×

ராமர் கோயில் கும்பாபிஷேகம் புதிய சகாப்தத்தின் தொடக்கம்: பிரதமர் மோடி பேச்சு

அயோத்தி: அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவைத் தொடர்ந்து, கோயில் வளாகத்தில் கூடியிருந்த சிறப்பு அழைப்பாளர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவது: இன்று, நீண்ட காத்திருப்புக்குப் பிறகு நம் ராமர் வந்திருக்கிறார். ராம் லல்லா இனி கொட்டகையில் வசிக்க வேண்டியதில்லை. அவர் அற்புதமான கோயிலில் தங்குவார். கருவறையில், கும்பாபிஷேகத்தின் போது நான் அனுபவித்த தெய்வீக உணர்வுகளை இன்னமும் என்னால் உணர முடிகிறது. இன்றைய நாள் சாதாரண தினம் அல்ல. புதிய சகாப்தத்தின் ஆரம்பம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகும் இந்த தேதியை மக்கள் நினைவில் வைத்திருப்பார்கள். அதற்கு நாம் சாட்சியாக இருப்பது ராமரின் ஆசீர்வாதம்.

இந்த தருணத்தில, இவ்வளவு காலமும் இந்த வேலையை செய்து முடிக்காமல் போனதற்காக நான் ராமரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அவர் நம்மை மன்னிப்பார் என நம்புகிறேன். அடிமைத்தனத்தில் இருந்து இன்று நாம் விடுதலை பெற்றுள்ளோம். ராமர் கோயில் கட்ட வழிவகை செய்த இந்திய நீதித்துறைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ராமர் கோயில் திறப்பை ஒட்டுமொத்த தேசமே தீபாவளி போன்று கொண்டாடுகிறது. ராமர் இந்தியாவின் நம்பிக்கை, இந்தியாவின் அடிப்படை, இந்தியாவின் உணர்வு, இந்தியாவின் பெருமை, இந்தியாவின் மகிமை, இந்தியாவின் செல்வாக்கு. அனைத்திலும் மேலானவர் ராமர். எனவே, ராமர் பிரதிஷ்டை, அடுத்த பல நூற்றாண்டுகள் மட்டுமல்ல, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும்.

1,000 ஆண்டுகளுக்குப் பிறகும், தேசத்தை கட்டியெழுப்பும் எங்கள் பணிகளை பல தலைமுறையினர் நினைவில் வைத்திருப்பார்கள். ராமர் கோயில் கட்டப்பட்டால் நாடு தீப்பற்றி எரியும் என்று சிலர் கவலை தெரிவித்த தருணங்கள் இருந்தன. அப்படிப்பட்டவர்களால், இந்தியாவின் சமூக உணர்வின் தூய்மையை புரிந்து கொள்ள முடியாது. ராமர் கோயிலின் கட்டுமானம் இந்திய சமூகத்தின் அமைதி, பொறுமை, பரஸ்பர நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையின் சின்னம். இந்த கோயில் கட்டுமானத்தால் எந்த நெருப்பும் ஏற்படவில்லை, மாறாக புதிய ஆற்றல் பிறந்துள்ளது. எனவே, எதிர்மறை எண்ணம் கொண்டவர்கள் மறுபரிசீலனை செய்ய நான் கேட்டுக்கொள்கிறேன்.

ராமர் நெருப்பு அல்ல, அவர் ஒரு ஆற்றல். சர்ச்சை அல்ல, அவர் ஒரு தீர்வு. ராமர் நமக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் சொந்தம். நிகழ்காலத்திற்கு மட்டுமல்ல, நித்தியமானவர். அதனால் இந்த மங்களகரமான தருணத்தில், அடுத்த 1000 ஆண்டுகளுக்கான வலிமையான, மகத்தான, தெய்வீகமான இந்தியாவுக்கான அடித்தளம் அமைக்க வேண்டும் என நாட்டு மக்கள் அனைவரும் உறுதி ஏற்போம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

* கழுகுப் பார்வையில் உச்சகட்ட பாதுகாப்பு

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவையொட்டி உச்ச கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கோயிலை சென்றடையும் பாதைகள் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். பாதுகாப்பு பணியில் தேசிய பாதுகாப்பு படையின் ஸ்னைபர்கள் 2 அணியினர், தீவிரவாத தடுப்பு படையைச் சேர்ந்த 6 அணி கமாண்டோக்கள், 15,000 உபி போலீசார் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். கோயிலை சுற்றி உள்ள பகுதிகளில் 10,000 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. அவற்றில் கோயிலை வந்தடையும் வழிப்பாதைகள் அனைத்திலும், 250 செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான உயர்ரக கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. ராமர் பாதை, தர்ம பகுதி, ஹமன்கார்கி ஆகிய மஞ்சள் மண்டலப் பகுதியில் முக அடையாளங்களை காட்டும் 319 சிறப்பு சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. மேலும், ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய டிரோன்களை கோயிலை சுற்றி பறக்க விட்டு கண்காணிக்கப்பட்டது. ஒட்டுமொத்த கோயில் பகுதிகளும் பாதுகாப்பு படையினரின் கழுகுப் பார்வையில் கண்காணிக்கப்பட்டன.

* நேரலையில் பார்த்த அமித்ஷா, ஜே.பி.நட்டா

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில், 7,000 சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்ற நிலையில், பெரும்பாலான ஒன்றிய அமைச்சர்கள், பாஜ முக்கிய தலைவர்கள் பல்வேறு கோயில்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நேரலையில் நிகழ்ச்சியை கண்டு தரிசித்தனர். பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, டெல்லி பாஜ தலைவர் விரேந்திர சச்தேவாவுடன் டெல்லி ஜான்டேவாலன் கோயிலில் நேரலையில் விழாவை பார்த்தனர். அதே போல ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஹர்தீப் சிங் பூரி உள்ளிட்ட ஒன்றிய அமைச்சர்கள் டெல்லியில் இருந்தபடி நிகழ்ச்சியை பார்த்தனர்.

* ‘ராம ராஜ்ஜியம் ஆரம்பம்’

பிராண பிரதிஷ்டை நிகழ்வுக்குப் பின்னர் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அளித்த பேட்டியில், ‘‘அயோத்தியில் குழந்தை ராமர் பிரதிஷ்டை செய்யப்பட்டதன் மூலம் இந்தியாவின் சுய பெருமை மீட்கப்பட்டுள்ளது. புதிய இந்தியாவின் அடையாளமாக மாறியுள்ளது. இது உலகம் முழுவதையும்ம் சோகத்திலிருந்து விடுபடச் செய்யும். ராம ராஜ்ஜியம் வருகிறது. இதில் நாட்டில் உள்ள அனைவரும் சர்ச்சைகளை தவிர்க்க வேண்டும்’’ என்றார். உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறுகையில், ‘‘ இந்த வரலாற்று தருணத்தில், அயோத்தி மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாடும் ராம மயமாகி இருக்கிறது. ராமர் அவதரித்த திரேதா யுகத்திற்குள் நாம் வந்துவிட்டது போன்ற உணர்வை இது ஏற்படுத்துகிறது. இன்று அயோத்தியின் தெருக்களில் துப்பாக்கிச் சூடு சத்தம் இல்லை. ஊரடங்கு உத்தரவு அமலில் இல்லை. மாறாக, தீப உற்சவமும் ராம உற்சவமும் இருக்கிறது. அயோத்தி தெருக்களில் ராம சங்கீர்த்தனம் ஒலிக்கிறது. இது ராம ராஜ்ஜியத்திற்கான அறிவிப்பு’’ என்றார்.

* ஆழமாக ஆராய்ந்து செய்த ஆபரணங்கள்

அயோத்தி ராமர் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள குழந்தை ராமருக்கு பனாரசி துணியால் நெய்யப்பட்ட மஞ்சள் நிற வேட்டியும், சிவப்பு நிற அங்கவஸ்திரமும் அணிவிக்கப்பட்டுள்ளது. இந்த அங்கவஸ்திரங்கள் தூய தங்க ஜரிகை நூலால் செய்யப்பட்டவை. அதில் வைஸ்வர்களின் முத்திரைகளான சங்கு, சக்கரம், தாமரை, மயில் ஆகியவை இடம் பெற்றுள்ளன. மேலும், குழந்தை ராமருக்கு அணிவிக்கப்பட்ட ஆபரணங்கள் அத்யாத்மா மற்றும் வால்மீகி ராமாயணம், ராமசரித்மனாஸ் மற்றும் ஆளவந்தார் ஸ்தோத்திரம் போன்ற இதிகாச நூல்களில் உள்ள ராமரின் வேதபூர்வ சிறப்புகளின்படி தெய்வீக ஆபரணங்கள் வடிவமைக்கப்பட்டிருப்பதாக கோயில் நிர்வாகம் கூறி உள்ளது.

* இமாச்சல் காங்கிரஸ் அமைச்சர் பங்கேற்பு

எதிர்க்கட்சிகள் புறக்கணித்த நிலையில், ராமர் கோயில் திறப்பு விழாவில், இமாச்சல பிரதேச மாநில அமைச்சரும், அம்மாநில காங்கிரஸ் தலைவர் பிரதிபா சிங்கின் மகனுமான விக்ரமாதித்யா சிங் நேற்று பங்கேற்றார். விழா அழைப்பிதழ் பெற்றதும் இவ்விழாவில் பங்கேற்பதாக கூறிய விக்ரமாதித்யா சிங், கட்சி மேலிடத்தின் புறக்கணிப்பு முடிவுக்கு பின் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார். எப்போது முடியுமோ அப்போது கோயிலுக்கு வருவேன் என கூறிய அவர் திடீரென விழாவில் பங்கேற்றார்.

The post ராமர் கோயில் கும்பாபிஷேகம் புதிய சகாப்தத்தின் தொடக்கம்: பிரதமர் மோடி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Ram ,Temple ,PM ,Modi ,Ayodhya ,Ayodhya Ram Temple Kumbabhishek ,Ram Lalla ,Ram temple Kumbabhishekam ,
× RELATED I.N.D.I.A. கூட்டணி ஆட்சிக்கு வந்தால்...