×

சட்ட விரோதமாக வெளிநாடுகளில் முதலீடு செய்த விவகாரம் ஓஷன் நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.450 கோடி சொத்துகள் பறிமுதல்: 5 நாள் சோதனையில் அமலாக்கத்துறை நடவடிக்கை

சென்னை: சட்ட விரோதமாக வெளிநாடுகளில் முதலீடு செய்த விவகாரத்தில் ஓஷன் நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.450 கோடி மதிப்பிலான சொத்துகள் மற்றும் கணக்கில் வராத ரூ.33 லட்சத்தை பறிமுதல் செய்து அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னை, கிண்டியை தலைமை இடமாக கொண்டு ஓஷன் இன்டிரியர் டெக்கரேசன் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் பிரபல தொழிலதிபர் பீட்டர் என்பவருக்கு சொந்தமானது. வெளிநாடுகளில் இருந்து பொருட்கள் இறக்குமதி செய்ததில் பலகோடி வரி ஏய்ப்பு ெசய்திருப்பதாக ஓஷன் நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இதை தொடர்ந்து வருமான வரித்துறையினர் இந்த நிறுவனத்துக்கு சொந்தமான இடங்கள் மற்றும் தொழிலதிபர் பீட்டர் வீட்டில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் வெளிநாடுகளில் இருந்து போலி நிறுவனம் மூலம் பொருட்களை இறக்குமதி செய்தது உள்ளிட்ட வகையில் ரூ.1000 கோடி மோசடி செய்ததற்கான ஆவணங்கள் சிக்கியது. இதையடுத்து, சட்ட விரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையினர், வருமான வரித்துறை பறிமுதல் செய்த ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை செய்தனர். அதில் பலகோடி ரூபாய் பினாமி பெயர்களில் நிறுவனங்கள் தொடங்கி முதலீடுகள் செய்தது தெரியவந்தது.

அதை தொடர்ந்து, அமலாக்கத் துறையினர் கடந்த 18ம் தேதி ஓஷன் நிறுவனத்திற்கு சொந்தமான கிண்டியில் உள்ள தலைமை அலுவலகம், கோட்டூர்புரம், ரஞ்சித் சாலையில் உள்ள நிறுவனத்தின் உரிமையாளர் பீட்டர் வீடு உள்ளிட்ட 7 இடங்களில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் உதவியுடன் சோதனை நடத்தினர். மேலும் 18ம் தேதி முதல் நேற்று வரை 5 நாட்கள் நடத்திய தொடர் சோதனையில் ஓஷன் நிறுவனத்தில் இருந்து கணக்கில் வராத ரூ.33 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் பல்வேறு நிறுவனங்களில் சட்ட விரோதமாக முதலீடுகள் செய்ததாக ரூ.450 கோடி மதிப்பிலான சொத்துகள் கண்டு பிடிக்கப்பட்டது.

தொடர்ந்து, அமலாக்கத் துறையினர் ஓஷன் நிறுவனம் மற்றும் அதன் உரிமையாளர் பீட்டர் மீது சட்ட விரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சோதனையில் கணக்கில் வராத ரூ.33 லட்சம் பணம், கணக்கில் வராத பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்த ரூ.450 கோடி மதிப்பிலான சொத்துகளை பறிமுதல் செய்தனர்.

The post சட்ட விரோதமாக வெளிநாடுகளில் முதலீடு செய்த விவகாரம் ஓஷன் நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.450 கோடி சொத்துகள் பறிமுதல்: 5 நாள் சோதனையில் அமலாக்கத்துறை நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Ocean ,CHENNAI ,Ocean Company ,Chennai, Guindy ,Dinakaran ,
× RELATED நாடாளுமன்ற தேர்தல் மாலத்தீவில் ஆளும்...