றாக மெரினா கடற்கரையில் மெட்ரோ ரயில் நிலையம் அமைய உள்ளது. இது, சுனாமியை தாங்கும் வகையில், நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டு வருகிறது. சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும், நீண்ட தொலைவை குறைந்த நேரத்தில் கடப்பதற்காகவும் மெட்ரோ ரயில் திட்டம், கடந்த 2015ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. முதற்கட்டமாக சென்னை விமான நிலையம் – விம்கோ நகர், சென்ட்ரல்- பரங்கிமலை ஆகிய இரண்டு வழித்தடங்களில் சுமார் 55 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஆரம்பம் முதலாகவே சென்னைவாசிகள் மத்தியில் மெட்ரோ ரயில் சேவைக்கு சிறப்பான வரவேற்பு இருந்து வருகிறது. இதை தொடர்ந்து, தற்போது ₹63,246 கோடி மதிப்பில் 118.9 கிலோ மீட்டர் தூரத்துக்கு 3 வழித்தடங்களில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணி நடைபெறுகிறது.

இதில், கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி புறவழிச்சாலை வரை 26.1 கிலோ மீட்டர் தொலைவுக்கும், மாதவரம் – சிறுசேரி சிப்காட் வரை 45.8 கி.மீட்டருக்கும், மாதவரம் முதல் – சோழிங்கநல்லூர் வரை 47 கிலோ மீட்டர் தூரத்துக்கும் என 118.9 கி.மீ தூரத்துக்கு புதிய வழித்தடங்கள் அமைய உள்ளன. இதில், பூந்தமல்லி – கலங்கரை விளக்கம் வழித்தடத்தில், மெரினா கடற்கரையில் அமையும் ரயில் நிலையம் தான், இந்தியாவின் முதல் கடற்கரை மெட்ரோ ரயில் நிலையம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்காக, மெரினா காந்தி சிலைக்கு பின்புறம் உள்ள கடற்கரை சர்வீஸ் சாலையில், 7.02 மீட்டர் அகலம் மற்றும் 480 மீட்டர் நீளம் முழுவதும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த ரயில் நிலைய பணிகள் மாநில மற்றும் ஒன்றிய அரசின் ஒப்புதலோடு பிரமாண்டமாக அமைக்கப்படுகிறது.

கலங்கரை விளக்கம் ரயில் நிலையத்தின் நீளம் 416 மீட்டர் ஆகும். சென்னையின் எந்த மெட்ரோ ரயில் நிலையமும் இவ்வளவு நீளம் கிடையாது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் கூட 350 மீட்டர் என்கிற அளவில் தான் உள்ளது. தற்போதைய நிலையில் அகலத்தில் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம்தான் பெரியது. அதுகூட 31 மீட்டர் தான் இருக்கும். ஆனால், மெரினா கலங்கரை விளக்கம் மெட்ரோ ரயில் நிலையம் 35 மீட்டரில் அமைகிறது. இது தவிர்த்து 12 ரயில்களை இங்கு நிறுத்தும் வசதி ஏற்படுத்தப்படுகிறது. இந்த வழித்தடத்திற்கான பணிமனை 26.1 கி.மீ தூரம் தள்ளி பூந்தமல்லியில் அமைகிறது. அங்கிருந்து ரயில் காலியாக வந்தால் மின்சார விரயம் ஏற்படும். இந்த இழப்பை தடுப்பதற்காக மெரினா கலங்கரை விளக்கம் மெட்ரோ ரயில் நிலையத்தில் 12 ரயில்களை நிறுத்தும் அளவிற்கு 6 டிராக் டிசைன் செய்யப்பட்டுள்ளது. அதனால் ரயில் நிலையம் பெரியதாக இருக்கும்.

எல்லா ரயில் நிலையங்களிலும் கண்கோரஸ் மேலே இருக்கும். அதற்கு கீழே ரயில்கள் இருக்கும். இந்த ஒரு ரயில் நிலையத்தில் மட்டும் கண்கோரஸ் கீழே இருக்கும். ரயில்கள் மேலே இருக்கும். இந்த 416 மீட்டரில் 316 மீட்டரை கன்கோர்ஸ்கே அலார்ட் செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் மக்கள் ஹாயாக கலங்கரை விளக்கம் ரயில் நிலையத்தில் செலவிட முடியும். டிராக்கிற்கு கீழ் 2000 முதல் 3000 பேர் வரை ஒரே நேரத்தில் உள்ளே அமர முடியும். முக்கியமாக சுனாமியே வந்தாலும் பாதிக்கப்படாத வகையில் மெரினா கலங்கரை விளக்கம் ரயில் நிலையம் அமைக்கப்பட்டு வருவதாக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது. சென்னை மெரினாவின் பழைய படத்தையும் புதிய படத்தையும் பார்ப்பவர்கள் நிச்சயம் வியந்து போவார்கள். அந்த அளவிற்கு பிரமாண்டமாக இந்த மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.

சுரங்கப்பணிகள் விறுவிறு
மெரினா கலங்கரை விளக்கம் – பூந்தல்லி புறவழிச்சாலை வழித்தடத்தில், களங்கரை விளக்கம் மெட்ரோ நிலையத்தில் இருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதை கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த வழித்தடத்தில் முதற்கட்டமாக, ‘பிளமிங்கோ’ என பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம் 1.9.2023 அன்று சுரங்கம் அமைக்கும் பணியை தொடங்கியது. தற்போது, கலங்கரை விளக்கத்தில் இருந்து போட் கிளப் ரயில் நிலையம் வரை 2ம் கட்டமாக சுரங்கப்பாதை அமைக்கும் பணியை ‘கழுகு’ என பெயரிடப்பட்ட இயந்திரம் பணியை தொடங்கி உள்ளது. அதாவது, கலங்கரை விளக்கம் ரயல் நிலையத்தில் இருந்து மயிலாப்பூர் நோக்கி வெற்றிகரமாக சுரங்கம் தோண்டும் பணியை தொடங்கியுள்ளது. இந்த சுரங்கம் தோண்டும் இயந்திரம் அக்டோபர் 2026ம் ஆண்டு, போட் கிளப் நிலையத்தை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரிக்கும்
சென்னை மெரினா கடற்கரை இந்திய அளவில் மிகப்பெரிய கடற்கரையாக திகழ்கிறது. இங்கு வார இறுதி நாட்கள், பண்டிகை நாட்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் குடும்பத்துடன் வந்து செல்கின்றனர். குறிப்பாக, வெளி மாநிலத்தவர், வெளி நாட்டினர் உள்ளிட்டோர் அதிகளவில் வந்து செல்கின்றனர். இங்கு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்கள், பூங்காக்கள், குதிரை சவாரி, நீச்சல் குளம், கடைகள் உள்ளிட்டவை அமைந்துள்ளன. இந்நிலையில், இந்த மெட்ரோ ரயில் நிலையம் பயன்பாட்டிற்கு வந்தால், மெரினா கடற்கரைக்கு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

​​நுழைவு பகுதியில் தானியங்கி கதவு
மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறுகையில், ‘‘மெரினாவில் தற்போது காந்தி சிலைக்கு இரண்டு பக்கமும் 450 மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ பணிகள் நடக்கின்றன. இந்த ரயில் நிலையம் சுனாமியை தாங்கும் விதமாகவும், சுனாமி தடுப்பு நடவடிக்கைகள் கொண்ட மெட்ரோவாகவும் இருக்கும். குறிப்பாக சுனாமியின் போது கடல் மட்டம் உயரும் போது, ​​நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களை மூடக்கூடிய தானியங்கி வெள்ள தடுப்பு கதவுகள் இதில் அமைக்கப்பட உள்ளது.இதனால் சுனாமி வந்தால் உள்ளே இருக்கும் மெட்ரோ நீரில் மூழ்காது. சர்வதேச தரத்தில் இந்த மெட்ரோ கட்டப்படுகிறது.

The post மெரினா கலங்கரை விளக்கம் அருகே இந்தியாவில் முதன்முறையாக கடற்கரையில் அமைக்கப்படும் மெட்ரோ ரயில் நிலையம்: சுனாமியை தாங்கும் வகையில் வடிவமைக்கப்படுகிறது appeared first on Dinakaran.

Tags : India ,Station ,Marina Lighthouse ,Tsunami ,CHENNAI ,Marina Beach ,Dinakaran ,
× RELATED வெறுப்புணர்வை தூண்டும் வகையில்...