×

புதுச்சேரியில் பிப்.1ம் தேதி புதுமனை புகுவிழா நடைபெற இருந்த நிலையில் சீட்டுக்கட்டுபோல் சரிந்து விழுந்த 3 மாடி புதிய வீடு: கதறி அழுத உரிமையாளர்

புதுச்சேரி: புதுச்சேரியில் பிப்.1ம் தேதி புதுமனை புகுவிழா நடைபெற இருந்த நிலையில், புதிதாக கட்டிய 3 மாடி வீடு இடிந்து சீட்டுக்கட்டுபோல் சரிந்து விழுந்ததால் உரிமையாளர் கதறி அழுதனர். புதுச்சேரி ஆட்டுப்பட்டி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சாவித்திரி (65). இவரது கணவர் இறந்த நிலையில் மகள் சித்ரா மற்றும் மருமகன் சுரேஷ் ஆகியோருடன் வசித்து வருகிறார். இவர்கள் அதே பகுதியில் அரசு இலவசமாக கொடுத்த பட்டா இடத்தில் ரூ.62 லட்சத்தில்

3 மாடிகள் கொண்ட குடியிருப்பை புதியதாக கட்டி வந்தனர். இதன் பணிகள் கடந்த மாதம் முழுமையாக முடிந்த நிலையில் வருகிற பிப்.1ம் தேதி வீட்டில் புதுமனை புகுவிழா நடத்த சாவித்திரி திட்டமிட்டிருந்தார். இதற்கிடையில் வீட்டின் பின்புறத்தில் செல்லும் உப்பனாறு வாய்காலுக்கு பக்கவாட்டு சுவர் கட்டும் பணி கடந்த 7 மாதங்களாக நடந்து வருகிறது. இதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு சாவித்திரி வீட்டின் பின்புறத்ததில் உள்ள வாய்க்காலில் ஆழமாக பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது அந்த புதிய வீடு லேசாக சாய்ந்து காணப்பட்டது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சாவித்திரி இதுதொடர்பாக வாய்கால் சுவர் கட்டும் ஒப்பந்ததாரரிடம் முறையிட்டார்.

இந்நிலையில் நேற்று வீடு மிக மோசமாக சாய்ந்ததால் பொதுப்பணித்துறை பொறியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர் ஆகியோர் வீட்டின் தரத்தை ஆய்வு செய்ய அங்கு வந்திருந்தனர். அப்போது வீடு திடீரென முற்றிலுமாக சரிந்து வாய்க்காலில் விழுந்தது. அப்போது இந்த வீட்டுடன் சேர்ந்து பக்கத்தில் இருந்த தேவி என்பவரின் ஓட்டுவீடும் சரிந்து வாய்க்காலில் விழுந்தது. இந்த விபத்தில் யாருக்கும் உயிர் சேதமோ காயங்களோ ஏற்படவில்லை. வீடு இடிந்து விழுந்ததால் உரிமையாளர் சாவித்திரி கதறி அழுதார். இதனை தொடர்ந்து அப்பகுதி மக்கள் திடீரென மறைமலை அடிகளார் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த உருளையன்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதால் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. பிறகு பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் வந்து இடிந்து விழுந்த வீட்டை பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். பிறகு நிவாரணம் வழங்குவது தொடர்பாக முதல்வரிடம் கலந்து ஆலோசிப்பதாக தெரிவித்தார்.

* அமைச்சர் விளக்கம்

அமைச்சர் நிருபர்களிடம் கூறுகையில், ‘புதிய வீடு தரமன்றி கட்டப்பட்டதால் சரிந்து விழுந்ததா? அல்லது வாய்காலுக்கு பள்ளம் எடுத்ததால் விழுந்ததா? என்பது அதிகாரிகள் ஆய்வு செய்தபிறகே தெரியவரும்’ என்றார்.

The post புதுச்சேரியில் பிப்.1ம் தேதி புதுமனை புகுவிழா நடைபெற இருந்த நிலையில் சீட்டுக்கட்டுபோல் சரிந்து விழுந்த 3 மாடி புதிய வீடு: கதறி அழுத உரிமையாளர் appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Savithiri ,Attupatti Ambedkar ,
× RELATED புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை