×

செட்டிநாடு பாரம்பரிய முறைப்படி டும்…டும்…காரைக்குடி பெண்ணை கரம் பிடித்த அமெரிக்க வாலிபர்

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி முத்துபட்டணத்தை சேர்ந்தவர் சிதம்பரம் பழனியப்பன், மீனாள் தம்பதியின் மகள் பிரியா. இவர் அமெரிக்காவில் ஹெல்த் இன்சூரன்ஸ் தொடர்பான மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். பிரியாவிற்கும், அமெரிக்காவைச் சேர்ந்த மைக்கேல், ஏஞ்சல் தம்பதியின் மகன் சாம் என்பவரும் டேட்டிங் ஆப் மூலம் பழக்கம் ஏற்பட்டு 6 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.  இருவீட்டார் சம்மதத்துடன் செட்டிநாடு பாரம்பரிய முறைப்படி சொந்த ஊரில் திருமணம் செய்யலாம் என பிரியா தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். சாம் குடும்பத்தினரும் இதற்கு ஒப்புதல் அளித்தவுடன், செட்டிநாடு நகரத்தார் பாரம்பரிய முறைப்படி முத்துபட்டணத்தில் உள்ள மணமகள் இல்லத்தில் நேற்று திருமணம் நடந்தது. திருமணத்திற்கு வந்திருந்த மணமகனின் பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் பாரம்பரியமான வேட்டி, சேலை அணிந்து பங்கேற்றனர்.

மணமகள் பிரியா கூறுகையில், ‘‘சாம் வாஷிங்டனில் வழக்கறிஞராக உள்ளார். நாங்கள் டேட்டிங் ஆப் மூலம் பேச துவங்கினோம். இருவரின் பெற்றோர்கள் சம்மதத்துடன் 2 வருடங்களுக்கு முன்னர் நிச்சயம் நடந்தது. காரைக்குடியில் பாரம்பரிய செட்டிநாடு முறைப்படி திருமணம் செய்ய வேண்டும் என்ற ஆசை தற்போது நிறைவேறி உள்ளது’’ என்றார். மணமகன் சாம் கூறுகையில், ‘‘மிகவும் சந்தோஷமாக உள்ளது. தமிழ்நாட்டின் கலாசாரம், பண்பாடு, உடைகள் எங்களை மிகவும் கவர்ந்துள்ளது’’ என்றார்.

The post செட்டிநாடு பாரம்பரிய முறைப்படி டும்…டும்…காரைக்குடி பெண்ணை கரம் பிடித்த அமெரிக்க வாலிபர் appeared first on Dinakaran.

Tags : Priya ,Chidambaram Palaniappan ,Meenal ,Muthupatnam, Karaikudi District, Sivagangai District ,America ,Michael ,Angel ,Sam ,
× RELATED ரத்னம் விமர்சனம்