×

ஒருங்கிணைந்த இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: சென்னை மாவட்டத்தில் 39,01,167 வாக்காளர்கள்

* அதிகபட்சமாக வேளச்சேரி தொகுதியில் 3,08,462 பேர்
* குறைந்தபட்சமாக துறைமுகம் தொகுதியில் 1,72,624 பேர்

சென்னை: இந்திய தேர்தல் ஆணையம் சார்பில், 1.1.2024 அன்று தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு, வாக்காளர் பட்டியல்களில் பெயர்கள் சேர்த்தல், நீக்கம் செய்தல் மற்றும் வாக்காளர் பட்டியல்களில் உள்ள பதிவுகளில் திருத்தம் மேற்கொள்ளுதல் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து உரிய படிவங்கள் 27.10.2023 முதல் 9.12.2023 முடிய பெறப்பட்டன. அவ்வாறு பெறப்பட்ட படிவங்கள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலரால் நேரடி ஆய்விற்கு பின்னர் சட்டமன்ற தொகுதியினை சார்ந்த வாக்காளர் பதிவு அலுவலர்களால் படிவங்கள் ஏற்பு அல்லது நிராகரிப்பு குறித்து ஆணைகள் பிறப்பிக்கப்பட்டது. ஏற்பளிப்பு செய்யப்பட்ட படிவங்கள் அடிப்படையில் 2024ம் ஆண்டிற்கான துணைப் பட்டியல்கள் உடனான ஒருங்கிணைந்த இறுதி வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளன.

இந்த துணை பட்டியல்கள் உடனான ஒருங்கிணைந்த இறுதி வாக்காளர் பட்டியல், இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி, நேற்று வெளியிடப்பட்டது. சென்னை மாவட்டத்தில் அடங்கியுள்ள 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான ஒருங்கிணைந்த இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன், நேற்று ரிப்பன் மாளிகை அலுவலக கூட்டரங்கில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார்.
வாக்காளர் பட்டியல்கள் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் சென்னை மாநகராட்சி, உதவி ஆணையாளர் அலுவலகங்களிலும், வாக்குச்சாவடி மையங்களிலும் பொதுமக்கள் இதனை பார்வையிடலாம். மேலும், www.elections.tn.gov.in < http://www.elections.tn.gov.in > என்ற இணையதள முகவரியிலும் பார்த்துக் கொள்ளலாம். கடந்த 27.10.2023 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் சென்னை மாவட்டத்தினை சார்ந்த 16 சட்டமன்ற தொகுதிகளில் 19,01,911 ஆண் வாக்காளர்கள், 19,65,149 பெண் வாக்காளர்கள், 1,118 இதர வாக்காளர்கள் என மொத்தம் 38,68,178 வாக்காளர்கள் இருந்தனர்.

2024ம் ஆண்டு சிறப்பு சுருக்கமுறை திருத்தம் தொடர்பாக 69,079 பெயர் சேர்த்தல் மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது. அதில், 32,774 வாக்காளர்கள், 36,255 பெண் வாக்காளர்கள், 50 இதர வாக்காளர்கள் என மொத்தம் 69,079 படிவங்கள் பெறப்பட்டு, அதன்மீது உரிய ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதை தொடர்ந்து, துணை பட்டியல்களில் பெயர்கள் சேர்க்கப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை 68,823. இதில், ஆண் வாக்காளர்கள் 32,662 பேர், பெண் வாக்காளர்கள் 36,111 பேர், இதர வாக்காளர்கள் 50 பேர் என மொத்தம் 68,823 பேர் சேர்க்கப்பட்டனர். வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் கள ஆய்வில் கண்டறியப்பட்ட இடம் பெயர்ந்தோர், காலமானோர் மற்றும் வாக்காளர் பட்டியல்களில் ஒன்றுக்கு மேற்பட்ட பதிவுகளில் இடம்பெற்றோர் மற்றும் வாக்காளர் பட்டியல்களில் பெயர் நீக்கம் செய்ய கோரி வரப்பெற்ற படிவம்-7ன் எண்ணிக்கை 49,482 ஆகும்.

அவற்றில் வாக்காளர் பதிவு அலுவலர்களது விசாரணைக்கு பின்னர் வாக்காளர் பட்டியல்களிலிருந்து பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 35,834 ஆகும். மேலும், எந்த பெயர்களும் தகுதியின்மை அடிப்படையில் தன்னிச்சையாக நீக்கம் செய்யப்படவில்லை. மேலும், இவ்வாறு அனைத்து தொகுதிகளிலும் உள்ள வாக்காளர் பட்டியலிலிருந்து உரிய நடைமுறையை பின்பற்றி இறந்து போன, நிரந்தரமாக குடிபெயர்ந்தவர்கள் மற்றும் பலமுறை பட்டியலில் பதிவுகள் ஆகிய பெயர்கள் தொடர் திருத்தம் மற்றும் சிறப்பு சுருக்கத் திருத்த காலங்களில் ஆண் வாக்காளர்கள் 17,399 பேர், பெண் வாக்காளர்கள் 18,423 பேர், இதர வாக்காளர்கள் 12 பேர் என மொத்தம் 35,834 பேர் நீக்கம் செய்யப்பட்டனர். இந்த 35,834 பேரில், 469 இறந்தவர்கள், 25,291 நிரந்தரமாக குடிப்பெயர்ந்தவர்கள் மற்றும் 10,074 பலமுறை பட்டியலில் பதிவு செய்தவர்கள். தற்போது வெளியிடப்பட்டுள்ள இறுதி திருத்த பட்டியலில் வாக்காளர்களது எண்ணிக்கை, கடந்த 27.10.2023 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர்களது எண்ணிக்கையினை விட 32,989 அதிகம் என்றும், இந்த எண்ணிக்கை வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர்களை விட 0.85 சதவீதம் அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தில் பெயர்கள் சேர்க்கப்பட்ட வாக்காளர்களில் சிறப்பு சுருக்கத் திருத்தம் 2023 முதல் 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் எண்ணிக்கை 37,442. இந்த இறுதி வாக்காளர் பட்டியலில் ஆண் வாக்காளர்கள் 19,17,135 பேர், பெண் வாக்காளர்கள் 19,82,875 பேர், இதர வாக்காளர்கள் 1157 பேர் என மொத்தம் 39,01,167 வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் எண்ணிக்கை குறைந்தபட்சமாக துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் 1,72,624 வாக்காளர்களும், அதிகபட்சமாக வேளச்சேரி சட்டமன்ற தொகுதியில் 3,08,462 வாக்காளர்களும் உள்ளனர். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் (தேர்தல்) சுரேஷ் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post ஒருங்கிணைந்த இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: சென்னை மாவட்டத்தில் 39,01,167 வாக்காளர்கள் appeared first on Dinakaran.

Tags : Chennai district ,Port ,Chennai ,Election Commission of India ,
× RELATED பதற்றமான வாக்குச்சாவடிகளில்...