×
Saravana Stores

சென்னை காவல்துறையின் பயன்பாட்டிற்காக ரூ.6.50 கோடியில் 53 வாகனங்கள் முதல்வர் தொடங்கி வைத்தார்

சென்னை: சென்னை காவல்துறையின் பயன்பாட்டிற்காக ரூ.6 கோடியே 50 லட்சம் மதிப்பிலான 25 ஹூண்டாய் கிரெட்டா, 8 இன்னோவா கிரிஸ்டா மற்றும் 20 பொலிரோ ஜீப் ஆகிய வாகனங்களின் சேவைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமை செயலகத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: சென்னை காவல் துறையின் சேவையை மேம்படுத்துவதற்காகவும், சென்னை காவல் எல்லைக்குள் வசிக்கும் பொதுமக்களுக்கு விரைந்து சேவைகளை வழங்குவதற்காகவும் அரசு கடந்த இரண்டரை ஆண்டுகளில் ரூ.59.73 கோடி மதிப்பீட்டில் 283 நான்கு சக்கர மற்றும் இருசக்கர வாகனங்களை கொள்முதல் செய்து காவல்துறையின் பயன்பாட்டிற்காக வழங்கியுள்ளது.

பேரிடர் மேலாண்மை நிதியின் கீழ், அத்தியாவசிய தேடல் மற்றும் தேவைக்கான உபகரணங்களை கொள்முதல் செய்ய ரூ.74.62லட்சம், சைபர் செயலி மற்றும் சைபர் விழிப்புணர்வுக்கு ரூ.54 லட்சத்து 97 ஆயிரத்து 200, காவல் நிலையம், கட்டடங்கள், தங்குமிடம் மற்றும் குடியிருப்புக்கு ரூ.35.82 கோடி, போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும், உபகரணங்கள் கொள்முதல் மற்றும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் ரூ.44.38 கோடி வழங்கப்பட்டுள்ளது. 2023-24க்கான காவல்துறை மானியக் கோரிக்கையில், 283 நான்கு சக்கர வாகனங்கள் வாங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன் ஒரு பகுதியாக, சென்னை காவல் துறையின் பயன்பாட்டிற்காக ரூ.6 கோடியே 50 லட்சம் மதிப்பிலான மேம்படுத்தப்பட்ட நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய 25 ஹூண்டாய் கிரெட்டா, 8 இன்னோவா கிரிஸ்டா மற்றும் 20 பொலிரோ ஜீப் வாகனங்களின் சேவைகளை தமிழ்நாடு முதல்வர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதன்மூலம், சென்னை பெருநகர காவல் எல்லைக்குள் குற்றங்களை களையவும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும், சட்டம் ஒழுங்கை சிறந்த முறையில் பராமரிக்கவும், பொதுமக்களுக்கு, குறிப்பாக பெண்கள், குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்கிடவும் 25 வாகனங்கள் பயன்படுத்தப்படும்.

மேலும், இவ்வாகனங்களிலிருந்து சென்னை காவல் துறையின் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள், சட்டம் மற்றும் ஒழுங்கு, குற்றப்பிரிவு மற்றும் சிறப்புப் பிரிவு ஆய்வாளர்களின் பயன்பாட்டிற்காக மற்ற வாகனங்கள் வழங்கப்படும். நிகழ்ச்சியில், தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா, உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை செயலாளர் அமுதா, டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post சென்னை காவல்துறையின் பயன்பாட்டிற்காக ரூ.6.50 கோடியில் 53 வாகனங்கள் முதல்வர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Chennai Police ,CHENNAI ,M. K. Stalin ,Hyundai ,Jeep ,CM ,Dinakaran ,
× RELATED மதுரையில் கனமழை பாதிப்பு குறித்து துணை முதலமைச்சர் ஆலோசனை