×

சாயல்குடியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் லஞ்சம் வாங்கிய பெண் அலுவலர், புரோக்கர் கைது

ராமநாதபுரம்: சாயல்குடியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் பத்திரம் வழங்க லஞ்சம் வாங்கிய பெண் அலுவலர், புரோக்கராக செயல்பட்ட டீக்கடைக்காரரை லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்றிரவு கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி ஒன்றியம், சிக்கல் அருகே கொத்தங்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயதேவி(31). இவர் தனது 2 பெண் குழந்தைகளுக்கு, முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்ட நிதிக்கான பத்திரத்தை பெறுவதற்கு, கடலாடிஊராட்சி ஒன்றிய முக்கிய சேவிகா (சமூக நலத்துறை அலுவலர்) சண்முக ராஜேஸ்வரியை அணுகியுள்ளார். சண்முக ராஜேஸ்வரி பத்திரத்தில் ஜெயதேவியிடம் கையெழுத்து பெற்று, மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்க ரூ. 2 ஆயிரம் பணம் கேட்டுள்ளார்.

ஜெயதேவி தான் கஷ்டப்படுவதாகவும், அவ்வளது பணம் தர முடியாது எனக்கூறியுள்ளார். ஆனால் ராஜேஸ்வரி பணம் கொடுத்தால் மட்டுமே அலுவலகத்தில் பத்திரம் ஒப்படைக்கப்படும் என கூறியுள்ளார். இதுகுறித்து ஜெயதேவி ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸில் புகார் அளித்தார். போலீஸாரின் அறிவுரைப்படி நேற்று ஜெயதேவி, சண்முக ராஜேஸ்வரியை கைபேசியில் தொடர்பு கொண்டபோது, பணத்தை சாயல்குடி பேருந்து நிலையம் அருகேயுள்ள டீக்கடை உரிமையாளரிடம் நேற்றிரவு கொடுக்கச் சொல்லியுள்ளார். அதன்படி ஜெயதேவி, டீக்கடை உரிமையாளர் கண்ணனிடம் லஞ்சப்பணம் ரூ. 1,500-ஐ கொடுத்த போது லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார் கையும், களவுமாக பிடித்தனர்.

மேலும் முக்கிய சேவிகா ராஜேஸ்வரியை சாயல்குடிக்கு வரவழைத்து பணம் கேட்டது குறித்து விசாரணை செய்தனர். அது உறுதியானதால் அலுவலர் சண்முக ராஜேஸ்வரி(58) மற்றும் புரோக்கராக செயல்பட்ட டீக்கடை உரிமையாளர் கண்ணன் (49) ஆகியோரை கைது செய்தனர். இதுகுறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சாயல்குடியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் லஞ்சம் வாங்கிய பெண் அலுவலர், புரோக்கர் கைது appeared first on Dinakaran.

Tags : Chayalgudi ,Ramanathapuram ,Sayalgudi ,Jayadevi ,Kothankulam ,Sikal, Kadladadi Union ,Ramanathapuram District.… ,Dinakaran ,
× RELATED பலாப்பழ சின்னத்திற்கு வாக்களித்து...